வங்கதேசத்துக்கு எதிராக சென்னையில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி 280 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முன்னிலை பெற்றுள்ளது. இந்த நிலையில் டெஸ்ட் போட்டிகளுக்கான அப்டேட் செய்யப்பட்ட புதிய தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. அதில் ரிஷப் பண்ட் மீண்டும் டாப் 10 பேட்ஸ்மேன்களுக்குள் பட்டியலுக்குள் நுழைந்து அற்புதமான கம்பேக் கொடுத்துள்ளார்.
காயத்திலிருந்து குணமடைந்த அவர் 634 நாட்கள் கழித்து வங்கதேச தொடரில் டெஸ்ட் கிரிக்கெட்டில் களமிறங்கினார். அந்த வாய்ப்பில் முதல் போட்டியில் 37 மற்றும் 109 ரன்கள் குவித்த ரிஷப் பண்ட் தன்னுடைய 6வது சதத்தை பதிவு செய்து இந்தியாவின் வெற்றியில் பங்காற்றினார். அத்துடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்த இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் என்ற தோனியின் சாதனையும் அவர் சமன் செய்து கம்பேக் கொடுத்தார்.
தரவரிசையிலும் கம்பேக்:
அதனால் தற்போது வெளியிடப்பட்டுள்ள ஐசிசி டாப் 10 பேட்ஸ்மேன்கள் பட்டியலுக்குள் நுழைந்துள்ள அவர் 731 புள்ளிகளுடன் 6வது இடத்தை பிடித்து அசத்தியுள்ளார். சொல்லப்போனால் சுமார் 2 வருடங்கள் விளையாடாததால் கடந்த ஐசிசி பட்டியலில் அவருடைய பெயர் டாப் 20 இடங்களில் கூட இல்லை. ஆனால் தற்போது சதமடித்து விட்ட இடத்திலிருந்து துவங்கியுள்ளதால் ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோரை முந்தியுள்ள ரிஷப் பண்ட் தரவரிசை பட்டியலிலும் மாஸ் கம்பேக் கொடுத்துள்ளார்.
முதல் வங்கதேச போட்டியில் சதமடித்து அசத்திய சுப்மன் கில் 701 புள்ளிகளுடன் 5 இடங்கள் முன்னேறி 14வது இடத்தை பிடித்துள்ளார். முதல் போட்டியில் 56 ரன்கள் குவித்த ஜெய்ஸ்வால் ஒரு இடம் முன்னேறி 751 புள்ளிகளுடன் 5வது இடத்தைப் பிடித்துள்ளார். ஆனால் முதல் போட்டியில் ரோஹித் மற்றும் விராட் கோலி ஆகியோர் அரை சதம் கூட அடிக்கவில்லை.
ஜொலிக்கும் அஸ்வின்:
அதனால் ரோஹித் சர்மா 5 இடங்கள் சரிந்து 10வது இடத்திற்கும் விராட் கோலி 5 இடங்கள் சரிந்து 12வது இடத்திற்கும் பின்தங்கியுள்ளனர். மறுபுறம் சென்னை போட்டியில் ஆல் ரவுண்டராக ஜடேஜா மற்றும் அஸ்வின் தொடர்ந்து உலகின் டாப் ஐசிசி 2 ஆல் ரவுண்டர்களாக ஜொலிக்கிறார்கள். அக்சர் பட்டேல் தொடர்ந்து 6வது இடத்தை பிடித்து இந்தியாவுக்கு பெருமை சேர்க்கிறார்.
இதையும் படிங்க: ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு கேப்டன் பதவியை வழங்கியது போல் வழங்கி ஆப்பு வைத்த பி.சி.சி.ஐ – என்ன நடந்தது?
அதே போல டாப் 10 பவுலர்களுக்கான தரவரிசையில் சென்னை டெஸ்ட் போட்டியில் அசத்திய அஸ்வின் தொடர்ந்து உலகின் நம்பர் ஒன் பவுலராக ஜொலித்து வருகிறார். பும்ரா 2, ஜடேஜா 6வது இடத்தை பிடித்துள்ளார்கள். அணிகள் தர வரிசையில் தொடர்ந்து ஆஸ்திரேலியா முதல் இடத்தில் உள்ள நிலையில் இந்தியா 2வது இடத்தில் இருக்கிறது.



