பெங்களூருவில் இந்தியா மற்றும் நியூசிலாந்து கிரிக்கெட் அணிகள் முதல் டெஸ்ட் நடைபெற்று வருகிறது. அக்டோபர் 16ஆம் தேதி துவங்கிய அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 46 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி மோசமான சாதனை படைத்தது. அதைத் தொடர்ந்து விளையாடிய நியூசிலாந்து டேவோன் கான்வே 91, ரவீந்திரா 134 ரன்கள் எடுத்த உதவியுடன் 402 ரன்கள் குவித்தது.
இந்தியாவுக்கு அதிகபட்சமாக ஜடேஜா மற்றும் குல்தீப் யாதவ் தலா மூன்று விக்கெட்டுகளை எடுத்தனர். அதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணிக்கு ஜெய்ஸ்வால் 35, கேப்டன் ரோஹித் சர்மா 52, விராட் கோலி 70 ரன்கள் குவித்து போராடி அவுட்டானார்கள். இருப்பினும் மிடில் ஆர்டரில் அசத்திய இளம் வீரர் சர்பராஸ் கான் நியூசிலாந்துக்கு சவாலாக மாறினார்.
கைகொடுத்த சர்பராஸ்:
அவருடன் முழங்காலில் சந்தித்த காயத்தையும் தாண்டி களமிறங்கிய ரிஷப் பண்ட் ஜோடி சேர்ந்து ரன்களை குவித்தார். அந்த வகையில் அட்டகாசமாக விளையாடி இந்த ஜோடியில் சர்பராஸ் கான் தன்னுடைய முதல் சதத்தை அடித்து சரிந்த இந்தியாவை தூக்கி நிறுத்தினார். மறுபுறம் தம்முடைய ஸ்டைலில் அதிரடியாக விளையாடிய ரிஷப் பண்ட் அரை சதத்தை அடித்து கை கொடுத்தார்.
அந்த வகையில் நேரம் செல்ல செல்ல நியூசிலாந்துக்கு மிகப்பெரிய சவாலாக மாறிய இந்த ஜோடி நான்காவது விக்கெட்டுக்கு 177 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து இந்தியாவை காப்பாற்றியது. அப்போது சர்பராஸ் கான் 18 பவுண்டரி 3 சிக்ஸருடன் 150 ரன்கள் குவித்து அவுட்டானார். அவருக்கு மைதானத்தில் இருந்த ரசிகர்களும் இந்திய வீரர்களும் எழுந்து நின்று பாராட்டினர்.
தோனி போல:
ஆனால் மறுபுறம் தொடர்ந்து அசத்திய ரிஷப் பண்ட் 90இல் இருந்த போது 107 மீட்டர் சிக்சர் அடித்து சதத்தை நெருங்கினார். அதனால் சதத்தை அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட அவர் துரதிஷ்டவசமாக 9 பவுண்டரி 5 சிக்ஸருடன் 99 (105) ரன்களில் இன்சைடு எட்ஜ் முறையில் போல்ட்டானார். அதனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் 12 வருடங்கள் கழித்து தோனிக்கு பின் 99 ரன்களில் அவுட்டான இந்திய கீப்பர் என்ற பரிதாப சாதனையும் அவர் படைத்தார்.
இதையும் படிங்க: பெங்களூருவில் கனெக்சன் இருக்கா? இதை விட சிறந்த செஞ்சுரி இருக்காது.. ரச்சின், சர்பராஸை பாராட்டிய சச்சின்
வரலாற்றில் முதலும் கடைசிமாக கடந்த 2012ஆம் ஆண்டு நாக்பூரில் இங்கிலாந்துக்கு எதிராக தோனி 99 ரன்களில் அவுட்டானார். ஒட்டுமொத்தமாக மெக்கல்லம், தோனி, பேர்ஸ்டோ ஆகியோருக்குப் பின் 99இல் அவுட்டான 4வது கீப்பராகவும் ரிஷப் பண்ட் பரிதாபத்துடன் வெளியேறினார். அடுத்து வந்த ராகுல் 12 ரன்களில் அவுட்டானதால் 4வது நாள் தேனீர் இடைவெளியில் 438-6 ரன்கள் எடுத்துள்ள இந்தியா 82 ரன்கள் மட்டுமே முன்னிலை பெற்று தோல்வியை தவிர்க்க போராடி வருகிறது.



