இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திர இளம் கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் கடந்த டிசம்பர் 30ஆம் தேதியன்று கார் விபத்துக்குள்ளாகி தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். கடைசியாக கடந்த மாதம் வங்கதேச மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் அசத்தலாக செயல்பட்டிருந்த அவர் அடுத்ததாக நடைபெற்ற இலங்கைத் தொடரில் சேர்க்கப்படவில்லை. அதற்கு அறிமுகமானது முதல் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் தடுமாறி வருவதால் கழற்றி விடப்பட்டார் என்று செய்திகள் வெளியாகின. இருப்பினும் ஏற்கனவே சந்தித்த லேசான காயத்திலிருந்து குணமடைவதற்காக ஜனவரி 3 முதல் 15 வரை பெங்களூருவில் இருக்கும் தேசிய கிரிக்கெட் அகாடமியில் ரிசப் பண்ட் முகாமிட்டிருப்பார் என்று மற்றொரு செய்திகள் வெளியானது.
அந்த நிலைமையில் வங்கதேசத்திலிருந்து திரும்பிய பின்பு டேராடூனுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த அவர் புத்தாண்டுக்காக தனது வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார். குறிப்பாக அதிகாலை 5.30 மணிக்கு சற்று வேகமாக சென்ற அவர் தூக்க கலக்கத்தை சந்தித்த போது கட்டுப்பாட்டை இழந்த கார் டிவைடரில் மோதியதால் விபத்துக்குள்ளானார். இருப்பினும் அந்த சமயத்தில் சாதுரியமாக செயல்பட்டு வெளியே வந்த அவரை அந்த வழியே வந்த ஹரியானா பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர் ஆகியோர் பொதுமக்கள் உதவியுடன் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் வெளியே வந்த ஒரு சிலர் நிமிடங்களுக்கு பின் அவரது கார் முற்றிலுமாக எரிந்தது.
முதல் ட்வீட்:
அந்த வகையில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய அவர் ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள மேக்ஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார். அவர் குணமடைய வேண்டும் என்று சச்சின் டெண்டுல்கர் முதல் ஏராளமான முன்னாள் இந்நாள் வீரர்களும் ரசிகர்களும் பிரார்த்தனை செய்தனர். அதன் பயனாக ஆபத்து கட்டத்தை தாண்டிய அவர் எலும்பு முறிவுகளை சந்திக்கவில்லை என்று செய்திகள் வெளியானது. அதனால் ரசிகர்கள் நிம்மதியடைந்த நிலையில் ரிஷப் பண்ட்டை பார்க்க சச்சின் டெண்டுல்கர் உட்பட எந்த விஐபியும் வர வேண்டாம் என்று டெல்லி வாரியம் கேட்டுக் கொண்டது..
அதனால் அவர் எந்தளவுக்கு குணமாகியுள்ளார் என்று ரசிகர்கள் தெரியாமல் இருந்து வரும் நிலையில் தற்போது நலமுடன் உள்ளதாக சிகிச்சை பெற்று வரும் ரிசப் பண்ட் விபத்துக்குப் பின் முதல் முறையாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இது பற்றி தனது ட்விட்டரில் அவர் கூறியுள்ளது பின்வருமாறு. “அனைத்து ஆதரவுக்கும் நல்வாழ்த்துக்கள் நான் பணிவாகவும் நன்றியுடன் இருக்கிறேன். இந்த நேரத்தில் எனது அறுவை சிகிச்சை வெற்றியடைந்ததை உங்களிடம் அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். காயத்திலிருந்து மீண்டெழுவதற்கான பாதையும் தொடங்கியுள்ளது”
“அந்த பயணத்தில் வரவிருக்கும் சவால்களுக்கு நான் தயாராக இருக்கிறேன். இந்த நேரங்களில் நம்ப முடியாத ஆதரவு கொடுத்த பிசிசிஐ, செயலாளர் ஜெய் ஷா மற்றும் அரசாங்க அதிகாரிகளுக்கு நன்றி தெரிவிக்கிறேன். அத்துடன் அன்பான வார்த்தைகள் மற்றும் ஊக்குவிப்பை கொடுத்த எனது ரசிகர்கள், அணியினர், மருத்துவர்கள் மற்றும் பிசியோக்கள் ஆகிய அனைவருக்கும் எனது இதயத்தின் அடியிலிருந்து நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். விரைவில் உங்கள் அனைவரையும் களத்தில் காண ஆவலுடன் காத்திருக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.
இதை பார்த்து உற்சாகமடைந்துள்ள ரசிகர்கள் உங்களை நேரில் பார்க்க முடியவில்லை என்றாலும் விரைவில் குணமடைந்து சீக்கிரம் இந்தியாவுக்காக விளையாட வாருங்கள் என்று நலம் விசாரித்து வாழ்த்துக்களை தெரிவிக்கிறார்கள். முன்னதாக வரும் பிப்ரவரி மாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெறும் பார்டர் – கவாஸ்கர் டெஸ்ட் தொடருக்காக அறிவிக்கப்பட்ட இந்திய அணியில் எதிர்பார்க்கப்பட்டது போலவே ரிசப் பண்ட் சேர்க்கப்படவில்லை.
என்னதான் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் தடுமாறினாலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் தோனியையும் மிஞ்சி செயல்பாடுகளை வெளிப்படுத்திய அவர் இல்லாதது இந்தியாவுக்கு பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது. அத்துடன் எலும்பு முறிவு போன்ற காயங்களை சந்திக்கவில்லை என்றாலும் அதிகப்படியான மேற்புற காயங்களை சந்தித்துள்ள ரிசப் பண்ட் அதிலிருந்து குணமடைவதற்கு குறைந்தது 6 மாதங்கள் முதல் அதிகபட்சமாக 18 மாதங்கள் தேவைப்படும் என்று செய்திகள் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: அப்டியே போய்டுவேன்னு நெனைக்காதிங்க, சென்னையில் மாஸ் கம்பேக் ரெடியா இருக்கு – விமர்சனங்களுக்கு ட்வீட்டரில் ஜடேஜா பதிலடி
அதனால் 2023 ஐபிஎல், டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் 50 ஓவர் உலகக் கோப்பை ஆகிய முக்கிய தொடர்களில் அவர் பங்கேற்க மாட்டார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் முடிந்தளவுக்கு விரைவில் கம்பேக் கொடுப்பேன் என்று ரிசப் பண்ட் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.



