2023 காலண்டர் வருடத்தில் ஜூன் மாதம் நடைபெறும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் அக்டோபர் மாதம் சொந்த மண்ணில் நடைபெறும் 50 ஓவர் உலக கோப்பையை வெல்லும் லட்சியத்துடன் களமிறங்கியுள்ள இந்திய கிரிக்கெட் அணி அதற்கான வேலைகளை தொடங்கியுள்ளது. குறிப்பாக ஜூன் மாதம் லண்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு தகுதி பெற பிப்ரவரி மாதம் சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெறும் பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடரை வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இந்தியா விளையாடுகிறது. அதற்காக முதலிரண்டு போட்டிகளில் களமிறங்கும் இந்திய அணி ரோகித் சர்மா தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதில் காயத்திலிருந்து குணமடைந்து விட்டதால் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட ரவீந்திர ஜடேஜா இடம் பெறவில்லை. கடந்த 10 வருடங்களுக்கு மேலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடி நிறைய வெற்றிகளில் பங்காற்றி வரும் அவர் 2019 உலக கோப்பைக்கு பின் மிகச்சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்தி தற்சமயத்தில் உலகின் நம்பர் ஒன் சுழல் பந்து வீச்சு ஆல் ரவுண்டராக ஜொலித்து வருகிறார். அந்த வரிசையில் கடைசியாக துபாயில் நடைபெற்ற 2022 ஆசிய கோப்பையில் விளையாடிய அவர் காயமடைந்து அடுத்ததாக ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பையிலும் பங்கேற்கவில்லை.
கம்பேக் கொடுப்பேன்:
அவர் இல்லாதது அந்த 2 தொடர்களிலும் இந்தியாவுக்கு தோல்வியை கொடுத்த நிலையில் காயத்துக்காக அறுவை சிகிச்சை செய்து கொண்ட ஜடேஜா அதன் பின் வழக்கம் போல பெங்களூருவில் இருக்கும் தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு சென்று குணமடைவதற்கான வேலைகளில் ஈடுபட்டார். ஆனால் அதில் முழுமையாக குணமடையாத அவர் அதற்கு முன்பாகவே குஜராத்தில் நடைபெற்ற தேர்தலில் தமது மனைவிக்காக அரசியல் பிரச்சாரத்தில் ஈடுபட்டது ரசிகர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியது.
அதனால் அதிருப்தியடைந்த பிசிசிஐயும் கடந்த 3 மாதங்களுக்கு மேலாக எந்த விதமான உள்ளூர் கிரிக்கெட்டிலும் விளையாடாமல் நேரடியாக இந்திய அணிக்கு விளையாட முடியாது என்று ஜடேஜாவிடம் கரராக தெரிவித்து விட்டது. அத்துடன் தற்சமயத்தில் நல்ல உடல் தகுதியுடன் நல்ல பார்மில் இருக்கிறேன் என்பதை நிரூபிக்க நடைபெற்று வரும் ரஞ்சிக்கோப்பையில் குறைந்தது ஒரு போட்டியில் விளையாடி விட்டு வருமாறும் அவரிடம் பிசிசிஐ தெரிவித்து விட்டதாக செய்திகள் வெளியானது.
தற்போது அதை உறுதிப்படுத்தும் வகையில் வரும் ஜனவரி 24ஆம் தேதியன்று சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் தமிழகத்துக்கு எதிரான ரஞ்சிக் கோப்பை போட்டியில் தன்னுடைய மாநில அணியான சௌராஷ்டிரா அணிக்காக ரவீந்திர ஜடேஜா களமிறங்க உள்ளார். குறிப்பாக ஏற்கனவே பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடருக்காக அறிவிக்கப்பட்டுள்ள இந்திய அணியில் காயத்தை பொறுத்து ரவீந்திர ஜடேஜா சேர்க்கப்படுவார் என்று பிசிசிஐ குறிப்பிட்டிருந்தது.
அதனால் தமிழகத்துக்கு எதிரான அந்த போட்டியில் களமிறங்கி நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தும் பட்சத்தில் நேரடியாக பிப்ரவரி 9ஆம் தேதியன்று நாக்பூரில் துவங்கும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் களமிறங்குவதற்கான வாய்ப்பு ரவீந்திர ஜடேஜாவை தேடி வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அதை தம்மால் நிச்சயம் செய்ய முடியும் என்பதை ரவீந்திர ஜடேஜா ட்விட்டரில் மறைமுகமாக நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
குறிப்பாக தன்னுடைய டெஸ்ட் ஜெர்சியின் பின் புறத்தை புகைப்படம் எடுத்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர் “உன்னை மிகவும் மிஸ் செய்தேன். ஆனால் விரைவில் அணிந்து கொள்வேன்” என்ற தலைப்பையும் பதிவிட்டுள்ளார். அந்த வகையில் பின்னடைவை சந்தித்தாலும் அப்படியே போய் விடாமல் நிச்சயம் மீண்டும் கம்பேக் கொடுப்பேன் என்று அவர் உறுதியுடன் தெரிவித்துள்ளது இந்திய ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது. ஏனெனில் என்ன தான் அக்சர் படேல் நல்ல பார்மில் இருந்தாலும் அவரை விட தரத்திலும் அனுபவத்திலும் ரவிந்திர ஜடேஜா சிறந்தவர்.
இதையும் படிங்க: வீடியோ : என்னோட வெற்றிக்கு காரணமே இந்த 3 பேர் தான் – பாராட்டிய கிங் கோலி, நெகிழ்ந்த துணை பயிற்சியாளர்கள்
குறிப்பாக அவரை விட ஜடேஜா நிறைய சதங்களையும் ரன்களையும் அடித்து பெரிய அழுத்தமான போட்டிகளில் அசத்தும் திறமையை ஏற்கனவே நிரூபித்துள்ளார். அத்துடன் சொந்த மண்ணில் நடைபெறும் டெஸ்ட் தொடரில் கடந்த 10 வருடங்களாக அஷ்வின் – ஜடேஜா சுழல் கூட்டணி தான் எதிரணிக்கு சவாலை கொடுத்து இந்தியாவுக்கு வெற்றியை பெற்றுக் கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.



