
அண்மையில் இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த ஆண்டர்சன் டெண்டுல்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடியிருந்த இந்திய அணியானது அடுத்ததாக ஆசிய கோப்பை தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. எதிர்வரும் செப்டம்பர் 9-ஆம் தேதி முதல் செப்டம்பர் 28-ஆம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் 2025 ஆம் ஆண்டிற்கான ஆசிய கோப்பை தொடரானது நடைபெறவுள்ளது.
எதிர்வரும் 2026 டி20 உலக கோப்பை தொடரை கருத்தில் கொண்டு இம்முறை ஆசிய கோப்பை தொடரானது 20 ஓவர் போட்டிகளாக நடைபெற இருப்பதினால் சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணியே இந்த தொடரில் பங்கேற்று விளையாடும். அதனால் இந்தத் தொடருக்கான இந்திய அணியில் இடம் பெறப்போகும் வீரர்கள் குறித்த எதிர்பார்ப்பும் அனைவரது மத்தியில் அதிகரித்துள்ளது.
ஏற்கனவே இந்திய டி20 அணி முற்றிலும் புதிய வீரர்களால் கட்டமைக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வரும் வேளையில் அந்த அணியில் முன்னணி வீரர்களும் இணைய வாய்ப்புள்ளதாக பேசப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பேட்ஸ்மேனாகவும், கேப்டனாகவும் அசத்திய சுப்மன் கில் மற்றும் துவக்க வீரராக மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்த ஜெய்ஸ்வால் ஆகிய இருவரும் மீண்டும் டி20 போட்டிகளுக்கு திரும்ப வாய்ப்புள்ளதாக பேசப்பட்டு வருகிறது.
ஆனால் தற்போதைய இந்திய டி20 அணியில் அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன், திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ், ஷிவம் துபே என பேட்டிங் ஆர்டர் மிக பலமாக இருப்பதால் கூடுதலாக வீரர்களை சேர்க்க முடியாது என்று கூறப்படுகிறது. ஒருவேளை சுப்மன் கில் மீண்டும் டி20 அணிக்கு கம்பேக் கொடுத்தால் நிச்சயம் ரிங்கு சிங்கின் இடத்திற்கு தான் ஆபத்து என்ற தகவல் வெளியாகியுள்ளது.
ஏனெனில் சுப்மன் கில் அணியில் இடம்பெறும் பட்சத்தில் பினிஷர் ரோலில் இருக்கும் ரிங்கு சிங் வெளியேற்றப்படுவார். டாப் ஆர்டரில் சுப்மன் கில் துவக்க வீரராக அபிஷேக்சர்மாவுடன் களமிறங்கினால் சஞ்சு சாம்சன் ஐந்தாவது இடத்திற்கு தள்ளப்படுவார். பின்னர் ஆறாவது இடத்தில் ஹார்டிக் பாண்டியாவும், ஏழாவது இடத்தில் அக்சர் பட்டேலும் இருப்பதினால் பின்வரிசை பேட்டிங்கும் பலமாகும்.
இதையும் படிங்க : இந்திய ரூட்டை கையிலெடுத்த பாகிஸ்தான்.. ஆசிய கோப்பை அணி வெளியீடு.. பாபர், ரிஸ்வான் கேரியர் முடிகிறதா?
எனவே பினிஷர் ரோலில் மட்டுமே விளையாடி வரும் ரிங்கு சிங் அணியில் இருந்து வெளியேற்றப்பட அதிக வாய்ப்புள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் ஐபிஎல் போட்டிகளில் தொடர்ச்சியாக 5 சிக்ஸர்களை அடித்து அசத்தி இந்திய டி20 வாய்ப்பினை பெற்ற ரிங்கு சிங் 2023 ஆம் ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகமாகி இதுவரை 33 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.