
விஜய் ஹசாரே கோப்பை 2025 உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் டிசம்பர் 26ஆம் தேதி ராஜ்கோட் மைதானத்தில் நடைபெற்ற எலைட் குரூப் பி பிரிவின் போட்டி நடைபெற்றது. அதில் சண்டிகர் மற்றும் உத்தரப்பிரதேச அணிகள் மோதின. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற சண்டிகர் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.
அதைத்தொடர்ந்து களமிறங்கிய உத்திரபிரதேசத்துக்கு கோஸ்வாமி 1 ரன்னில் அவுட்டானார். மற்றொரு துவக்க வீரர் ஆரியான் ஜுயல் நிதானம் கலந்த அதிரடியை வெளிப்படுத்தினார். அவருடன் இணைந்து விளையாடிய துருவ் ஜூரேல் 2வது விக்கெட்டுக்கு 96 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அரை சதமடித்து 67 (57) ரன்கள் குவித்து பெவிலியன் திரும்பினார்.
அடுத்து வந்த சமீர் ரிஸ்வி நிதானமாக விளையாடி 32 (46) ரன்கள் குவித்து அவுட்டானார். மறுபுறம் தொடர்ந்து அசத்திய ஆரியான் சதமடித்து உத்தரப்பிரதேசத்தை வலுப்படுத்தினார். அடுத்ததாக வந்த கேப்டன் ரிங்கு சிங்குடன் ஜோடி சேர்ந்து 4வது விக்கெட்டுக்கு 134 ரன்கள் பார்ட்னர்ஷிப் அனைத்து அசத்திய ஆரியன் 7 பவுண்டரி 8 சிக்ஸருடன் 134 ரன்கள் குவித்து விட்டனர்.
அவருக்குப் பின் அதிரடியாக விளையாடிய ரிங்கு சிங் அரை சதமடித்து அசத்தினார். நேரம் செல்ல செல்ல சண்டிகர் பவுலர்களை அதிரடியாக எதிர்கொண்ட அவர் டெத் ஓவர்களில் டி20 போல விளையாடி சதமடித்தார். இறுதியில் கடைசி வரை அவுட்டாகாமல் சிறப்பாக விளையாடிய ரிங்கு 11 பவுண்டரில் 4 சிக்சருடன் 106* (60) ரன்களை 176.67 ஸ்ட்ரைக் ரேட்டில் குவித்து ஃபினிஷிங் செய்தார்.
ஐபிஎல் தொடரில் குஜராத்துக்கு எதிராக 2023 சீசனில் கடைசி ஓவரில் தொடர்ச்சியாக 5 சிக்சர்கள் விளாசிய அவர் கொல்கத்தாவுக்கு நம்ப முடியாத வெற்றியைப் பெற்றுக் கொடுத்தார். அதனால் இந்தியாவுக்காக அறிமுகமான அவர் தோனிக்கு பின் நல்ல ஃபினிஷர் கிடைத்து விட்டதாக ரசிகர்கள் மகிழும் அளவுக்கு சிறப்பாக விளையாடினார். இதுவரை 35 சர்வதேச டி20 போட்டிகளில் 550 ரன்களை 161.77 ஸ்ட்ரைக் ரேட்டில் குவித்துள்ள ரிங்கு 2024, 2025 ஐபிஎல் தொடர்களில் நல்ல ஃபார்மில் விளையாடவில்லை.
இதையும் படிங்க: காயமடைந்த ஷ்ரேயாஸ் ஐயர் எப்போது இந்திய அணிக்கு திரும்புகிறார்? – வெளியான லேட்டஸ்ட் தகவல்
அதனால் இந்திய அணியில் வாய்ப்புகளை இழந்த அவர் 2026 டி20 உலகக் கோப்பையில் திறமையை அடிப்படையாக வைத்து கடைசி நேரத்தில் தேர்வு செய்யப்பட்டார். அந்த சூழ்நிலையில் இப்போட்டியில் அதிரடியாக சதமடித்த ரிங்கு சரியான நேரத்தில் ஃபார்முக்கு திரும்பியுள்ளார். அவருடைய ஆட்டத்தால் 50 ஓவரில் 367/4 ரன்களை குவித்த உத்தரப்பிரதேசம் அடுத்ததாக விளையாடிய சண்டிகரை 29.3 ஓவரில் 140 ரன்களுக்கு ஆல் அவுட்டாக்கியது. அதனால் 227 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றி பெற்ற உத்தரப்பிரதேசத்திற்கு அதிகபட்சமாக ஜீசஸ் அன்சாரி 4 விக்கெட்டுகளை சாய்த்தார்.