இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரும், துணை கேப்டனுமான ஷ்ரேயாஸ் ஐயர் ஆஸ்திரேலியா நாட்டில் நடைபெற்ற ஒருநாள் தொடரின் போது கேட்ச் பிடிக்கையில் காயமடைந்தார். அதன் காரணமாக இந்திய அணியில் இருந்து வெளியேறிய அவருக்கு பிசிசிஐ தொடர் சிகிச்சைகளை வழங்கி வந்தது. அந்த வகையில் கடந்த சில மாதங்களாகவே தீவிர சிகிச்சை பெற்று வந்த ஷ்ரேயாஸ் ஐயர் எப்போது மீண்டும் இந்திய அணிக்கு திரும்புவார்? என்கிற கேள்வி பலரது மத்தியிலும் இருந்து வருகிறது.
ஷ்ரேயாஸ் ஐயர் இந்திய அணிக்கு எப்போது திரும்புவார்? :
இந்நிலையில் வெகு விரைவில் ஷ்ரேயாஸ் ஐயர் இந்திய அணிக்கு கம்பேக் கொடுக்க காத்திருக்கிறார் என்றும் குறிப்பாக நியூசிலாந்து தொடருக்கு முன்னதாக அவர் இந்திய அணிக்கு திரும்பலாம் என்ற தகவலும் வெளியாகி பலரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.
ஏற்கனவே பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி மற்றும் சிகிச்சையை மேற்கொண்டு வந்த ஷ்ரேயாஸ் ஐயர் தற்போது மெல்ல மெல்ல நெட் பிராக்டீஸுக்கு திரும்பியுள்ளார். இதன் காரணமாக இன்னும் சில நாட்களில் அவர் விஜய் ஹசாரே தொடரில் விளையாடக்கூட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
அதோடு தேசிய கிரிக்கெட் அகாடமி அவரது உடற்தகுதியை பரிசோதித்து இறுதி அறிக்கையை வெளியிட்ட பின்னர் அவர் நிச்சயம் நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரிலும் விளையாட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்திய ஒருநாள் அணியை பொறுத்தவரை நான்காவது இடத்தில் மிக முக்கியமாக வீரராக பார்க்கப்படும் அவர் நியூசிலாந்து தொடருக்கான இந்திய அணியுடன் இணைந்து விளையாடுவதற்காக தற்போது தீவிரமாக தயாராகி வருகிறார் என்றும் கூறப்படுகிறது.
இந்திய அணிக்காக டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் அவர் விளையாடவில்லை என்றாலும் ஒருநாள் போட்டிகளில் நட்சத்திர வீரராகவும், துணை கேப்டனாகவும் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது ஜனவரி 11-ஆம் தேதி துவங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : சுப்மன் கில்லும் இல்லை, ஹார்டிக் பாண்டியாவும் இல்லை, அடுத்த டி20 கேப்டன் இவர்தான் – விவரம் இதோ
இந்திய அணிக்காக 2017-ஆம் ஆண்டு சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அறிமுகமான ஷ்ரேயாஸ் ஐயர் இதுவரை 73 போட்டிகளில் விளையாடி 5 சதம் மற்றும் 23 அரைசதம் என 2917 ரன்களை குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.



