ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் 2 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வென்றது. அதனால் 1 – 0* (5) என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்ற இந்தியா 2023 உலகக் கோப்பை ஃபைனலில் ஆஸ்திரேலியாவிடம் சந்தித்த தோல்விக்கு ஆறுதல் வெற்றிகளையும் பதிலடியும் கொடுக்க துவங்கியுள்ளது.
விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா ஜோஸ் இங்லீஷ் 110 ரன்கள் எடுத்த உதவியுடன் 209 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. அதை துரத்திய இந்தியாவுக்கு கேப்டன் சூர்யகுமார் யாதவ் 80, இஷான் கிசான் 58 ரன்கள் வெற்றியை உறுதி செய்தது.
தோனியின் அட்வைஸ்:
ஆனாலும் கடைசி ஓவரில் அடுத்தடுத்து 3 விக்கெட்டுகளை இழந்த இந்தியாவுக்கு கடைசி பந்தில் 1 ரன் தேவைப்பட்டதால் போட்டியில் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது எவ்விதமான அழுத்தமும் இல்லாமல் சீன் அபோட் வீசிய கடைசி பந்தில் அசால்டாக சிக்சர் அடித்த ரிங்கு சிங் 22* (14) ரன்கள் விளாசி இந்தியாவுக்கு சிறப்பான வெற்றியை பெற்றுக் கொடுத்தார்.
இந்நிலையில் ஐபிஎல் தொடரில் சந்தித்த போது கடைசி ஓவரில் பதறாமல் கூலாக பேட்டிங் செய்யுமாறு தோனி கொடுத்த ஆலோசனை இப்போட்டியில் சிறப்பாக செயல்படுவதற்கு உதவியாக ரிங்கு சிங் கூறியுள்ளார். இது பற்றி அவர் போட்டியில் முடிவில் பேசியது பின்வருமாறு. “ஒருமுறை மஹி பாயிடம் பேசிய நான் கடைசி ஓவரில் வெற்றிகரமாக சேசிங் செய்வதற்கு எந்த மாதிரியான எண்ணங்களை செயல்படுத்த வேண்டும் என்று கேட்டேன்”
“அதற்கு முடிந்தளவுக்கு பதறாமல் அமைதியாக இருந்து பந்தை நேராக அடிப்பதே அதற்கான சாவி என்று அவர் என்னிடம் தெரிவித்தார். இன்று அவருடைய ஆலோசனையை பின்பற்றிய நான் கடைசி வரை அமைதியாக இருந்தேன். எந்த ரியாக்ஷனும் கொடுக்கவில்லை. அது எனக்கு உதவியாக இருந்தது” என்று கூறினார்.
இதையும் படிங்க: முதல் டி20யில் ஃபினிஷிங் செய்ய.. தோனி கொடுத்த அட்வைஸ் ஹெல்ப் பண்ணுச்சு.. ரிங்கு சிங் ஓப்பன்டாக்
முன்னதாக இந்த வருட ஐபிஎல் தொடரில் குஜராத்துக்கு எதிராக கடைசி ஓவரில் 5 சிக்ஸர்கள் அடித்து அசாத்தியமான வெற்றியை பெற்றுக் கொடுத்த அவர் இந்தியாவுக்காகவும் அறிமுகமாகி அயர்லாந்து மற்றும் ஆசிய விளையாட்டு போட்டிகளில் கடைசி நேரத்தில் அதிரடியாக விளையாடி வெற்றிகளில் பங்காற்றினார். அந்த வகையில் வருங்காலங்களில் தோனி போல இந்திய அணிக்கு மிகச் சிறந்த ஃபினிஷராக ரிங்கு செயல்படுவார் என்று ரசிகர்கள் கொண்டாட தொடங்கியுள்ளனர். இதை தொடர்ந்து இத்தொடரின் 2வது போட்டி வரும் நவம்பர் 26ஆம் தேதி கேரளாவில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.



