ரிங்கு நொறுக்கிய கண்ணாடி.. ஒரு வருடமாகியும் மாற்றாத காரணத்தை பகிர்ந்த தெ.ஆ மைதான நிர்வாகி

Rinku Singh
- Advertisement -

இந்திய அணியின் இளம் வீரர் ரிங்கு சிங் நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்து வருகிறார். ஐபிஎல் தொடரில் ஒரே ஓவரில் 5 சிக்சர்கள் அடித்து அட்டகாசம் செய்த அவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பில் டி20 கிரிக்கெட்டில் இதுவரை கிடைத்த வாய்ப்புகளில் அசத்தியுள்ள ரிங்கு இந்திய அணியின் வெற்றிகளில் பங்காற்றி வருகிறார்.

அதனால் தோனிக்கு பின் சிறந்த ஃபினிஷர் கிடைத்துள்ளதாக ரசிகர்கள் அவரை பாராட்டி வருகிறார்கள். முன்னதாக 2023 டிசம்பர் மாதம் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக செயின்ட் ஜார்ஜ் பார்க் கிரிக்கெட் மைதானத்தில் ஒரு டி20 போட்டியில் இந்தியா விளையாடியது. அந்தப் போட்டியில் அதிரடியாக விளையாடிய ரிங்கு 68* (39) ரன்கள் விளாசி இந்தியாவின் வெற்றியில் முக்கிய பங்காற்றினார்.

- Advertisement -

நொறுங்கிய கண்ணாடி:

அந்த ஆட்டத்தில் அவர் நேராக அடித்த ஒரு சிக்சர் மைதானத்தின் பெவிலியன் பகுதியில் இருந்த கண்ணாடியை நொறுக்கியது. அதை சிறந்த ஷாட் என்று தென்னாப்பிரிக்க ஜாம்பவான் டேல் ஸ்டைன் பாராட்டியிருந்தார். அதே சமயம் கண்ணாடியை உடைத்ததற்காக போட்டியின் முடிவில் ரிங்கு மன்னிப்பு கேட்டிருந்தார்.

ஆனால் அப்போட்டி முடிந்து ஒரு வருடத்திற்கு மேல் ஆகியும் இன்னும் அந்த கண்ணாடி மாற்றப்படாமல் இருக்கிறது. இந்நிலையில் அந்த கண்ணாடி மிகவும் உயரத்தில் இருப்பதால் இன்னும் மாற்றாமல் இருப்பதாக மைதான பராமரிப்பாளர் கூறியுள்ளார். அதை மாற்றுவதற்கு கிரேன் இருந்தால் மட்டுமே முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

ஆட்டோகிராப் போடலாம்:

மேலும் இந்திய பெருங்கடலுக்கு அருகே மைதானம் இருப்பதால் உப்பு காற்றால் தூண்கள் அரிப்பு ஏற்படுவதாகவும் அவர் கூறியுள்ளார். எனவே அதை பராமரிப்பதற்கு தான் தாங்கள் கவனத்தை செலுத்துவதாகவும் மைதான பராமரிப்பாளர் தெரிவித்துள்ளார். எனவே கண்ணாடியை மாற்றுவதற்கான நேரம் வரும் போது மாற்றப்படும் என்று அவர் கூறியுள்ளார்.

ஆனால் தற்போதைய நிலையில் அதை மாற்றப் போவதில்லை என்று தெரிவிக்கும் அவர் அடுத்த முறை ரிங்கு சிங் தங்கள் மைதானத்திற்கு வந்தால் அந்தக் கண்ணாடியில் ஆட்டோகிராப் போடலாம் என்று நகைச்சுவையுடன் கூறியுள்ளார். அது போக கடந்த ஆகஸ்ட் 14 அன்று மைதானத்தை சூறாவளி தாக்கியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அதை சரி செய்யவே 400000 ரென்ட்ஸ் பணம் செலுத்த வேண்டியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: சேப்பாக்கத்தில் நடைபெறயிருக்கும் டி20 போட்டி.. டிக்கெட் விலை மற்றும் தேதி அறிவிப்பு – விவரம் இதோ

அதன் காரணமாக கண்ணாடியை மாற்றும் வேலை தற்போது நடைபெறாது என்றும் அவர் கூறியுள்ளார். அந்த வகையில் அடுத்த முறை தென்னாப்பிரிக்காவுக்கு இந்திய அணி செல்லும் போது இம்மைதானத்தில் போட்டி நடைபெறும். அப்போது ரிங்கு சிங் அந்த கண்ணாடியில் ஆட்டோகிராப் போடும் வாய்ப்பைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement