இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்த விராட் கோலி அந்தப் பதவிகளில் இருந்து படிப்படியாக விலகி தற்போது மீண்டும் சாதாரண வீரராக விளையாட துவங்கியுள்ளார். ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் அவரின் கேப்டன்சிப் பல விமர்சனங்களை சந்தித்ததால் முதலில் டி20 கேப்டன் பதவியில் இருந்து விலகிய அவரை ஒருநாள் கேப்டன் பதவியிலிருந்து பிசிசிஐ நீக்கியது. இதன்காரணமாக பி.சி.சி.ஐ மற்றும் விராட் கோலி இடையையே பிரச்சனை இருப்பதாகவும் பேசப்பட்டது.

அதன்பின் எந்த ஒரு கேப்டன் பதவியும் வேண்டாம் என்ற வகையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் வெற்றிகரமான கேப்டனாக இருந்த போதிலும் கடந்த மாதம் டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்தும் விலகுவதாக அறிவித்த அவர் அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கினார். ஏனெனில் அவர் பொறுப்பேற்ற போது 7-வது இடத்தில் இருந்த இந்தியாவை கேப்டனாக பல அதிரடி மாற்றங்களை செய்து தொடர்ந்து 5 வருடங்களாக உலகின் நம்பர் ஒன் டெஸ்ட் அணியாக வலம் வர வைத்தார்.
சர்ச்சையான கேப்டன்:
அத்துடன் சொந்த மண்ணில் மட்டும் வெற்றிபெறும் அணியாக இருந்த இந்தியாவை உலகின் எந்த ஒரு கடினமான இடத்திலும் வெற்றி பெறும் அணியாக மாற்றிய பெருமை அவரையே சாரும். குறிப்பாக 70 ஆண்டுகளில் வரலாற்றிலேயே முதல் முறையாக ஆஸ்திரேலியாவில் அவர் தலைமையில் ஒரு டெஸ்ட் தொடரை வென்று இந்தியா சரித்திரம் படைத்தது.

மொத்தத்தில் இந்திய கிரிக்கெட்டில் ஒரு வெற்றிகரமான கேப்டனாக விராட் கோலி இருந்தபோதிலும் சர்ச்சைகளில் சிக்காமல் இருந்ததே இல்லை. குறிப்பாக இந்தியாவின் 3 வகையான கிரிக்கெட்டுக்கும் கேப்டனாக பொறுப்பேற்ற முதல் வருடமே அப்போதைய பயிற்சியாளராக இருந்த ஜாம்பவான் அனில் கும்ப்ளேவுக்கும் அவருக்கும் மறைமுகமான சண்டை ஏற்ப்பட்டது.
அனில் கும்ப்ளே – விராட் கோலி :
கடந்த 2017ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடந்த சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் பரம எதிரியான பாகிஸ்தானிடம் விராட் கோலி தலைமையிலான இந்தியா படுதோல்வி அடைந்தது. அந்த தொடர் முடிந்த கையோடு அப்போதைய பயிற்சியாளராக இருந்த ஜாம்பவான் அனில் கும்ப்ளே “விராட் கோலி உடனான புரிதல் மற்றும் உறவு சரிவர அமையவில்லை” எனக்கூறி தனது பதவியை ராஜினாமா செய்தார். அந்த சமயத்தில் பாகிஸ்தானிடம் தோல்வியடைந்த சோகத்தில் இருந்த இந்திய ரசிகர்களுக்கு அது மேலும் ஒரு அதிர்ச்சியை அளித்தது.

இந்நிலையில் 2017ஆம் ஆண்டு விராட் கோலி மற்றும் அனில் கும்ப்ளே ஆகியோர் இடையே விரிசல் ஏற்பட என்ன காரணம் என அப்போதைய இந்திய அணியின் மேனேஜர் ரத்னகர் செட்டி தற்போது கூறியது பின்வருமாறு. “2017 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டிக்குப் பிறகு அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்து அனில் கும்ப்ளே ராஜினாமா செய்வதற்கு வழிவகுத்த நிகழ்வுகள் இந்திய கிரிக்கெட் நிர்வாகத்தில் ஊடுருவிய இருட்டை காட்டுகின்றன” என கூறியுள்ள அவர் இந்திய அணியின் பயிற்சியாளராக அனில் கும்ப்ளே நியமிக்கப்பட்டதால் இந்திய அணி நிர்வாகத்தில் இருந்த அனைவரும் வெளிப்படையாக நடந்து கொள்ள முடியாமல் போனது என தெரிவித்துள்ளார்.
வீரர்களுக்கு சப்போர்ட் இல்லை:
இது பற்றி அவர் மேலும் கூறியது பின்வருமாறு. “சிலர் அனில் கும்பிளே பயிற்சியாளராக தொடர விரும்பவில்லை என்பது தெளிவாகத் தெரிந்தது. கேப்டனும் பயிற்சியாளரும் ஒரே அலைவரிசையில் இருப்பதாகத் தெரியவில்லை. மேலும் கேப்டனின் மேல் அவரின் கை ஓங்கி இருப்பதாகத் தோன்றியது. லண்டனில் நடந்த சாம்பியன்ஸ் டிராபியின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தானிடம் நாங்கள் தோற்றோம்.

அதன்பின் அந்த தோல்வி பற்றி விவாதிப்பதற்காக ஒரு மீட்டிங் நடந்தது. அதில் விராட், அனில் கும்பிளே, அமிதாப் சவுத்ரி மற்றும் டாக்டர் ஸ்ரீதர் ஆகியோர் கலந்து கொண்டனர். அதில் “அனில் கும்பிளே வீரர்களுக்காக ஆதரவாக நிற்காதது மற்றும் டிரஸ்ஸிங் அறையில் பதட்டமான சூழ்நிலையை உருவாக்கியது” போன்றவைகளால் விராட் கோலி வெளிப்படையாக மகிழ்ச்சியான கருத்தை தெரிவிக்கவில்லை” என கூறியுள்ளார்.
பயிற்சியாளராக பொறுப்பேற்ற பின் அனில் கும்ப்ளேவும் விராட் கோலியும் ஒரே எண்ணத்தில் இந்தியாவின் வெற்றிக்காக செயல்படவில்லை என்றும் இருவரிடையே கருத்து வேறுபாடும் முரண்பாடுகளும் இருந்ததாக அவர் தெரிவித்துள்ளார். அத்துடன் கேப்டனுக்கு தேவையான சுதந்திரத்தை அளிக்காமல் அவரை கட்டுப்படுத்த நினைத்த அனில் கும்ப்ளே அணியில் இருந்த ஒரு சில வீரர்களுக்கு தேவையான ஆதரவையும் அளிக்கவில்லை என அதிர்ச்சியான தகவலை ரத்னாகர் ரெட்டி வெளியிட்டுள்ளார்.
இதையும் படிங்க : ஐசிசி அண்டர் 19 உலககோப்பை 2022 தொடரை வென்று இளம்சிங்க இந்திய அணி உலக சாதனை
இதை உடனடியாக கேப்டனாக இருந்த விராட் கோலி பிசிசிஐயிடம் மறைக்காமல் வெளிப்படையாக தெரிவித்ததை அடுத்து அனில் கும்ப்ளே தாமாகவே பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகி விட்டார் என இதிலிருந்து தெரியவருகிறது.



