ஐசிசி அண்டர் 19 உலககோப்பை 2022 தொடரை வென்று இளம்சிங்க இந்திய அணி உலக சாதனை

IND- u19
- Advertisement -

கிரிக்கெட்டின் எதிர்கால நட்சத்திரங்களை கண்டறியும் ஐசிசி அண்டர் 19 உலககோப்பை 2022 கிரிக்கெட் தொடர் கடந்த ஜனவரி 14ஆம் தேதியன்று துவங்கியது. வரலாற்றில் 14வது முறையாக நடைபெறும் இந்த உலகக்கோப்பை இந்த ஆண்டு முதல் முறையாக மேற்கிந்திய தீவுகளில் கோலாகலமாக தொடங்கியது. இதில் நடப்பு சாம்பியன் வங்கதேசம், இந்தியா உள்ளிட்ட உலகின் டாப் 16 அணிகள் பங்கு பெற்றன.

Under 19 World Cup

- Advertisement -

இந்த உலகக் கோப்பையில் முதலில் நடந்த லீக் சுற்றில் டெல்லியை சேர்ந்த இளம் வீரர் “யாஷ் துள்” தலைமையிலான இந்தியா தனது லீக் சுற்றில் தென்ஆப்பிரிக்கா, அயர்லாந்து மற்றும் உகாண்டா ஆகிய அணிகளுக்கு எதிராக பங்கேற்ற 3 போட்டிகளிலும் ஹாட்ரிக் வெற்றிகளை பதிவு செய்து நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறியது.

பைனலில் இந்தியா:
இதை அடுத்து நடைபெற்ற காலிறுதி போட்டியில் நடப்பு சாம்பியன் வங்கதேசத்தை தோற்கடித்த இந்தியா அரையிறுதி போட்டியில் வலுவான ஆஸ்திரேலியாவை 96 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்த வெற்றியின் வாயிலாக 2016, 2018, 2020 ஆகிய ஆண்டுகளை தொடர்ந்து 4வது முறையாக இந்த உலகக்கோப்பையின் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று புதிய உலகசாதனையும் படைத்தது.

Yash Dhull

அது மட்டுமல்லால் இந்த உலகக் கோப்பையையும் சேர்த்து 8வது முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்று அசத்தியது. இந்தியா போலவே இந்த உலக கோப்பையில் லீக் மற்றும் நாக்-அவுட் சுற்றுகளில் அசத்திய இங்கிலாந்து அணியும் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

- Advertisement -

பவுலிங் அபாரம்:
இதை அடுத்து பிப்ரவரி 5ஆம் தேதி இந்திய நேரப்படி மாலை 6.30 மணிக்கு ஆண்டிகுவா நகரில் உள்ள சர் விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் துவங்கிய மாபெரும் இறுதி போட்டியில் இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்த முக்கியமான போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இதை அடுத்து களமிறங்கிய அந்த அணியின் தொடக்க வீரர் பெத்தேல் 2 ரன்கள், டாம் பிரெஸ்ட் 0 ரன்கள் என சொற்ப ரன்களில் இந்தியாவின் ரவிக்குமார் பந்தில் அவுட்டானார்கள்.

U-19-2

இதனால் மோசமான தொடக்கம் பெற்ற அந்த அணியை காப்பாற்ற போராடிய ஜேம்ஸ் ரெவ் 116 பந்துகளில் 95 ரன்கள் எடுத்த போதிலும் இதர இங்கிலாந்து வீரர்கள் இந்தியாவின் துல்லியமான பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் சீரான இடைவெளிகளில் சொற்ப ரன்களில் அவுட் ஆனார்கள். இதனால் 44.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து இங்கிலாந்து வெறும் 189 ரன்களுக்கு சுருண்டது. இந்தியா சார்பில் அதிரடியாக பந்துவீசிய ராஜ் பாவா 5 விக்கெட்டுகளும் ரவிக்குமார் 4 விக்கெட்டுகளையும் சாய்த்தனர்.

- Advertisement -

190 ரன்கள் இலக்கு:
இதை அடுத்து 190 ரன்கள் எடுத்தால் கோப்பை என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய இந்தியாவிற்கு தொடக்க வீரர் அங்கிரிஸ் ரகுவன்ஷி முதல் ஒவேரிலேயே டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். அடுத்து வந்த ஹர்னூர் சிங் 21 ரன்களிலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் யாஷ் துள் 17 ரன்களில் அவுட் ஆனார்கள். இருப்பினும் மிடில் ஆர்டரில் ஷைக் ரசீத் 50 ரன்களும் மற்றும் ராஜ் பாவா 35 ரன்களும் எடுத்து இந்தியாவை சரிவில் இருந்து மீட்க இறுதியில் நிஷாந்த் சித்து 50* ரன்களும் தினேஷ் பானா வெறும் 5 பந்தில் 13* ரன்களும் விளாசி அபார பினிஷிங் செய்ததால் 47.5 ஓவர்களில் 6 விக்கெட் இழந்த இந்தியா 195 ரன்களை எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று ஐசிசி அண்டர் 19 உலககோப்பை 2022 தொடரின் சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்தது.

U19 World Cup 2022

இந்த உலக கோப்பை துவங்கியது முதல் லீக் மற்றும் நாக் அவுட் சுற்றுகளில் அசத்திய இந்தியா பங்கேற்ற அனைத்து போட்டிகளிலும் வெற்றிகளைப் பெற்று இறுதிப் போட்டி வரை தோல்வி அடையாமல் வெற்றி நடை போட்டது. தற்போது இறுதிப் போட்டியிலும் இங்கிலாந்தை தோற்கடித்தது 5வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியுள்ளது.

இந்தியா 5வது முறையாக சாம்பியன்:
ஏற்கனவே 2000, 2008, 2012, 2018 ஆகிய ஆண்டுகளில் இந்த சாம்பியன் பட்டத்தை வென்ற இந்தியா தற்போது 2022ஆம் ஆண்டிற்கான சாம்பியன் பட்டத்தையும் வென்று ஐசிசி அண்டர் 19 உலக கோப்பையை 5வது முறையாக வென்று உலக சாதனை படைத்துள்ளது. உலகின் மற்ற எந்த அணியும் இந்த உலகக்கோப்பையை 3 முறைக்கு மேல் வென்றது கிடையாது என்பது இந்திய ரசிகர்களை பெருமை அடைய வைக்கும் அம்சமாகும்.

u-19

இந்த உலகக்கோப்பையின் இறுதிப் போட்டியில் 35 ரன்களும் 5 விக்கெட்டுகளையும் சாய்த்த இளம் வீரர் ராஜ் பாவா ஆட்டநாயகன் விருதை வென்றார். இந்தியாவின் வருங்கால கிரிக்கெட் கண்டிப்பாக பாதுகாப்பாக இருப்பதுடன் ஒரு நல்ல நிலையில் இருப்பதையும் எதிர்காலத்தில் இந்திய கிரிக்கெட் உலக அளவில் சிறந்து விளங்கும் என்பதையும் இந்த மகத்தான வெற்றி எடுத்துக்காட்டியுள்ளது.

Advertisement