
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட் கடந்த 2022-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற சாலை விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்து அதன் பின்னர் ஒன்றரை ஆண்டுகள் கழித்து மீண்டும் ஐபிஎல் தொடரில் கம்பேக் கொடுத்தார். அப்படி ஐபிஎல் தொடரில் அசத்தலாக விளையாடிய அவர் டி20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியிலும் இடம் பெற்று விளையாடியிருந்தார்.
அதற்கு அடுத்து தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலும் விளையாட ரிஷப் பண்ட் தயாராகி வருகிறார். இந்நிலையில் ரிஷப் பண்ட் எப்படிப்பட்ட வீரர்? என்பது குறித்து டெல்லி அணியின் முன்னாள் பயிற்சியாளரான ரிக்கி பாண்டிங் சில கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில் : பண்ட் என்னதான் ஜாலியான வீரராக வெளியே தெரிந்தாலும் அவர் மிகவும் சீரியஸான கிரிக்கெட்டர். நாம் எல்லோருமே அவர் ஆடுவதை பார்த்திருக்கிறோம். ஸ்டம்ப் மைக்கில் அவர் ஜாலியாக பேசுவதையும் கேட்டிருக்கிறோம். அவர் ஒரு மிக அருமையான கேரக்டர்.
உங்கள் குரூப்பில் அப்படி ஒரு ஆள் இருக்க வேண்டும் என்று தோன்றும் அளவிற்கு ஒரு அற்புதமான நபர். கிரிக்கெட்டை மிகவும் நேசிக்கும் ஒருவர் ஒரு சில ரன்கள் அடிப்பதற்கோ அல்லது ஜாலியாக இருப்பதற்காக மட்டுமே அவர் கிரிக்கெட் விளையாட வில்லை. கிரிக்கெட்டை அவர் உண்மையாக நேசிக்கிறார்.
அதன் காரணமாகவே அவர் களத்தில் முழு மனதுடன் தொடர்ந்து புத்துணர்ச்சியோடு விளையாடி வருகிறார். டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை அவர் மிகச் சிறப்பான செயல்பாட்டையே வெளிப்படுத்தி வருகிறார். என்னை பொறுத்தவரை ரிஷப் பண்ட் ஒரு சீரியஸான கிரிக்கெட்டர். டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் நிச்சயம் பெரிய உயரங்களை தொடுவார் என பாண்டிங் பாராட்டியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : சச்சினின் வரலாற்று சாதனையை முறியடிக்கப்போகும் விராட் கோலி.. 147 ஆண்டுகால கிரிக்கெட்டில் முதல் வீரர்
டெஸ்ட் கிரிக்கெட்டை பொறுத்தவரை தவிர்க்க முடியாத வீரராக பார்க்கப்படும் ரிஷப் பண்ட் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளதால் துருவ் ஜுரேலுக்கு இனி டெஸ்ட் அணியின் பிளேயிங் லெவனில் வாய்ப்பு கிடைக்காது. அவர் வெறும் மாற்று வீரராக மட்டுமே இந்திய அணியுடன் தொடர்வார்.