இந்தியாவில் கடந்த 2008-ஆம் ஆண்டு துவங்கிய ஐபிஎல் தொடரானது இதுவரை 15 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ள வேளையில் நடப்பு 2023-ஆம் ஆண்டிற்கான பதினாறாவது ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது மார்ச் 31-ஆம் தேதி அகமதாபாத் நகரில் துவங்குகிறது. இந்த தொடரின் முதலாவது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோத இருக்கின்றன.
இன்னும் ஐபிஎல் தொடர் துவங்க ஒரு சில நாட்கள் மட்டுமே எஞ்சியுள்ள வேளையில் அனைத்து அணிகளை சேர்ந்த வீரர்களும் தற்போது தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் டெல்லி அணியும் டேவிட் வார்னர் தலைமையில் தீவிர பயிற்சியினை மேற்கொண்டு வருகிறது.
டெல்லி அணியை சேர்ந்த கேப்டன் ரிஷப் பண்ட் கார் விபத்தில் சிக்கி தற்போது சிகிச்சை பெற்று வருவதால் அவருக்கு பதிலாக டேவிட் வார்னர் தலைமையில் டெல்லி அணி இந்த தொடரில் களமிறங்க காத்திருக்கிறது.
இந்நிலையில் இந்த ஐபிஎல் தொடரில் ப்ரித்வி ஷாவின் அதிரடியான ஆட்டத்தை நீங்கள் பார்க்கப் போகிறீர்கள் என அந்த அணியின் பயிற்சியாளரான ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது :
முன்பெப்போதும் இல்லாததைவிட இம்முறை ப்ரித்வி ஷா கடுமையாக உழைத்து வருகிறார். வலைப்பயிற்சியிலும் சிறப்பாக அவர் பேட்டிங் செய்து வருகிறார். இதற்கு முன்னர் நான் அவரை பார்த்ததைவிட தற்போது அவருடைய அணுகுமுறை மாறியுள்ளது. அதுமட்டும் இன்றி அவரது உடல் வடிவமும் தற்போது முன்பை விட மேம்பட்டுள்ளது. நான் இது குறித்து அவரிடமும் பேசினேன்.
இதையும் படிங்க : கைல் ஜேமிசனை தொடர்ந்து மற்றொரு வேகப்பந்து வீச்சாளர் சி.எஸ்.கே அணியில் இருந்து விலகல் – வெளியான அறிவிப்பு
அதில் ஒன்று மட்டும் புரிந்தது இந்த சீசன் அவருக்கு பெரியதாக அமையும் என கருதுகிறேன். ஏனெனில் அவரது கண்களில் தற்போது புதிய வெளிச்சம் தெரிகின்றது. எனவே முன்பை விட இந்த முறை அவரது திறமையை அதிகமாக வெளிக்காட்டுவார் என்றும் பிரித்வி ஷாவை இந்த சீசனில் நீங்கள் இன்னும் அதிரடியாக பார்க்கமுடியும் என்றும் ரிக்கி பாண்டிங் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.