இந்தியாவில் இந்த ஆண்டு நடைபெறும் 2023-ஆம் ஆண்டுக்கான 16-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது வரும் மார்ச் 31-ஆம் தேதி அகமதாபாத் நகரில் துவங்குகிறது. இந்த முதல் போட்டியில் ஹார்டிக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும், மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோத உள்ளன. கடந்த ஆண்டு மோசமான நிலையில் தள்ளாடிய சிஎஸ்கே இம்முறை தோனிக்காக கோப்பையை வென்று கொடுக்க வேண்டிய எதிர்பார்ப்புடன் விளையாட காத்திருக்கிறது.
அதேபோன்று அறிமுக தொடரிலேயே சாம்பியன் பட்டத்தை வென்று அசத்திய குஜராத் அணி தங்களது வெற்றிநடையை தொடர காத்திருக்கிறது. இதன் காரணமாக இந்த ஐபிஎல் தொடரின் முதல் போட்டியே ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் இந்த ஐபிஎல் தொடர் துவங்குவதற்கு முன்பாக பல்வேறு அணிகளைச் சேர்ந்த வீரர்கள் காயம் காரணமாக வெளியேறி வருவது ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை அளித்துள்ளது. அதேபோன்று சென்னை அணியில் இடம் பெற்றிருந்த நியூஸிலாந்து அணியை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் கைல் ஜேமிசன் காயம் காரணமாக வெளியேறினார்.
அவருக்கு பதிலாக தென்னாப்பிரிக்க வீரர் சிசான்டா மகேலா மாற்றுவீரராக சேர்க்கப்பட்டார். இந்நிலையில் அவரைத் தொடர்ந்து மற்றொரு இளம் வேகப்பந்து வீச்சாளரான முகேஷ் சவுத்ரி சிஎஸ்கே அணியில் இருந்து காயம் காரணமாக வெளியேற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கடந்த ஆண்டு தீபக் சாஹருக்கு பதிலாக இடம்பெற்ற முகேஷ் சவுத்ரி தனது அருமையான பந்துவீச்சை வெளிப்படுத்தி 13 போட்டிகளில் 16 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். அதிலும் குறிப்பாக பவர்பிளே ஓவர்களில் ஸ்விங் செய்து வீசும் அவர் தோனியின் பேச்சைக் கேட்டு மிகவும் அற்புதமான பந்துவீச்சை வெளிப்படுத்தி இருந்தார்.
இதையும் படிங்க : நீங்க வேணுனா பாருங்க அவருதான் இந்திய அணிக்கு உலககோப்பையை ஜெயிச்சி தருவாரு – யுவ்ராஜ் சிங் நம்பிக்கை
இந்நிலையில் இந்த ஆண்டும் அவர் அற்புதமான பவுலிங்கை வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் இந்த ஐபிஎல் தொடர் துவங்குவதற்கு முன்னதாக அவர் காயம் காரணமாக வெளியேற இருப்பதாக வெளியாகியுள்ள செய்தி சிஎஸ்கே ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.