இந்தியாவில் நடைபெற்று முடிந்த 2024-ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியானது 14 போட்டிகளில் விளையாடி 7 வெற்றி மற்றும் ஏழு தோல்விகளுடன் 14 புள்ளிகளை பெற்று புள்ளி பட்டியலில் ஆறாவது இடத்தை பிடித்து அந்த தொடரில் இருந்து வெளியேறியது.
நட்சத்திர வீரர்கள் பலர் இருந்தும் அந்த அணி இப்படி சரிவை சந்தித்தது அந்த அணியின் நிர்வாகத்திற்கு ஏமாற்றத்தை அளித்தது. இதுவரை ஐபிஎல் தொடரில் கோப்பையை வெல்லாத அணிகளில் ஒன்றாக திகழ்ந்துவரும் டெல்லி கேப்பிடல்ஸ் அணி இம்முறை சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
மேலும் திறமையான இளம் வீரர்களையும், நட்சத்திர வெளிநாட்டு வீரர்களையும் தங்களது அணியில் இணைத்து இருந்த டெல்லி நிச்சயம் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் வழக்கம் போலவே இந்த சீசனிலும் அந்த அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறாமல் வெளியேறியது. அதோடு கடந்து மூன்று சீசன்களாகவே அந்த அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறாத காரணத்தினால் அந்த அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்திருந்தார்.
ஆஸ்திரேலிய கிரிக்கெட்டில் கேப்டனாக பல தொடர்களை வென்று காண்பித்தவர். அதுமட்டும் இன்றி ஐசிசி கோப்பையையும் அடுத்தடுத்து கைப்பற்றிய பெருமை உடையவர். அவரது தலைமையின் கீழ் டெல்லி அணி சிறப்பாக செயல்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் கடந்த ஏழு சீசன்களாக டெல்லி அணியால் சாம்பியன் பட்டத்தை வெல்ல முடியவில்லை.
இதையும் படிங்க : இந்தியா இலங்கை அணிகளுக்கு இடையேயான தொடரில் ஏற்பட்டுள்ள மாற்றம் – விவரம் இதோ
இதன் காரணமாகவே தற்போது அந்த அணியில் இருந்து வெளியேறியுள்ளார் என்று தெரிகிறது. இருப்பினும் நிச்சயம் அவர் எதிர்வரும் ஐபிஎல் தொடரில் ஏதாவது ஒரு அணிக்காக முக்கிய பொறுப்பில் நியமிக்கப்பட அதிக வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.



