
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியா மண்ணில் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. அத்தொடரில் புதிய கேப்டன் சுப்மன் கில் தலைமையில் களமிறங்கியுள்ள இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. அந்தப் போட்டியில் 224 நாட்கள் கழித்து இந்திய அணிக்காக நம்பிக்கை நட்சத்திரங்கள் விராட் கோலி, ரோஹித் சர்மா விளையாடியதால் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு எகிறியது.
அந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் களமிறங்கிய அவர்களில் ரோஹித் சர்மா 8 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தார். அடுத்து வந்த விராட் கோலி ஆஸ்திரேலியாவில் ஒருநாள் போட்டிகளில் முதல் முறையாக டக் அவுட்டானார். அவர்களுடைய மோசமான ஆட்டத்தால் ஆரம்பத்திலேயே சரிந்த இந்திய அணியால் கம்பேக் கொடுத்து வெற்றி காண முடியவில்லை.
அதனால் 7 மாதங்கள் கழித்து இந்தியாவுக்காக விளையாடும் அவர்கள் ஃபார்மை இழந்து விட்டார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது. அத்துடன் தொடர்ந்து பெரிய ரன்கள் குவித்தால் மட்டுமே அவர்களுக்கு 2027 உலகக் கோப்பையில் விளையாடும் வாய்ப்பு கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. அப்படிப்பட்ட சூழ்நிலையில் முதல் போட்டியில் அவர்கள் வெளிப்படுத்திய ஆட்டம் இந்திய ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றமாக அமைந்தது.
இந்நிலையில் விராட், ரோஹித் போன்ற சாம்பியன் பிளேயர்களை முடிந்து விட்டதாக எழுத வேண்டாமென ஆஸ்திரேலியா ஜாம்பவான் ரிக்கி பாண்டிங் கேட்டுக் கொண்டுள்ளார். நீண்ட காலம் கழித்து விளையாடும் அவர்கள் ரிதத்தை கண்டறிந்து விட்டால் பெரிய ரன்கள் குவித்து 2027 உலகக்கோப்பையில் விளையாடும் வாய்ப்புையும் கண்டறிவார்கள் என்று பாண்டிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் ஐசிசி இணையத்தில் பேசியது பின்வருமாறு.
“உங்களுடைய ரிதம் மற்றும் டெம்போ ஆகியவற்றைக் கண்டறிவது மிகப்பெரிய விஷயம். ஒருநாள் கிரிக்கெட்டில் இடைவெளிக்கு பின் விளையாடும் போது அந்த இரண்டையும் கண்டறிய அனைவருக்கும் கொஞ்சம் நேரம் எடுக்கும். இதிலிருந்து அவ்விருவரும் வேகமாக கம்பேக் கொடுப்பார்கள் என்று நான் எதிர்பார்க்கிறேன். அதே சமயம் உங்களால் சாம்பியன் பிளேயர்கள் முடிந்து விட்டதாக எழுத முடியாது என்று அனைத்து நேரமும் சொல்லி வருகிறேன்”
இதையும் படிங்க: லண்டனில் இருந்துட்டு வந்தா ஆஸி விடமாட்டாங்க.. தயாராகமல் சொதப்பிய விராட், ரோஹித்தை சாடிய ஃகைப்
“அவ்விரு வீரர்களுமே சிறந்தவர்கள். குறிப்பாக ஒருநாள் கிரிக்கெட்டில் விராட் கோலி நான் பார்த்ததிலேயே மிகச்சிறந்த வீரர் என்று ஏற்கனவே தெரிவித்துள்ளேன். எனவே அவர்களை முடிந்ததாக எழுதாதீர்கள். அவர்கள் தங்களது அணிக்காக பங்காற்றி வெற்றி பெறும் வழியைக் கண்டறிவார்கள். ஒருவேளை அதை செய்தால் அவர்கள் கிட்டத்தட்ட 2027 உலகக்கோப்பை அணியில் அங்கமாக இருப்பது உறுதியாகும்” என்று கூறினார்.