இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகின்றது. அத்தொடரின் முதல் போட்டியில் இந்தியாவை 7 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா தோற்கடித்தது. அந்தப் போட்டியில் இந்தியாவின் தோல்விக்கு விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோர் 10 ரன்கள் கூட அடிக்காதது தோல்விக்கு காரணமானது.
கடைசியாக 2025 சாம்பியன்ஸ் ட்ராபியில் விளையாடி இந்தியா கோப்பையை வெல்ல உதவிய அவர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓய்வு பெற்றனர். அதனால் கடந்த இங்கிலாந்து வெஸ்ட் இண்டீஸ் தொடர்களில் விளையாடாத அவர்கள் இத்தொடரில் 224 நாட்கள் கழித்து இந்தியாவுக்காக களமிறங்கியதால் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. அந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் முதல் போட்டியிலேயே அவர்கள் சுமாராக விளையாடியது இந்தியாவின் தோல்விக்கு ஒரு காரணமாக அமைந்தது.
முழுமையாக தயாராகல:
இந்நிலையில் 7 மாதங்களுக்குப் பின் சர்வதேச கிரிக்கெட்டுக்கு விளையாட வந்துள்ள விராட், ரோஹித் முன்னதாகவே ஆஸ்திரேலியாவுக்கு சென்று பயிற்சிகளை எடுத்திருக்க வேண்டுமென முகமது ஃகைப் தெரிவித்துள்ளார். ஏனெனில் எவ்வளவு தரமான வீரர்களாக இருந்தாலும் நீண்ட நாட்கள் கழித்து விளையாடினால் உடனடியாக அசத்துவது கடினம் என்று அவர் கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.
“விராட், ரோஹித்துக்கு முன்னதாகவே தயாராகும் வாய்ப்பிருந்தது. இருப்பினும் நாம் அணியுடன் செல்லலாம் என்று அவர்கள் நினைத்திருக்கலாம். ஏனெனில் அவர்கள் மேலே அழுத்தம் இருக்கிறது. குறிப்பாக விராட் கோலி இங்கிலாந்தின் லண்டனுக்கு குடிப்பெயர்ந்து விட்டார். எனவே இந்திய அணியுடன் அவர் பயணிக்க வேண்டும் என்ற வெளிப்புற அழுத்தம் உள்ளது”
ஃகைப் அதிருப்தி:
“அதன் காரணமாக ஒருவேளை அவர்கள் இந்திய அணியுடன் பயணிக்காமல் முன்னதாகவே ஆஸ்திரேலியா சென்றிருந்தால் மற்றொரு பிரச்சனை வந்திருக்கும். ஆனால் ஆஸ்திரேலியாவுக்கு 8 – 10 முன்னதாகவே சென்று தயாராகும் வாய்ப்பு அவர்களுக்கு இருந்தது. நீங்கள் எவ்வளவு பெரிய வீரர்களாக இருந்தாலும் கிரிக்கெட் என்பது ரிதத்தைப் பொறுத்தது. நீங்கள் நல்ல ரிதத்தில் இல்லாமல் போனால் ஆஸ்திரேலிய போன்ற அணி உங்களை விட மாட்டார்கள்”
இதையும் படிங்க: இதை செஞ்சா ஆல் ஃபார்மட் கிரேட்டாக வருவ.. நிதிஷ் ரெட்டியை வாழ்த்தி தொப்பியை வழங்கிய ரோஹித்
“அதனால் அவர்கள் கொஞ்சம் முன்னதாகவே பயணித்து தயாராகி இருக்க வேண்டும் என்று நான் கருதுகிறேன். ஏனெனில் ரோஹித் சர்மா ஷார்ட் பந்தை ஃபுல் அடிக்க முயற்சித்து அவுட்டானார். போதுமான பயிற்சி எடுக்காமல் நல்ல ரிதத்தில் இல்லாத காரணத்தாலேயே அவர் ஹேசல்வுட் வீசிய பந்தில் விக்கெட்டை இழந்தார். எனவே அவர் கொஞ்சம் நேரம் எடுத்து பிட்ச்சை பார்த்து விளையாடியிருக்கலாம். அவர் இரு மனதுடன் விளையாடியது போல் தெரிகிறது. போதுமானளவு தயாராகாத காரணத்தாலேயே முதல் போட்டியில் அவருடைய தன்னம்பிக்கை குறைவானது” என்று கூறினார்.



