இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர இளம் வேகப்பந்து வீச்சாளரான அர்ஷ்தீப் சிங் டி20 போட்டிகளில் இந்திய அணி சார்பாக 100 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் பந்துவீச்சாளர் என்ற வரலாற்று சாதனையை நிகழ்த்தினார். டி20 போட்டிகளை பொருத்தவரை போட்டியின் ஆரம்பத்திலேயே சிறப்பாக பந்துவீசி விக்கெட்டுகளை வீழ்த்தும் அவர் தவிர்க்க முடியாத வீரராக மாறினாலும் எட்டாவது இடத்தில் களமிறங்கும் வேகப்பந்து வீச்சாளர் பேட்டிங் செய்ய வேண்டும் என்பதற்காகவே அவருக்கு டி20 அணியில் கடந்த சில காலமாகவே குறைந்த அளவிலான வாய்ப்புகள் கிடைக்கிறது.
அர்ஷ்தீப் சிங்கை பாராட்டிய ரிக்கி பாண்டிங் :
அவருக்கு பதிலாக ஜஸ்ப்ரீத் பும்ராவுடன் இணைந்து இரண்டாவது வேகப்பந்து வீச்சாளராக ஹர்ஷித் ராணாவே தொடர்ச்சியாக விளையாடி வந்தார். ஏனெனில் எட்டாவது இடத்தில் களமிறங்கும் வேகப்பந்து வீச்சாளர் ஓரளவு பேட்டிங் தெரிந்த வீரராக இருக்க வேண்டும் என்பதற்காக கௌதம் கம்பீர் அவருக்கு தொடர்ந்து ஆதரவு வழங்கி வந்தார்.
இதன் காரணமாக அர்ஷ்தீப் சிங்குக்கு வெகு சில போட்டிகளே விளையாட வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்நிலையில் தற்போது நடைபெற்று வரும் 2026 டி20 உலக கோப்பை தொடரில் ஹர்ஷித் ராணா காயம் காரணமாக வெளியேறியுள்ளதால் அர்ஷ்தீப் சிங் விளையாடி வருகிறார். இந்நிலையில் அர்ஷ்தீப் சிங்கிடம் இருக்கும் திறமைக்கு அவர் தொடர்ச்சியாக இந்திய டி20 அணியில் விளையாட வேண்டும் என ரிக்கி பாண்டிங் அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
அந்த வகையில் அவர் கூறியதாவது : அமெரிக்கா அணிக்கு எதிரான போட்டியின் போது அர்ஷ்தீப் சிங் பந்து வீசுவதை பார்த்தேன். ஏற்கனவே புது பந்தில் மிகச்சிறப்பாக ஸ்விங் செய்து பந்துவீசும் அவர் இந்த போட்டியில் கூடுதலாக ஒரு திறனையும் சேர்த்துள்ளார். அதாவது தேவையான நேரத்தில் சரியான ஸ்லோ பந்துகளை அவர் வீசுகிறார். அப்படி மெதுவாக வீசும் பந்துகள் திரும்பும் வகையிலும் அவர் ஸ்விங் செய்து வீசுகிறார்.
இதையும் படிங்க : நமீபியா அணிக்கு எதிரான போட்டியில் ஜஸ்ப்ரீத் பும்ரா விளையாடுவாரா? – வெளியான தகவல்
எனவே வலது கை ஆட்டக்காரர்களுக்கு அந்த பந்து அடிப்பதற்கு கடினமான ஒன்றாக மாறும். இப்படி ஒரு திறமையை அவர் வளர்த்துக்கொண்டு மேலும் தன்னை பலப்படுத்தி உள்ளார். என்னை பொறுத்தவரை அவரிடம் இருக்கும் திறமைக்கு அவர் தொடர்ச்சியாக இந்திய அணியில் விளையாட வேண்டும் என ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.



