WTC Final : கோப்பையை வெல்லப்போவது யார்? அஸ்வின் – ஜடேஜா ஆகியோரில் யார் விளையாடுவாங்க – பாண்டிங் கணிப்பு இதோ

- Advertisement -

டெஸ்ட் கிரிக்கெட்டின் 2வது சாம்பியனை தீர்மானிக்கும் ஐசிசி 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் மாபெரும் இறுதி போட்டி ஜூன் 7 – 11 வரை இங்கிலாந்தில் இருக்கும் லண்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. அதில் புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்த ஆஸ்திரேலியா 2வது இடம் பிடித்த இந்தியாவை எதிர்கொள்கிறது. வரலாற்றில் இதுவரை நடைபெற்ற ஐசிசி ஃபைனல்களில் பெரும்பாலும் வெற்றிகளை பெற்று 5 உலக கோப்பையும் டி20 உலக கோப்பையும் வென்றதைப் போல இந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையையும் முதல் முயற்சிலேயே வெல்வதற்கு ஆஸ்திரேலியா தயாராகி வருகிறது.

மறுபுறம் கடந்த ஃபைனலில் நியூசிலாந்திடம் சந்தித்த தோல்வியிலிருந்து பாடத்தைக் கற்றுள்ள இந்தியா இம்முறை எப்படியாவது கோப்பையை வென்று 2013க்குப்பின் ஐசிசி தொடர்களில் சந்தித்து வரும் தொடர் தோல்வியை நிறுத்த போராட உள்ளது. மேலும் 2019/20, 2020/21 ஆகிய அடுத்தடுத்த வருடங்களில் வரலாற்றில் முதல் முறையாக ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் தோற்கடித்து சமீபத்திய பார்டர் – கவாஸ்கர் கோப்பையிலும் வீழ்த்திய தன்னம்பிக்கையுடன் இப்போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா களமிறங்குகிறது.

- Advertisement -

பாண்டிங் கணிப்பு:
அந்த வகையில் ஐசிசி தரவரிசையில் டாப் 2 இடங்களில் இருக்கும் இந்த அணிகளில் விராட் கோலி, ஸ்டீவ் ஸ்மித், ரோஹித் சர்மா, டேவிட் வார்னர், முகமது ஷமி, மிட்சேல் ஸ்டார்க், ரவீந்திர ஜடேஜா, பட் கமின்ஸ் என உலகத்தரம் வாய்ந்த வீரர்கள் நிறைந்திருப்பதால் இப்போட்டியில் அனல் பறந்து கோப்பையை வெல்வதற்கு கடுமையான போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் சமீப காலங்களில் இந்தியா வெற்றி பெற்றிருந்தாலும் இப்போட்டி நடைபெறும் இங்கிலாந்து சூழ்நிலைகள் தங்கள் நாட்டில் இருப்பதைப் போல் இருக்கும் என்பதால் ஆஸ்திரேலியா வெல்வதற்கு சற்று அதிக வாய்ப்புள்ளதாக ரிக்கி பாண்டியன் கணித்துள்ளார்.

இது பற்றி ஐசிசி இணையத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “ஆஸ்திரேலியாவுக்கு சற்று அதிக வாய்ப்புள்ளது. ஏனெனில் இங்குள்ள கால சூழ்நிலைகள் இந்தியாவை விட ஆஸ்திரேலியாவுக்கு பொருந்தக்கூடியதாக இருக்கிறது. மேலும் சமீப காலங்களில் இந்த 2 அணிகளும் மற்ற அணிகளை விட தங்களை தாங்களே அதிகமாக தோற்கடித்துக் கொண்டுள்ளன. எனவே அவர்கள் முதல் மற்றும் 2வது அணியாக விளையாட தகுதி உடையவர்கள். சமீபத்தில் ஆஸ்திரேலியர்கள் பெரிய அளவில் கிரிக்கெட்டில் விளையாடவில்லை”

- Advertisement -

“மறுபுறம் அனைத்து இந்திய வீரர்களும் போட்டி நிறைந்த ஐபிஎல் தொடரில் விளையாடியுள்ளனர். அதனால் ஆஸ்திரேலியா புத்துணர்ச்சியாகவும் இந்தியா சற்று களைப்படைந்த நிலையிலும் களமிறங்கும். அது போன்ற அம்சங்கள் தான் இப்போட்டியில் வீரர்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தும்” என்று கூறினார். மேலும் ஸ்விங் வேகத்துக்கு சாதகமான இங்கிலாந்து மண்ணில் வெற்றி காண்பதற்கு 4 வேகப்பந்து வீச்சாளர்கள் அவசியமாக பார்க்கப்படும் நிலையில் அஸ்வின் – ஜடேஜா ஆகிய இருவரில் யாரை தேர்வு செய்வது என்ற குழப்பம் இந்திய அணியில் காணப்படுகிறது.

இருப்பினும் நல்ல ஃபார்மில் இருக்கும் அந்த 2 உலகத்தரம் வாய்ந்த வீரர்களுமே இந்த ஃபைனலில் விளையாடுவதை எதிர்பார்ப்பதாக தெரிவிக்கும் பாண்டிங் இது பற்றி மேலும் பேசியது பின்வருமாறு. “இந்த போட்டியில் அவர்கள் அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகிய இருவரையும் தேர்ந்தெடுப்பார்கள் என்று நினைக்கிறேன். குறிப்பாக ஜடேஜா 6வது பேட்டிங் இடத்தில் அசத்தக்கூடியவர். சமீபத்தில் பேட்டிங் துறையில் நல்ல முன்னேற்றத்தை கண்டுள்ள அவர் தேவைப்பட்டால் முக்கியமான ஓவர்களையும் வீசுவார்”

இதையும் படிங்க:WTC Final : ஃபைனலில் ரோஹித் சர்மாவை அவர் தெறிக்க விடப் போறாரு பாருங்க – ஆஸி பவுலரை பாராட்டிய டாம் மூடி

“அதே சமயம் ஜடேஜாவை விட அஸ்வின் நுணுக்கங்கள் தெரிந்த தரமான டெஸ்ட் பவுலர் என்பதில் சந்தேகமில்லை. எனவே ஜடேஜா பேட்டிங் வரிசையில் இடம் பிடித்து இந்த போட்டி செல்ல செல்ல 4 மற்றும் 5வது நாளில் சுழலுக்கு சாதகமாக மைதானம் மாறினால் மிகச்சிறந்த 2வது ஸ்பின்னராக செயல்படுவார். நானாக இருந்தால் அதை தான் செய்வேன்” என்று கூறினார்.

Advertisement