ஐபிஎல் தொடரின் 19 ஆவது லீக் போட்டி நேற்று துபாய் இன்டர்நேஷனல் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும், விராட்கோலி தலைமையிலான பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 196 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக மார்க்கஸ் ஸ்டாய்நிஸ் 26 பந்துகளில் 53 ரன்களையும், ப்ரித்வி ஷா 42 ரன்களையும், பண்ட் 37 ரன்களையும் குவித்தனர். அதன் பின்னர் 197 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பெங்களூர் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 137 ரன்களை மட்டுமே எடுத்தது.
அதிகபட்சமாக கேப்டன் கோலி 43 ரன்களை அடித்தார். அவரை தவிர மற்ற யாரும் 20 ரன்கள் கூட அடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் 59 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி பெங்களூரு அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது ஆட்டநாயகனாக சுழற்பந்து வீச்சாளர் அக்சர் பட்டேல் தேர்வானார்.
இந்நிலையில் இந்த போட்டியில் விளையாடிய டெல்லி அணியின் துவக்க வீரர் ப்ரித்வி ஷா குறித்து டெல்லி அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் புகழாரம் சூட்டியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : ப்ரித்வி ஷா இன்றைய ஆட்டம் அற்புதமாக இருந்தது. ஐபிஎல் தொடரில் டாப் ஆர்டர் பேட்ஸ்மென்களின் மாஸ்டர் கிளாஸ் இன்னிங்சை பார்க்க துவங்கியுள்ளோம். வேகப்பந்து வீச்சு, சுழல் பந்து வீச்சு என இரண்டிலுமே கெட்டியான பேட்ஸ்மேன் ப்ரித்வி ஷா.
டெக்னிக்கலாக அவர் மிகவும் ஸ்ட்ராங்கான பேட்ஸ்மேன். கடந்த முறை செய்த தவறுகளை தானாகவே பாடம் கற்றுக்கொண்டு அதனை சரி செய்து உள்ளார். அவரது ஆட்டத்திற்கு உதவும் வகையில் சிறு சிறு டிப்ஸ்களை மட்டுமே நான் சொல்லியுள்ளேன். அணியில் அவரது வேலை சரியாக புரிந்து விளையாடி வருகிறார் என்று பாண்டிங் அவரை புகழ்ந்தது குறிப்பிடத்தக்கது. நேற்றைய போட்டியில் ப்ரித்வி ஷா 23 பந்துகளை சந்தித்து 5 பவுண்டரிகள், 2 சிக்சர்கள் அடித்து 42 ரன்களை குவித்தது குறிப்பிடத்தக்கது.