ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இந்தியா தோல்வியை சந்தித்தது. அதனால் 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு தகுதி பெறும் வாய்ப்பையும் இந்தியா நழுவ விட்டது. அதன் காரணமாக ஜஸ்ப்ரித் பும்ரா தனி ஒருவனாக இந்தியாவுக்காக வெளிப்படுத்திய போராட்டம் வீணானது என்றே சொல்லலாம். ஏனெனில் முதல் போட்டியிலேயே கேப்டனாக 8 விக்கெட்டுகள் எடுத்த அவர் இந்தியாவுக்கு பிரம்மாண்ட வெற்றியை பெற்றுக் கொடுத்தார்.
ஆனால் அதற்கடுத்த போட்டிகளில் ரோஹித் சர்மா தலைமையில் சுமாராக விளையாடிய இந்தியா வெற்றி வாய்ப்பை நழுவ விட்டது. இருப்பினும் பவுலிங் துறையில் தனி ஒருவனாக ஆஸ்திரேலியாவுக்கு சிம்ம சொப்பனமாக செயல்பட்ட பும்ரா 5 போட்டிகளில் மொத்தம் 32 விக்கெட்டுகள் எடுத்தார். அதன் வாயிலாக ஆஸ்திரேலிய மண்ணில் ஒரு தொடரில் அதிக விக்கெட்டுகள் எடுத்த இந்திய வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்தார்.
சிதற விட்ட பும்ரா:
அவருடைய ஆட்டத்தை பார்த்து வியந்த ஆஸ்திரேலிய வாரியம் இந்தியா தோல்வியை சந்தித்திருந்தாலும் இந்தத் தொடரின் நாயகன் விருதை பும்ராவை பரிசாக சமர்ப்பித்தது. இந்நிலையில் இந்தத் தொடரில் தங்கள் நாட்டு பவுலர்களை விட ஜஸ்ப்ரித் பும்ரா தான் சிறந்தவராக செயல்பட்டதாக முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங் பாராட்டியுள்ளார்.
மேலும் ஸ்மித், ஹெட் உள்ளிட்ட அனைத்து ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களையும் ஜஸ்ப்ரித் பும்ரா சில்லியாக சிதற விட்டதாகவும் பாண்டிங் வியப்பை வெளிப்படுத்தியுள்ளார். இது பற்றி ஐசிசி இணையத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “இது நான் பார்த்ததிலேயே வேகப்பந்து வீச்சு ராஜாங்கம் நடத்திய சிறந்த தொடர் என்பதில் சந்தேகம் இல்லை”
பாண்டிங் பாராட்டு:
“ஆம் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான சூழ்நிலைகள் இந்தத் தொடர் முழுவதும் இருந்தது. ஆனால் மற்றவர்களுடன் ஒப்பிடும் போது பும்ராவின் பவுலிங் பேட்டிங்கை மிகவும் கடினமாக மாற்றியது. ஆஸ்திரேலிய டாப் ஆர்டர் பேட்டிங் வரிசையில் நிறைய தரம் இருக்கிறது. ஆனால் அவர் அவர்கள் அனைவரையும் பல்வேறு நேரங்களில் சில்லியை போல் காட்சிப்படுத்தினார்” எனக் கூறினார்.
இதையும் படிங்க: 9999இல் காலி செய்த இந்தியாவின் பிரசித் கிருஷ்ணா உலக சாதனை.. ஸ்டீவ் ஸ்மித் பரிதாப சாதனை
அந்த வகையில் மற்ற வீரர்கள் கைகொடுக்க தவறியதால் இந்திய அணி இத்தொடரில் தோல்வியை சந்தித்தது. ஆனால் 2018 – 19 தொடரை ஆஸ்திரேலிய மண்ணில் முதல் முறையாக இந்தியா வெல்வதற்கு பும்ரா முக்கிய பங்காற்றியவர் என்பதை ரசிகர்களுக்கு சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இதை அடுத்து லேசான காயத்தால் கடைசி போட்டியில் பந்து வீசாத பும்ரா விரைவில் குணமடைந்து 2025 சாம்பியன்ஸ் டிராபியில் விளையாட வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பமாகும்.



