ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இந்தியா தோல்வியை சந்தித்தது. அதனால் 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு தகுதி பெறாமல் இந்தியா வெளியேறியது. மேலும் சிட்னியில் நடைபெற்ற கடைசி போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் தோற்ற இந்தியா பார்டர் கவாஸ்கர் கோப்பையை தக்க வைக்கும் வாய்ப்பையும் இழந்தது.
முன்னதாக அந்தப் போட்டியில் ஆஸ்திரேலியாவின் நம்பிக்கை நட்சத்திரம் ஸ்டீவ் ஸ்மித் 9962 ரன்களுடன் தன்னுடைய ஆட்டத்தை துவங்கினார். அந்த வாய்ப்பில் தன்னுடைய முதல் இன்னிங்ஸில் 33 ரன்கள் எடுத்த அவரை இந்திய வீரர் பிரசித் கிருஷ்ணா அவுட்டாக்கினார். அதனால் 9995 ரன்களுடன் ஏமாற்றமாக வெளியேறிய அவர் இரண்டாவது இன்னிங்ஸில் 10000வது ரன்னை அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
கிருஷ்ணா அசத்தல்:
ஆனால் இரண்டாவது இன்னிங்ஸில் 4 ரன்கள் எடுத்திருந்த அவரை மீண்டும் பிரசித் கிருஷ்ணா அவுட்டாக்கி 10000 ரன்களை தொடும் சாதனையை தற்காலிகமாக உடைத்தார். அதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு பேட்ஸ்மேன் 9999 ரன்களில் இருந்த போது அவுட்டாக்கிய முதல் பவுலர் என்ற தனித்துவமான உலக சாதனையை பிரசித் கிருஷ்ணா படைத்துள்ளார். உலகில் வேறு பவுலர்கள் யாரும் இப்படி ஒரு சாதனையை படைத்ததில்லை.
மறுபுறம் டெஸ்ட் கிரிக்கெட்டில் 9999 ரன்களில் இருந்த போது அவுட்டான இரண்டாவது பேட்ஸ்மேன் என்ற பரிதாபமான சாதனையை ஸ்மித் படைத்துள்ளார். இதற்கு முன் 2011ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக சென்சூரியன் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் முன்னாள் இலங்கை ஜாம்பவான் வீரர் மகிலா ஜெயவர்த்னே 9999 ரன்களில் இருந்த போது ரன் அவுட்டாகி 10000 ரன்கள் வாய்ப்பை தற்காலிகமாக இழந்தார்.
ஸ்மித் பரிதாபம்:
அவருக்குப் பின் தற்போது ஸ்மித் அதே போன்ற நிலையை சந்தித்துள்ளார். இருப்பினும் அடுத்ததாக ஜனவரி 29ஆம் தேதி இலங்கை மண்ணில் ஆஸ்திரேலியா 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. அந்தத் தொடரில் ஸ்மித் விளையாடி 10000 ரன்கள் அடிப்பதற்கு பிரகாச வாய்ப்பு உள்ளது.
இதையும் படிங்க: 194க்கு ஆல் அவுட் மிரட்டும் தெ.ஆ.. ஃபாலோ ஆன் பெற்ற பின் பாபர் – மசூத் உலக சாதனை.. பாகிஸ்தான் மேஜிக் செய்யுமா?
அப்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் பத்தாயிரம் ரன்கள் அடித்த 15வது வீரர் என்ற சாதனையை அவர் படைப்பார். மறுபுறம் தோல்வியை சந்தித்த இந்திய அணி அடுத்ததாக வரும் ஜூன் மாதம் இங்கிலாந்து மண்ணில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. அந்தத் தொடரில் இந்திய அணியில் அதிரடியான சில மாற்றங்கள் நிகழும் என்று எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.



