இந்திய கிரிக்கெட் அணி தங்களுடைய மண்ணில் நியூசிலாந்துக்கு எதிராக 3 – 0 என்ற கணக்கில் வரலாறு காணாத தோல்வியை சந்தித்தது. அந்த தோல்விக்கு பேட்டிங் துறையின் முதுகெலுமாக கருதப்படும் விராட் கோலி சுமாராக விளையாடியது முக்கிய காரணமாக அமைந்தது. இதையடுத்து 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை ஃபைனலுக்கு தகுதி பெற அடுத்து நடைபெறும் ஆஸ்திரேலிய தொடரை இந்தியா வென்றாக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
எனவே ஆஸ்திரேலியாவில் விராட் கோலி சிறப்பாக விளையாடி இந்தியாவின் வெற்றியில் பங்காற்ற வேண்டிய நிலையில் உள்ளார். இந்நிலையில் விராட் கோலி கடந்த 5 வருடங்களில் 2 சதங்கள் மட்டுமே அடித்துள்ளதாக ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். அது சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடும் வீரருக்கு தகுதியான புள்ளிவிவரம் அல்ல என்றும் அவர் கூறியுள்ளார்.
பாண்டிங் ஏமாற்றம்:
அதனால் விராட் கோலி ஆஸ்திரேலியாவில் சிறப்பாக விளையாடி தம்மை சிறந்த வீரர் என்பதை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இது பற்றி ஐசிசி இணையத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “விராட் கோலியை பற்றிய புள்ளிவிவரத்தை மற்றொரு நாள் நான் பார்த்தேன். அது கடந்த 5 வருடங்களில் அவர் 2 (உண்மையில் 3) டெஸ்ட் சதங்கள் மட்டுமே அடித்துள்ளதாக காண்பித்தது”
“அது எனக்கு சரியாக தெரியவில்லை. ஒருவேளை அது சரி என்றால் என்னை பொறுத்த வரை அது கவலைக்குரியதாகும். அப்படி யாரும் இருக்க முடியாது குறிப்பாக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடும் ஒரு டாப் பேட்ஸ்மேன் 5 வருடங்களில் 2 சதங்கள் மட்டுமே அடித்துள்ளார் என்பது ஏற்றுக் கொள்ள முடியாதது. இதற்கு முன்பும் விராட் கோலி போன்ற சிறந்த வீரரை பற்றி கேள்வி எழுப்ப வேண்டியதில்லை என்று நான் கூறியிருந்தேன்”
நிரூப்பிச்சு காட்டுங்க:
“அவர் இந்த விளையாட்டின் சிறந்த வீரர் என்பதில் சந்தேகமும் இல்லை. அவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் சிறப்பாக விளையாடுவதை விரும்பக் கூடியவர். கடந்த காலங்களில் ஆஸ்திரேலியாவில் அவருடைய செயல்பாடுகளும் நன்றாக இருக்கிறது. எனவே மீண்டும் விராட் கோலி சிறப்பாக செயல்படுவதற்கு ஏதேனும் நேரம் இருந்தால் அது இதுவாகவே இருக்கும்”
இதையும் படிங்க: அபிஷேக் சர்மா இளம்வயது சேவாக் போன்றவர்.. அவரிடம் இருந்து அதை எதிர்பார்ப்பது தவறு – உத்தப்பா ஆதரவு
“அதனால் விராட் கோலி முதல் டெஸ்ட் போட்டியிலேயே அதிக ரன்கள் குவித்தால் அதைப் பார்த்து நான் ஆச்சர்யப்பட மாட்டேன்” என்று கூறினார். அதே போல ரோஹித் சர்மாவும் சமீப காலங்களில் பெரிய ரன்கள் குவிக்கவில்லை. எனவே அந்த இருவருமே ஆஸ்திரேலியாவில் சிறப்பாக விளையாடி இந்தியாவின் வெற்றிக்கு பங்காற்ற வேண்டியது அவசியமாகிறது.



