இந்திய கிரிக்கெட் அணி முதலாவது அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அத்தொடரில் சுப்மன் கில் தலைமையிலான இளம் இந்திய அணி அனுபவமின்மையால் தோல்வியைச் சந்திக்கும் என்று அனைத்து முன்னாள் இங்கிலாந்து வீரர்களும் கணித்தனர். அதற்கேற்றார் போல் முதல் போட்டியிலேயே 5 சதங்கள் அடித்தும் தோல்வியை சந்தித்த முதல் அணி என்ற பரிதாப உலக சாதனையை இந்தியா படைத்தது.
ஆனால் 2வது போட்டியில் 336 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை தோற்கடித்த இந்தியா பர்மிங்காம் மைதானத்தில் முதல் முறையாக வென்று சரித்திரம் படைத்தது. குறிப்பாக கேப்டன் சுப்மன் கில் மட்டும் 430 ரன்கள் விளாசி இங்கிலாந்தை தோற்கடித்து பல சாதனைகளைப் புரிந்தார். ஆனால் 3வது போட்டியில் 22 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை தோற்கடித்த இங்கிலாந்து தொடரில் முன்னிலை பெற்றது.
விரோதமான இங்கிலாந்து:
அப்போட்டியில் 3வது நாள் மாலையில் ஜாக் கிராவ்லி வேண்டுமென்றே நேரத்தை வீணடித்தார். அதனால் கோபமடைந்த இந்திய கேப்டன் கில் அவரிடம் சில மோசமான வார்த்தைகளை சொல்லி வாக்குவாதம் செய்தார். அதுவே இந்தியாவை தோற்கடிப்பதற்கான உத்வேகத்தைக் கொடுத்ததாக தெரிவித்த இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் இனிமேல் தங்களை சீண்டினால் பதிலடி கொடுப்போம் என்று எச்சரித்தார்.
அதனால் தேவையற்ற வாக்குவாதம் செய்த கில்லை நிறைய முன்னாள் இந்திய வீரர்கள் விமர்சித்தனர். இந்நிலையில் விரோதமான ரசிகர்களைக் கொண்ட இங்கிலாந்தில் தம்முடைய அணிக்காக கேப்டன் கில் வாக்குவாதம் செய்ததில் தவறில்லை என்று ஜாம்பவான் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். இது பற்றி ஐசிசி இணையத்தில் அவர் கூறியது பின்வருமாறு. “அது எனக்குத் தெரிந்த சுப்மன் கில்லிடம் இருந்து வித்தியாசமான குணமாக வெளிப்பட்டது”
பாண்டிங் ஆதரவு:
“பொதுவாக இதற்கு முன் யாரும் அவரை அப்படிப் பார்த்திருக்க மாட்டார்கள் என்று சொல்வேன். அது ஒரு கேப்டன் தன்னுடைய அணிக்காக எழுந்து நின்ற தருணமாகும். அது ஒரு கேப்டன் இது என்னுடைய அணி, இதுவே நாங்கள் விளையாடப்போகும் வழியென்று காண்பிக்க விரும்பிய தருணமாகும். அது இங்கிலாந்துக்கு கொஞ்சம் திருப்பிக் கொடுக்க விரும்பிய தருணமாகவும் அமைந்தது”
“ஏனெனில் இங்கிலாந்து விளையாடுவதற்கு கடினமான இடமாகும். அங்குள்ள ரசிகர்கள் கிரிக்கெட்டை விரும்புவார்கள். அதே சமயம் விரோதமானவர்களாகவும் இருப்பார்கள். ஆஷஸ் அல்லது இங்கிலாந்து – இந்தியா போன்ற தொடர்களில் ஊடகங்களும் உங்களுக்கு பின்புறத்தில் மேலே உட்கார அமர்ந்திருப்பார்கள். அதனால் கில் தன்னுடைய அணி மேலே விராட் கோலி போல தனது முத்திரையைப் பதிக்க துவங்கியுள்ளார் என்று நினைக்கிறேன்”
இதையும் படிங்க: இனிமேல் நல்லவங்களா இல்லாம.. இந்தியாவை திருப்பி அடிக்கனும்ன்னு அவர் தான் மீட்டிங்ல சொன்னாரு.. ப்ரூக் பேட்டி
“ரோகித் சர்மா எப்போதும் எதிரணி வீரர்கள் மீது ஆக்ரோசத்தை வெளிப்படுத்த மாட்டார். சிறந்த செயல்பாடுகளைக் கொண்டு வருவதற்காக தன்னுடைய அணி வீரர்கள் மீது அப்படி நடந்து கொள்வார். ஆனால் அப்போட்டியில் கில் தாம் சரியென நினைத்ததற்கு ஆதரவாக நின்றதை நான் விரும்பினேன்” என்று கூறினார்.



