இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிராக தங்களுடைய சொந்த மண்ணில் இந்தியா 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. நாக்பூரில் துவங்கிய அந்தத் தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்தை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா தோற்கடித்தது. முன்னதாக அந்தப் போட்டியில் 19/2 என இந்தியா ஆரம்பத்திலேயே தடுமாறிய போது அதிரடியாக விளையாடிய ஸ்ரேயாஸ் ஐயர் 52 ரன்கள் குவித்து வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார்.
ஆனால் அந்தப் போட்டியில் விராட் கோலி காயமடைந்ததாலேயே தமக்கு வாய்ப்பு கிடைத்ததாக ஸ்ரேயாஸ் ஐயர் தெரிவித்தார். ஒருவேளை விராட் கோலி விளையாடினால் தமக்கு வாய்ப்பு கிடைத்திருக்காது என்று அவர் தெரிவித்தது சில முன்னாள் வீரர்களுக்கு ஆச்சரியமாக அமைந்தது. ஏனெனில் 2023 உலகக்கோப்பையில் அபாரமாக விளையாடிய அவர் கடைசி 10 ஒருநாள் போட்டிகளில் 60க்கும் மேற்பட்ட சராசரியில் பேட்டிங் செய்துள்ளார்.
இன்னுமா யோசனை:
இந்நிலையில் கடந்த உலகக் கோப்பையில் மிடில் ஆர்டரில் சிறப்பாக விளையாடியும் சொந்த மண்ணில் கூட ஸ்ரேயாஸ் ஐயருக்கு இந்திய அணி நிலையான வாய்ப்பு கொடுக்காதது ஆச்சரியமளிப்பதாக ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “ஸ்ரேயாஸ் கடந்த சில வருடங்களாக இந்திய அணியில் தொடர்ச்சியாக விளையாடாதது எனக்கு கொஞ்சம் ஆச்சரியம்”
“இந்தியாவில் நடைபெற்ற உலகக்கோப்பையில் அவர் அழகாக விளையாடினார். அதன் காரணமாக தனது சொந்த வழியில் இந்திய அணியில் அவர் நிலையான இடத்தைப் பிடித்து விட்டார் என்று நினைத்தேன். பின்னர் சில காயங்களை சந்தித்த அவர் அணியில் உள்ளேயும் வெளியேயுமாக இருந்தார். ஆனால் கடந்த வருடம் உள்ளூர் கிரிக்கெட்டில் அவர் மிகச் சிறப்பாக விளையாடினார்”
பாண்டிங் அதிருப்தி:
“ஐபிஎல் ஏலத்தில் பஞ்சாப் அணியில் அவரை வாங்குவதற்கு முன் அவரது உள்ளூர் செயல்பாடுகளை நான் பார்த்தேன். அது அற்புதமாக இருக்கிறது. வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் ஸ்லோவாக இருக்கக்கூடிய ஆடுகளங்களில் அவர் உயர்ந்து நிற்கக்கூடியவர். குறிப்பாக இந்தியாவில் சுழலுக்கு எதிராக அவர் நன்றாக விளையாடக் கூடியவர்” என்று கூறினார்.
இதையும் படிங்க: 330 ரன்ஸ்.. இலங்கையை வெளுக்கும் ஆஸி.. 21 வருடம் கழித்து கேரி சாதனை.. டிராவிட்டுக்கு நிகராக ஸ்மித்
அந்த வகையில் ஸ்ரேயாஸ் ஐயர் வெளிநாடுகளில் தடுமாறினாலும் இந்தியாவில் நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தி வருகிறார் என்பதில் சந்தேகம் இல்லை. அவருக்கு அடுத்தப் போட்டியில் விராட் கோலி வந்தால் வாய்ப்பு கிடைக்குமா என்பது சந்தேகமாக இருக்கிறது. இதைத் தொடர்ந்து 2வது போட்டி வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.



