ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெறும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் இந்தியா 295 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. அதனால் நியூசிலாந்துக்கு எதிராக சமீபத்தில் சந்தித்த தோல்வியில் இருந்து கம்பேக் கொடுத்த இந்தியா தங்களை குறைத்து மதிப்பிட்ட ஆஸ்திரேலிய அணிக்கு பதிலடி கொடுத்தது. குறிப்பாக நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணிலேயே இந்தியா தோல்வியை சந்தித்தது.
அதனால் 3 – 1 என்ற கணக்கில் இந்த தொடரில் இந்திய அணியை ஆஸ்திரேலிய தோற்கடிக்கும் என்று முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் ஏற்கனவே கணித்துள்ளார். ஆனால் முதல் போட்டியிலேயே ரோகித் சர்மா இல்லாமல் பும்ரா தலைமையில் ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியா தங்களுடைய மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்து சாதனை படைத்துள்ளது. அந்த வகையில் அவருக்கு இந்திய அணி தக்க பதிலடி கொடுத்துள்ளது என்றே சொல்லலாம்.
பாண்டிங் பாராட்டு:
இந்நிலையில் இப்போதெல்லாம் இந்திய அணி ஆஸ்திரேலியா போன்ற வெளிநாடுகளில் தான் தங்களுடைய சொந்த மண் போல அசத்துவதாக ரிக்கி பாண்டிங் பாராட்டியுள்ளார். ஏனெனில் இந்தியாவில் இருக்கும் சுழலுக்கு சாதகமான மைதானங்களை விட வெளிநாடுகளில் இருக்கும் மைதானங்களை அவர்கள் விரும்புவதாக பாண்டிங் கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.
“ஆஸ்திரேலியா கிட்டத்தட்ட 300 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. எனவே அவர்கள் ஏமாற்றத்துடன் இருப்பார்கள். இந்தியா டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த போது அது சரி தானா என்று பலரும் என்னிடம் கேட்டார்கள். அதற்கு இல்லை நீங்கள் அங்கே முதலில் பேட்டிங் தான் செய்ய வேண்டும் என்று சொன்னேன்”
வெளிநாட்டில் அசத்தல்:
“ஏனெனில் அங்கே அதற்கு முன் விளையாடிய 4 போட்டிகளிலும் முதலில் பேட்டிங் செய்த அணிகள் வென்றன. இருப்பினும் நீங்கள் புள்ளி விவரங்களை பார்த்து செயல்பட விரும்ப மாட்டீர்கள். 150க்கு ஆல் அவுட்டான பின்பும் பிட்ச் பந்து வீசுவதற்கு நன்றாக இருந்த சமயத்தில் பவுலிங் செய்யும் வாய்ப்பை இந்தியா பெற்றார்கள். பும்ரா, சிராஜ் உள்ளிட்ட இந்திய பவுலர்களுக்கு அந்த சூழ்நிலை பொருத்தமாக இருக்கும். நிதீஷ் ரெட்டியும் நன்றாக செயல்பட்டார்”
இதையும் படிங்க: 40 செ.மீ வித்யாசம்.. இதனால தான் பும்ரா மற்ற பவுலர்களை விட ஸ்பெஷலா தெறிக்க விடுறாரு.. வாசிம் அக்ரம்
“எனவே நீங்கள் அவர்களுக்கு பாராட்டு கொடுக்க வேண்டும். நான் ஒப்புக்கொள்கிறேன். மேலும் ஒரு காலத்தில் சொந்த மண்ணில் வலுவாக இருந்ததை விட தற்போது இந்தியா வெளிநாடுகளில் வலுவான அணியாக இருக்கிறார்கள் என்பதை ஏற்கனவே தெரிவித்தேன். இப்போதெல்லாம் அவர்கள் தங்களுடைய சொந்த மண்ணை விட வெளிநாடுகளில் உள்ள சூழ்நிலை மற்றும் பிட்ச்களில் நன்றாக விளையாடுகிறார்கள் என்று நினைக்கிறேன். அது முதல் போட்டியில் நிரூபணமாகியுள்ளது” என்று கூறினார்.



