
ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய கிரிக்கெட் அணி விளையாட உள்ள 2024 – 25 பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர் வரும் நவம்பர் மாதம் துவங்குகிறது. கடைசியாக ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 2 டெஸ்ட் தொடர்களையும் இந்தியா முதல் முறையாக அடுத்தடுத்து வென்று சரித்திரம் படைத்தது. எனவே இம்முறையும் வென்று ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியா ஹாட்ரிக் வெற்றியை பெறுமா என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது.
மறுபுறம் கடந்த 2 தோல்விகளுக்கு பதிலடி கொடுத்து இம்முறை இந்தியாவை 3 – 1 (5) என்ற கணக்கில் ஆஸ்திரேலியா வீழ்த்தும் என்று முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் சமீபத்தில் கணிப்பு வெளியிட்டிருந்தார். இந்நிலையில் இப்போதெல்லாம் வெளிநாடுகளில் ஆஸ்திரேலியா போன்ற எதிரணிகளை கண்டு இந்தியா பயப்படுவதில்லை என ரிக்கி பாண்டிங் பாராட்டியுள்ளார். அதற்கு 2014 – 2021 வரை கேப்டனாக செயல்பட்ட விராட் கோலி முக்கிய காரணம் என்று பாண்டிங் தெரிவித்துள்ளார்.
மேலும் 2008இல் துவங்கப்பட்ட ஐபிஎல் தொடர் மற்றொரு காரணம் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி ஸ்கை ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பேசியது பின்வருமாறு. “அவர்கள் அதற்கு முன்பு பெறாத வெற்றியை காபாவில் பெற்றனர். இந்திய பேட்ஸ்மேன்கள் வெளிநாட்டு மண்ணில் நிலவும் சூழ்நிலைகளுக்கு தங்களை உட்படுத்திக் கொண்டனர் என்று நினைக்கிறேன். எனவே ஒரு காலத்தில் இருந்ததைப் போல இந்தியா காபா அல்லது ஆப்டஸ் மைதானங்களால் பயமுறுத்தப்பட்டதாக நான் நினைக்கவில்லை”
“ஒருவேளை இது தேர்வு விஷயமாக இருக்கலாம். மற்றபடி அவர்கள் பெரிய அரங்கை கண்டு பயப்பட மாட்டார்கள். ஐபிஎல் தொடரால் இளம் இந்திய வீரர்கள் அழுத்தமான போட்டிகளை கண்டு பயப்படுவதில்லை. ஏனெனில் ஐபிஎல் என்பது அவர்களுக்கு உலகக்கோப்பை போல் இருக்கிறது. இதை நான் கடந்த 10 வருடங்களாக ஐபிஎல் தொடரில் இருப்பதால் சொல்கிறேன்”
“அவர்களுடைய பேட்ஸ்மேன்கள் தோல்வியை நினைத்து பயப்படாமல் அதிரடியாக விளையாடுகின்றனர். அவர்களுடைய வேகப்பந்து வீச்சு துறையின் ஆழமும் சிறப்பாக முன்னேறியுள்ளது. கடந்த 6 – 7 வருடங்களாக அவர்களின் தலைமையும் வலுவாகியுள்ளது. விராட் கோலியின் கேப்டன்ஷிப் இந்திய கிரிக்கெட்டை மாறியத்தில் மிகப்பெரிய வேலை செய்துள்ளது”
இதையும் படிங்க: இந்திய அணியில் நிரந்தர இடம்பிடிக்க இளம் வீரரான திலக் வர்மா எடுத்துள்ள புதிய முடிவு – அட இதுவும் சூப்பர் தான்
“ராகுல் டிராவிட் தலைமையில் அது கடந்த 4 வருடங்களாக தொடர்ந்தது. ஒரு அணியை சுற்றி விராட் கோலி போன்றவர் இருக்கும் போது செல்வாக்கு நன்றாக இருக்கும். இந்தியாவிடம் தற்போது நட்சத்திர வீரர்களும் உள்ளனர்” என்று கூறினார். அவர் கூறுவது போல வேகப்பந்து வீச்சாளர்களுக்கு அதிகமான ஆதரவு கொடுத்து ஆக்ரோஷமாக கேப்டன்ஷிப் செய்த விராட் கோலி தலைமையில் முதல் முறையாக ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியா டெஸ்ட் தொடரை வென்றது குறிப்பிடத்தக்கது.