ஆஸ்திரேலியாவுக்கு வரும் நவம்பர் மாதம் சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் இந்தியா அங்கு 2024/25 பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடரில் விளையாடுகிறது. காலம் காலமாக ஆஸ்திரேலிய மண்ணில் தோல்வியை மட்டுமே சந்தித்து வந்த இந்தியா 2018/19இல் முதல் முறையாக விராட் கோலி தலைமையில் கோப்பையை வென்றது. அத்துடன் 2020/21 சீசனிலும் ரகானே தலைமையில் இந்தியா வென்றது.
குறிப்பாக முதல் போட்டியிலேயே 36க்கு ஆல் அவுட்டாகி மோசமான தோல்வியை சந்தித்த இந்தியா அதன் பின் கொதித்தெழுந்து வரலாற்று வெற்றியை பெற்றது. அதன் காரணமாக உலகிலேயே 21ஆம் நூற்றாண்டில் ஆஸ்திரேலிய மண்ணில் அடுத்தடுத்த டெஸ்ட் தொடர்களை வென்ற முதல் அணியாக இந்தியா சாதனை படைத்தது. அந்த வரிசையில் தற்போது ரோஹித் சர்மா தலைமையில் ஹாட்ரிக் வெற்றியை பெறும் முனைப்புடன் இந்தியா களமிறங்கியுள்ளது.
பாண்டிங் பாராட்டு:
இந்நிலையில் ஆரம்ப காலங்களில் சுமாரான அணியாக செயல்பட்ட இந்தியா சமீப காலங்களில் தங்களுக்கு இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கு சமமாக மிகப்பெரிய சவாலை கொடுப்பதாக முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். குறிப்பாக தென்னாப்பிரிக்காவை மிஞ்சி இந்தியா போட்டியை கொடுப்பதாக அவர் பாராட்டியுள்ளார். அதனால் ஆஷஸ் தொடருக்குப் பின் பார்டர் – கவாஸ்கர் கோப்பை தான் உலகின் 2வது சிறந்த டெஸ்ட் தொடர் என்றும் பாண்டிங் பாராட்டியுள்ளார்.
இது பற்றி ஐசிசி இணையத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “என்னுடைய கேரியரின் கடைசி கால கட்டத்தில் தான் ஆஸ்திரேலியா – இந்தியா போட்டி வளரத் துவங்கியது. அங்கு தான் இந்தியா எழுந்து நின்று சண்டையிட துவங்கியது என்று நினைக்கிறேன். அப்போது தான் நாங்களும் சரி இந்தியாவுக்கு எதிராக விளையாடுகிறோம் என்று கருதத் துவங்கினோம்”
“தற்போது இந்தியா வித்தியாசமான கேப்டன்கள், வீரர்களுடன் வித்தியாசமான அணியாக இருக்கிறது. அதனால் இந்தியா அல்லது ஆஸ்திரேலியா உட்பட தொடர் எங்கே நடைபெற்றாலும் அவர்களை தோற்கடிக்க எங்களால் முடிந்த அனைத்தையும் செய்ய வேண்டும். கடந்த சில வருடங்களாக இங்கிலாந்து மற்றும் தென்னாபிரிக்க அணிகளுடன் ஆஸ்திரேலியா மிகவும் வலுவான போட்டியிட்டு வருகிறது”
இதையும் படிங்க: இதுக்கு கூடவா தகுதியில்ல? நடராஜன் அரவணைப்பில் அம்பலமான உண்மை முகம்.. பிசிசிஐக்கு தமிழக ரசிகர்கள் கேள்வி
“ஆனால் இந்தியா தற்போது தென்னாப்பிரிக்காவை முந்தி ஆஷஸ் தொடருக்கு அடுத்தபடியாக எங்களுக்கு சவாலை கொடுக்கும் இடத்தில் இருக்கிறது என்று நினைக்கிறேன். இம்முறையும் இந்தியா வலுவான அணியை இங்கே அழைத்து வரும். ஆஸ்திரேலியா தற்சமயத்தில் உலக சாம்பியன் என்பது எங்களுக்குத் தெரியும். எனவே அந்தத் தொடர் மிகுந்த போட்டியாக இருக்கும்” என்று கூறினார். அத்துடன் 3 – 1 என்ற கணக்கில் இந்தியாவை இம்முறை ஆஸ்திரேலியா தோற்கடிக்கும் என்று அவர் ஏற்கனவே கூறியது குறிப்பிடத்தக்கது.