இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு வரும் நவம்பர் மாதம் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. அங்கு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா வரலாற்று சிறப்புமிக்க பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடரில் களமிறங்க உள்ளது. 2018/19 சீசனில் விராட் கோலி தலைமையில் ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்ற முதல் அணியாக இந்தியா வரலாற்றுச் சாதனை படைத்தது.
அதே போல 2020/21 சீசனில் மீண்டும் ரகானே தலைமையில் ஆஸ்திரேலியாவை வீழ்த்திய இந்தியா 2 – 1 (4) என்ற கணக்கில் கோப்பையை வென்றது. அதனால் 21ஆம் நூற்றாண்டில் ஆஸ்திரேலிய மண்ணில் அடுத்தடுத்த டெஸ்ட் தொடர்களை வென்ற முதல் அணியாக இந்தியா உலக சாதனையும் படைத்தது. அந்த வரிசையில் இம்முறை ரோகித் சர்மா தலைமையில் ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியா ஹாட்ரிக் வெற்றியை பெறும் முனைப்புடன் விளையாட உள்ளது.
முக்கிய வீரர்:
முன்னதாக இம்முறை ஆஸ்திரேலியாவில் வெற்றி பெற ஷமி, சிராஜ், பும்ரா ஆகியோருடன் அர்ஷ்தீப் மற்றும் மயங் யாதவ் ஆகியோர் விளையாடுவது அவசியம் என்று முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர் சமீபத்தில் தெரிவித்திருந்தார். இந்நிலையில் ஆஸ்திரேலிய மண்ணில் இம்முறை இந்தியா அசத்துவதற்கு இடது கை வேகப்பந்து வீச்சாளர் கலீல் அகமது முக்கியம் என முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். இது பற்றி ஐசிசி இணையத்தில் அவர் பேசியது பின்வருமாறு.
“கலீல் அகமது போன்ற ஒருவர் டெஸ்ட் சுற்றுப்பயணத்தில் தன்னை கண்டுபிடிக்க முடியும் என்று நான் நினைக்கிறேன். சமீபத்தில் ஜிம்பாப்வே டி20 தொடரில் அவர் விளையாடினார் என்பது எனக்குத் தெரியும். இடது கை வீரரானவர் இந்திய அணியில் இடம் பிடிக்க ஏற்றவராக இருப்பார். அதற்குள் முகமது ஷமியும் ஃபிட்டாகி வந்து விடுவார். முகமது சிராஜ் பந்து வீசுவர்”
“கண்டிப்பாக பும்ராவும் இல்லாமல் வேறு எங்கும் செல்ல மாட்டார். எனவே இம்முறை இரு அணிகளுமே வலுவான வீரர்களுடன் மோத உள்ளன” என்று கூறினார். ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த கலீல் அகமது 2018 முதல் இதுவரை இந்தியாவுக்காக 11 ஒருநாள் மற்றும் 16 டி20 போட்டிகளில் விளையாடி 29 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார்.
இதையும் படிங்க: இந்திய வெற்றியை தொடர்ந்து இங்கிலாந்தை வீழ்த்த இலங்கை போட்டுள்ள மாஸ்டர் பிளான்.. வெளியான அறிவிப்பு
மேலும் 12 முதல் தர போட்டிகளில் 25 விக்கெட்களை எடுத்துள்ள அவர் 59 லிஸ்ட் ஏ போட்டிகளில் 86 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். இருப்பினும் அர்ஷ்தீப் சிங் 2024 டி20 உலகக் கோப்பையில் 17 விக்கெட்டுகள் எடுத்து தொடர்ச்சியாக வாய்ப்புகள் பெற்று வருகிறார். ஆனால் கலீல் அஹ்மத் எப்போதாவது தான் வாய்ப்பு பெறுகிறார் என்பதால் ஆஸ்திரேலிய தொடரில் தேர்வு செய்யப்படுவாரா என்பது சந்தேகமாகும்.



