ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெற்று முடிந்த பார்டர் – கவாஸ்கர் கோப்பையில் இந்திய கிரிக்கெட் அணி தோல்வியை சந்தித்தது. அதன் காரணமாக 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை பைனலுக்கும் தகுதி பெறாமல் இந்தியா வெளியேறியது. அந்த தோல்விக்கு தனி ஒருவனாக போராடிய ஜஸ்ப்ரித் பும்ராவுக்கு பவுலிங் துறையில் சிராஜ் உள்ளிட்ட மற்ற பவுலர்கள் ஆதரவு கொடுக்காதது முக்கிய காரணமாக அமைந்தது.
குறிப்பாக 2023 உலகக் கோப்பையில் காயத்தை சந்தித்த முகமது ஷமி அறுவை சிகிச்சை மேற்கொண்டு ரஞ்சிக் கோப்பையில் விளையாடி அசத்தினார். அதனால் விரைவில் ஆஸ்திரேலியாவுக்கு சென்று விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட அவர் கடைசி வரை செல்லவில்லை. அதே சமயம் சயீத் முஷ்டாக் அலி, விஜய் ஹசாரே போன்ற உள்ளூர் தொடர்களில் ஷமி தொடர்ந்து இந்தியாவில் விளையாடி வருகிறார்.
ஏமாற்றிய முகமது ஷமி:
மறுபுறம் ஆஸ்திரேலியாவின் மிட்சேல் ஸ்டார்க் நான்காவது போட்டியின் முடிவில் லேசாக காயத்தை சந்தித்ததால் கடைசி போட்டியில் விளையாட மாட்டார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நாட்டுக்காக 100% ஃபிட்டாக இல்லையென்றாலும் கடைசி போட்டியில் விளையாடுவேன் என்று சொன்ன ஸ்டார்க் அதை செய்தும் காட்டினார். இந்நிலையில் ஸ்டார்க் போல ஷமி கடைசிக்கட்ட போட்டிகளில் கூட பாதியில் வந்து விளையாடாதது தமக்கு ஏமாற்றமளிப்பதாக ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.
ஒருவேளை ஷமி விளையாடியிருந்தால் இந்தியா வெற்றி பெற்றிருக்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார். இது பற்றி ஐசிசி இணையத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “ஷமி தொடர் நடைபெற்ற கொண்டிருக்கும் போது பாதியில் கூட ஆஸ்திரேலியாவுக்கு வராதது எனக்கு ஆச்சரியமாக அமைந்தது. ஒருவேளை அவர் முழுமையாக ஃபிட்டாக இல்லை என்றால் கூட ஆஸ்திரேலியாவுக்கு வந்து நித்திஷ் ரெட்டி போன்ற ஆல்ரவுண்டருக்கு சில ஓவர்கள் பந்து வீசி உதவி செய்திருக்கலாம்”
பாண்டிங் வருத்தம்:
“அதை செய்திருந்தால் தொடரில் அவரால் வித்தியாசத்தை ஏற்படுத்தியிருக்க முடியும். ஷமி, பும்ரா, சிராஜ் ஆகியோர் இந்தியாவுக்காக முதல் போட்டியில் விளையாடியிருந்தால் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற இந்தத் தொடர் முற்றிலும் வித்தியாசமானதாக இருந்திருக்கும்” என்று கூறினார். மொத்தத்தில் ஷமி வராதது இந்திய ரசிகர்களுக்கு மிகுந்த ஏமாற்றமாக அமைந்தது.
இதையும் படிங்க: இந்திய அணி மீது தப்பில்ல.. குறை சொல்லாம அவங்களுக்கு அட்வைஸ் கொடுங்க.. ஆஸி கோச்சுக்கு ஹோக் பதிலடி
அடுத்ததாக சாம்பியன்ஸ் டிராபி நடைபெற உள்ளது. அதற்கடுத்ததாக ஜூன் மாதம் இங்கிலாந்தில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாட உள்ளது. அந்த தொடர்களிலாவது ஷமி நாட்டுக்காக விளையாட வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாகும். அது நடைபெறுமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.



