ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நிறைவு பெற்ற டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இந்தியா தோல்வியை சந்தித்தது. அதனால் 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை பைனலுக்கு தகுதி பெறாமல் இந்தியா வெளியேறியது. முன்னதாக அந்தத் தொடரில் கடைசி போட்டியின் முதல் நாளின் மாலை வேளையில் உஸ்மான் கவாஜா வேண்டும் என்றே நேரத்தை தாமதப்படுத்தினார்.
அதற்கு இந்திய கேப்டன் ஜஸ்ப்ரித் பும்ரா அதிருப்தியை வெளிப்படுத்தினார். அப்போது எதிர்புறம் இருந்த 19 வயது இளம் ஆஸ்திரேலிய வீரர் சாம் கோன்ஸ்டஸ் தேவையின்றி அவரிடம் சில வார்த்தைகளை பேசினார். அதனால் கோபமடைந்த பும்ராவும் அவருக்கு பதிலடி கொடுக்க சென்ற போது நடுவர் உள்ளே புகுந்து வாக்குவாதத்தை நிறுத்தினார். அடுத்த சில பந்துகளில் கவாஜாவை அவுட்டாக்கிய பும்ரா அப்படியே திரும்பி அவருக்கு பதிலடி கொடுத்தார்.
குறை சொல்லாதீங்க:
அதே போல இந்திய அணி வீரர்களும் தங்களுடைய கேப்டனை சீண்டிய கோன்ஸ்டஸ்க்கு ஒன்றாக சேர்ந்து சென்று பதிலடி கொடுத்தார்கள். ஆனால் அந்த தருணத்தில் தங்கள் வீரரை இந்திய அணியினர் மிரட்டும் வகையில் நடந்து கொண்டதாக ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக்டொனால்ட் விமர்சித்தார். அதற்கு ஐசிசி தண்டனை கொடுக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
இந்நிலையில் தங்கள் அணியின் பயிற்சியாளர் இந்திய அணியை குறை சொன்னது சரியில்லை என்று முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் ப்ராட் ஹோக் தெரிவித்துள்ளார். மேலும் சாம் கோன்ஸ்டஸ்க்கு எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற அறிவுரையை வழங்குமாறு ப்ராட் ஹோக் கேட்டுக் கொண்டுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.
பயிற்சியாளரின் வேலை:
“கோன்ஸ்டஸை இந்திய அணியின் வீரர்கள் மிரட்டும் வகையில் செயல்பட்டதாக பயிற்சியாளர் வெளியே வந்து சொன்னார். அது தங்கள் வீரரின் மனதளவில் பாதிப்பை ஏற்படுத்தியதாகவும் அவர் கூறினார். ஆனால் அதை அவர் கொஞ்சம் அதிகமாக எடுத்துக் கொண்டார் என்று நினைக்கிறேன். ஒருவேளை நீங்கள் எதிரணியிடம் ஏதேனும் சில வார்த்தைகளை சொல்ல விரும்பினால் பவுண்டரிகளை அடித்து விட்டு பதிலடி கொடுங்கள்”
இதையும் படிங்க: ஓவர்ரேட்டட் கில்லை கழற்றி விட்டு.. ருதுராஜ் உட்பட 3 பிளேயருக்கு சான்ஸ் கொடுங்க.. ஸ்ரீகாந்த் விமர்சனம்
“அதை விட்டுவிட்டு பயிற்சியாளர்கள் இந்திய அணி மிரட்டுவதாக சொல்லக்கூடாது. மாறாக அது போன்ற சூழ்நிலையை எவ்வாறு சமாளிக்க வேண்டும் என்று தங்கள் அணி வீரரிடம் பேச வேண்டும். குறிப்பாக நீங்கள் பதிலடி கொடுத்தால் அதை கொஞ்சம் மீண்டும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அவரிடம் சொல்ல வேண்டும்” எனக் கூறினார்.



