ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இந்தியா தோல்வியை சந்தித்தது. அதனால் 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை பைனலுக்கு தகுதி பெற முடியாமல் இந்தியா வெளியேறியது. அந்த தோல்விக்கு விராட் கோலி ரோஹித் சர்மா ஆகியோர் முக்கிய காரணமாக அமைந்தினர். அதே போல இந்திய கிரிக்கெட்டின் பிரின்ஸ் என்று அழைக்கப்படும் சுப்மன் கில் அரை சதம் கூட அடிக்காமல் தோல்விக்கு காரணமாக அமைந்தார்.
இந்நிலையில் சுப்மன் கில் குறைந்த செயல்பாடுகளை வெளிப்படுத்தினாலும் அதிகமாக கொண்டாடப்படும் ஓவர்ரேட்டட் பிளேயர் என்று முன்னாள் கேப்டன் ஸ்ரீகாந்த் விமர்சித்துள்ளார். அத்துடன் அவருக்கு பதிலாக மூன்று மாற்று வீரர்களையும் ஸ்ரீகாந்த் பரிந்துரைத்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.
ஓவர்ரேட்டேட் கில்:
“சுப்மன் கில் ஓவர்ரேட்டேட் பிளேயர் என்பதை நான் எப்போதும் சொல்லி வருகிறேன். ஆனால் யாரும் என்னை கேட்பதில்லை. அவர் அதிகமாக ஓவர்ரேட்டட் கிரிக்கெட்டர். சுப்மன் கில் இவ்வளவு நீண்ட வாய்ப்புகள் பெறும் போது சூரியகுமார் யாதவ் போன்ற வீரர்களுக்கு ஏன் டெஸ்ட் கிரிக்கெட்டில் வாய்ப்பு கிடைக்கவில்லை என்று சிலர் ஆச்சரியப்படலாம். டெஸ்ட் கிரிக்கெட்டை சூரியகுமார் நன்றாக துவங்கவில்லை”
“இருப்பினும் அவரிடம் டெஸ்ட் கிரிக்கெட்டில் அசத்துவதற்கு தேவையான டெக்னிக் மற்றும் திறன் இருக்கிறது. ஆனால் தேர்வாளர்கள் மற்றும் அணி நிர்வாகம் அவரை டி20 வீரராக தற்போது முத்திரை குத்தியுள்ளார்கள். எனவே நீங்கள் புத்துணர்ச்சியான வீரர்களை பார்க்க வேண்டும். அது போன்ற சூழ்நிலையில் நீங்கள் ருதுராஜை பார்க்கலாம். உள்ளூர் கிரிக்கெட்டில் நன்றாக விளையாடியும் அவரை நீங்கள் ஆஸ்திரேலியாவில் தேர்ந்தெடுக்கவில்லை”
ருதுராஜ், சுதர்சன்:
“அதே போல சாய் சுதர்சன் ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான பயிற்சிப் போட்டியில் சதத்தை அடித்தார். ஆனால் சுதர்சனை தேர்ந்தெடுக்காத நீங்கள் கில் போன்றவரை தேர்ந்தெடுத்தீர்கள். 9 வாய்ப்புகளில் தோல்வியடைந்து 10வது வாய்ப்பில் அசத்துவதால் மட்டுமே கில்லுக்கு இப்போதும் வாய்ப்பு கிடைக்கிறது. இந்திய மைதானங்களில் அவரைப் போல் யார் வேண்டுமானாலும் ரன்கள் அடிக்கலாம்”
இதையும் படிங்க: இன்னும் எவ்ளோ நாள் தான் வெயிட் பண்ணனும்.. முகமது ஷமி விடயத்தில் பி.சி.சி.ஐ-யை விளாசிய ரவி சாஸ்திரி
“ஆனால் சொந்த மண்ணுக்கு வெளியே சேனா நாடுகளில் ரன்கள் அடிப்பது சவாலாகும். அங்கே தான் கே.எல் ராகுல் போன்ற வீரர்கள் அசத்துவதால் வாய்ப்பு பெறுகிறார்கள்” என்று கூறினார். அவர் கூறுவது போல 2021க்குப்பின் 4 வருடங்களாக ஆசிய கண்டத்திற்கு வெளியே சுப்மன் கில் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு அரை சதத்தை கூட அடிக்காமல் தடுமாறி வருவது குறிப்பிடத்தக்கது.



