பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் பாபர் அசாம் தற்சமயத்தில் சுமாரான ஃபார்மில் இருந்து வருகிறார். 2019 காலகட்டங்களில் விராட் கோலியை விட சிறந்தவர் என்று பாராட்டும் அளவுக்கு அவர் சிறப்பாக செயல்பட்டார். அதன் காரணமாக பாகிஸ்தானின் கேப்டனாகவும் முன்னேறிய அவர் நாளடைவில் சுமாராக விளையாடி தோல்விக்கு காரணமாகும் வகையில் பேட்டிங் செய்தார்.
குறிப்பாக சமீபத்திய ஐசிசி தொடர்களில் ஜிம்பாப்வே, அமெரிக்கா போன்ற கத்துக்குட்டிகளிடம் பாகிஸ்தான் தோற்கும் அளவுக்கு பாபர் அசாம் சுமாராக விளையாடினார். அதன் காரணமாக வெள்ளைப்பந்து கேப்டன்ஷிப் பொறுப்பை ராஜினாமா செய்த அவர் 2022 டிசம்பர் மாதத்திற்கு பின் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு அரை சதம் கூட அடிக்கவில்லை. அதனால் சமீபத்திய இங்கிலாந்து தொடருக்கான டெஸ்ட் அணியில் இருந்து அவர் ஓய்வு என்ற பெயரில் கழற்றி விடப்பட்டார்.
விராட் கோலி போல:
இந்நிலையில் 2019க்குப்பின் சதமடிக்காமல் தடுமாறிய போது விராட் கோலி செய்த வழியை பாபர் அசாம் பின்பற்றினால் மட்டுமே ஃபார்முக்கு திரும்ப முடியும் என்று ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். இது பற்றி ஐசிசி இணையத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “பாபர் அசாமை மீண்டும் பாகிஸ்தான் டெஸ்ட் அணியில் எப்படி கொண்டு வருகிறார்கள் என்பது பெரிய சவாலாக இருக்கும்”
“ஃபார்முக்கு திரும்பிய பாபர் அசாமை மீண்டும் அணிக்குள் கொண்டு வருவதற்கான வழியை பாகிஸ்தான் கண்டறிய வேண்டும். இதற்கு முன் விராட் கோலி பற்றி நாம் பேசியது போலவே தற்போது பாபர் அசாமின் செயல்பாடுகள் மற்றும் நம்பர்கள் உள்ளன. சில நேரங்களில் விராட் கோலி இதைப் பற்றி பதிவு செய்திருக்கிறார் என்று நினைக்கிறேன். அவருக்கு ஒரு சிறிய இடைவெளி தேவைப்பட்டது”
பாண்டிங் அட்வைஸ்:
“அவர் விளையாட்டில் இருந்து விலகி புத்துணர்ச்சியடையவும் தீர்த்து வைக்க வேண்டிய சில விஷயங்களை வரிசைப்படுத்தவும் செய்தார். பாபர் அசாமுக்கும் அதுவே இங்கே தேவைப்படலாம். அதற்காக பாபர் அசாம் அதிகமாக முயற்சிக்காமல் கிரிக்கெட்டில் இருந்து கொஞ்சம் விலகியிருக்கலாம். தம்முடைய உபகரணங்கள் பையை மூடி வைத்து விட்டு மற்ற எதையாவது நினைக்கலாம்”
இதையும் படிங்க: ஐபிஎல் 2025: கோப்பை ஜெய்க்கலனாலும் பரவால்ல.. இந்த 5 பேரை வாங்குங்க.. ஆர்சிபி’க்கு ஏபிடி ஐடியா
“அப்படி செய்தால் அவர் புத்துணர்ச்சி அடைந்து மீண்டும் வரலாம். ஏனெனில் சிறப்பாக விளையாடும் போது அவரும் மற்றவர்களைப் போல் அசத்த முடியும் என்பது நமக்குத் தெரியும். அது போல அவரும் தன்னுடைய கேரியரில் அடுத்த பகுதியில் வருவதை நம்மால் பார்க்க முடியும் என்று நம்புகிறேன்” எனக் கூறினார். இந்த சூழ்நிலையில் ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெறும் ஒருநாள் தொடரில் பாபர் அசாம் விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.