இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி டெஸ்ட் போட்டிகளில் மிகவும் தடுமாற்றமாக விளையாடி வருகிறார். 2024 டி20 உலகக் கோப்பை ஃபைனலில் ஆட்டநாயகன் விருது வென்று இந்தியாவின் வெற்றிக்கு உதவிய அவர் அடுத்ததாக நடைபெற்ற இலங்கை ஒருநாள் தொடரில் அசத்தவில்லை. அதற்கடுத்ததாக நடைபெற்ற நியூசிலாந்து டெஸ்ட் தொடரில் சுமாராக விளையாடிய அவர் இந்தியாவின் ஒயிட் வாஸ் தோல்விக்கு ஒரு காரணமாக அமைந்தார்.
இருப்பினும் நடைபெற்று முடிந்த ஆஸ்திரேலிய தொடரின் முதல் போட்டியில் சதத்தை அடித்த விராட் கோலி இந்தியாவின் வெற்றியில் பங்காற்றினார். அதன் காரணமாக தொடர்ந்து அசத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்ட அவர் மீண்டும் அவுட் சைட் ஆஃப் ஸ்டம்ப் பந்துகளில் விக்கெட்டை கொடுத்து இந்தியாவின் தோல்விக்கு ஒரு காரணமாக அமைந்தார்.
மனதில் தேக்கம்:
அதன் காரணமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் கோலி ஓய்வு பெற வேண்டும் என்று இந்திய ரசிகர்களே விமர்சித்து வருகிறார்கள். இந்நிலையில் அவுட் சைட் ஆஃப் ஸ்டம்ப் பந்துகளில் விராட் கோலி தொடர்ந்து தடுமாறுவதற்கு மனதளவில் ஏற்பட்ட தேக்கமே காரணம் என்று ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். அதிலிருந்து விடுபட தற்காலிகமாக இடைவெளி எடுப்பதே தீர்வு என்றும் பாண்டிங் ஆலோசனை தெரிவித்துள்ளார்.
குறிப்பாக 2019க்குப்பின் சதத்தை அடிக்காத விராட் கோலி சிறிய இடைவெளி எடுத்து 2022 ஆசிய கோப்பையில் சதமடித்து ஃபார்முக்கு திரும்பியதைப் போல் மீண்டும் செயல்பட வேண்டுமென்று பாண்டிங் கூறியுள்ளார். இது பற்றி ஐசிசி இணையத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “தற்சமயத்தில் விராட் கோலி அசத்துவதற்காக அதிகமாக முயற்சிக்கிறார். உண்மையில் அதுவே அவருடைய பேட்டிங்கை கடினமாக்குகிறது”
சிறிய இடைவெளி:
“சில நேரங்களில் கடினமாக நீங்கள் முயற்சிக்கும் போது குறைவான வெற்றிகள் மட்டுமே கிடைக்கும். எனவே ஒரு இடைவெளி மட்டுமே அந்த இந்திய ஜாம்பவானுக்கு உதவி செய்யும். கடந்த காலங்களில் மனதளவில் தடுமாறிய போது அவர் கொஞ்சம் இடைவெளி எடுத்து தொலைவில் இருந்தார். பின்னர் கிரிக்கெட்டின் மீது அன்புடன் மீண்டும் கம்பேக் கொடுத்தார்”
இதையும் படிங்க: விராட் கோலி எனக்கு வாழ்த்து சொன்னாரு.. எனக்கு மட்டுமல்ல என்னோட குடும்பத்துக்கு அவரை பிடிக்கும் – சாம் கோன்ஸ்டாஸ்
“தற்சமயத்தில் அவரிடம் கிரிக்கெட்டின் மீது உண்மையான அன்பு இருப்பது போல் தெரியவில்லை. ஏனெனில் அவர் மகிழ்ச்சியுடன் இருக்க அதிகமாக முயற்சிக்கிறார். எனவே டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாட விரும்பினால் அவர் கொஞ்சம் இடைவெளி எடுத்து மீண்டும் முழுமையான அன்புடன் வருவதற்கான வழியை கண்டறிய வேண்டும்” என்று கூறினார். இதைத்தொடர்ந்து ஜூன் மாதம் தான் இந்தியா அடுத்ததாக டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.



