இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திர பவுலர் முகமது ஷமி 2023 உலகக்கோப்பையில் காயத்துடன் அபாரமாக பந்து வீசினார். அத்தொடரில் இந்தியா ஃபைனல் செல்ல முக்கிய பங்காற்றிய அவர் பின்னர் காயத்துக்காக அறுவை சிகிச்சை மேற்கொண்டார். அதிலிருந்து குணமடைய ஒரு வருடத்திற்கு மேல் எடுத்துக்கொண்ட அவரால் கடந்த ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர் வரை விளையாட முடியவில்லை.
இறுதியில் குணமடைந்த அவர் ரஞ்சிக் கோப்பையில் விளையாடி 2025 சாம்பியன்ஸ் ட்ராபி தொடருக்கான இந்திய அணியில் தேர்வானார். அத்தொடரில் 8 விக்கெட்டுகள் எடுத்த ஷமி இந்தியாவின் வெற்றியில் தம்முடைய பங்காற்றினார். ஆனால் அடுத்ததாக நடைபெற்ற இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியா (ஒருநாள்) தொடர்களில் ஃபிட்டாக இல்லை என்று சொல்லி அவரை தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் கழற்றி விட்டார்.
தயாராக இருக்கேன்:
அப்போது ரஞ்சிக் கோப்பையில் விளையாட ஃபிட்டாக இருக்கும் தம்மால் ஒருநாள் போட்டியில் விளையாட முடியாதா? என்று ஷமி பதிலடி கொடுத்தார். அதற்கு ஒருவேளை ஷமி ஃபிட்டாக இருந்தால் இந்நேரம் ஆஸ்திரேலியா சென்ற இந்திய அணியின் விமானத்தில் இருந்திருப்பார் என்று அகர்கர் மறுப்பு தெரிவித்தார். அத்துடன் எதிர்த்து பேசிய ஷமியை அடுத்து நடைபெறும் தென்னாப்பிரிக்கா ஏ அணிக்கு எதிரான தொடரில் விளையாடும் இந்தியா ஏ அணியில் அகர்கர் தேர்ந்தெடுக்கவில்லை.
இந்த சூழ்நிலையில் 2025 – 26 ரஞ்சிக் கோப்பையில் முதல் போட்டியில் 7 விக்கெட்டுகள் எடுத்த ஷமி பெங்கால் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். நேற்று நிறைவுற்ற குஜராத்துக்கு எதிரான போட்டியில் 8 விக்கெட்டுகள் எடுத்த ஷமி மீண்டும் பெங்காலை வெற்றி பெற வைத்து அகர்கருக்கு பதிலடி கொடுத்துள்ளார். இந்நிலையில் இந்தியாவுக்காக அனைத்து விதமான போட்டிகளிலும் விளையாட தயாராக எல்லா நேரமும் இருப்பதாக ஷமி தெரிவித்துள்ளார்.
ஷமி அறிவிப்பு:
தம்மை தேர்ந்தெடுப்பது தேர்வாளர்கள் கையில் இருப்பதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “எனது ஆட்டத்தில் நிறைய கடின உழைப்பு இருக்கிறது. அதிர்ஷ்டமும் பங்காற்றுவதாக நம்புகிறேன். அனைவருமே நாட்டுக்காக விளையாடுவதை விரும்புவார்கள். அதற்காக நானும் தயாராக இருக்கிறேன். ஃபிட்டாக இந்திய அணிக்காக விளையாட எல்லா நேரமும் தயாராக வேண்டும் என்பதே என்னுடைய ஊக்கமாகும்”
இதையும் படிங்க: 55 ரன்ஸ்.. ரோஹித்தின் ஈஸியான ரெக்கார்ட்டை உடைக்க முடியாமல் சொதப்பிய பாபர்.. தெ.ஆ சாதனை வெற்றி
“அதற்காக களத்தில் நான் தொடர்ச்சியாக சிறந்த செயல் திறன்களை வெளிப்படுத்துவேன். மற்ற அனைத்தும் தேர்வாளர்களின் கையில் இருக்கிறது. எப்போதுமே நான் ஏதாவது சர்ச்சையில் சிக்கி கொள்கிறேன். அவை அனைத்தும் தவறான புரிதலால் ஏற்படுகிறது. கடினமான நேரத்தில் உள்ளூரில் இப்படி சிறப்பாக செயல்படுவது உடலளவிலும் மனதளவிலும் நிம்மதியைக் கொடுக்கிறது. இப்போதும் என்னிடம் நல்ல ஆட்டம் இருப்பதாக நம்புகிறேன்” என்று கூறினார்.



