ஐபிஎல் 2022 தொடரில் ஏப்ரல் 23-ஆம் தேதி 2 போட்டிகள் நடைபெற்ற நிலையில் இரவு 7.30 மணிக்கு நடைபெற்ற 36-ஆவது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் மோதின. அந்தப் போட்டியில் ஹைதராபாத் முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை அடுத்து களமிறங்கிய பெங்களூரு ரசிகர்களுக்கு மிகப் பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. ஏனெனில் 2-வது ஓவரை வீசிய ஹைதராபாத் அணியின் மேக்ரோ யான்சன் 2-வது பந்தில் டுப்லஸ்ஸிஸ் 5 (7) 3-வது பந்தில் விராட் கோலி 0 (1) 6-வது பந்தில் அனுஜ் ராவத் என ஒரே ஓவரில் பெங்களூருவின் டாப் ஆர்டரை காலி செய்தார்.
அதனால் 8/3 என ஆரம்பத்திலேயே திண்டாடிய பெங்களூருவுக்கு அடுத்து வந்த கிளன் மேக்ஸ்வெல் தமிழக வீரர் நடராஜன் வீசிய 4-வது ஓவரில் 12 (11) ரன்களில் ஆட்டமிழக்க 8-வது ஓவரில் இளம் வீரர் பிரபுதேசாய் 15 (20) ரன்களில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார்.
பெங்களூரு 68க்கு ஆல் அவுட்:
அந்த நிலையில் கடந்த போட்டிகளில் சரவெடியாக பேட்டிங் செய்து நல்ல பார்மில் இருந்த தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் காப்பாற்றுவார் எதிர்பார்த்த வேளையில் அவரும் டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். இதர வீரர்களும் ஹைதராபாத்தின் அற்புதமான பந்துவீச்சில் சீட்டுகட்டு சரிவது போல மள்மளவென தங்களது விக்கெட்டுகளை பரிசளித்து நடையை கட்டியதால் 16.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து பெங்களூரு வெறும் 68 ரன்களுக்கு பரிதாபமாக ஆல் அவுட்டானது. ஹைதராபாத் சார்பில் அதிகபட்சமாக பந்துவீச்சில் மிரட்டிய தமிழக வீரர் நடராஜன் மற்றும் யான்சென் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை சாய்த்தனர்.
அதை தொடர்ந்து 69 என்ற சுலபமான இலக்கை துரத்திய ஹைதராபாத் அணிக்கு தொடக்க வீரர் அபிஷேக் சர்மா பவர் பிளே ஓவர்களைப் பயன்படுத்தி அதிரடியாக 8 பவுண்டரி 1 சிக்சர் உட்பட 47 (28) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் கேன் வில்லியம்சன் 16* (17) ராகுல் திரிபாதி 7* (3) ரன்கள் எடுத்து பினிஷிங் செய்ததால் 8 ஓவர்களில் 72/1 ரன்களை எடுத்த ஹைதராபாத் 9 விக்கெட் வித்தியாசத்தில் பிரம்மாண்ட வெற்றி பெற்று இந்த வருடம் பங்கேற்ற 7 போட்டிகளில் 5-வது வெற்றியுடன் புள்ளிப் பட்டியலில் 2-வது இடத்திற்கு முன்னேறியது.
ரசிகர்கள் குமுறல்:
மறுபுறம் இந்த வருடம் ஆரம்பம் முதலே அடுத்தடுத்த வெற்றிகளால் வெற்றி நடை போட்ட பெங்களூரு 8 போட்டிகளில் 5 வெற்றி 3 தோல்வியுடன் புள்ளிப் பட்டியலில் 4-வது இடத்தில் நீடிக்கிறது. ஆனால் இந்த போட்டியில் விராட் கோலி, டு பிளேஸிஸ், மேக்ஸ்வெல் என நட்சத்திர வீரர்கள் இருந்தபோதும் வெறும் 68 ரன்களுக்கு பெங்களூரு ஆல் அவுட்டானது பார்த்த அந்த அணி ரசிகர்கள் குமுறலுக்கு உள்ளாகியுள்ளனர். அதைவிட அனைவருக்கும் ஏப்ரல் 1-ஆம் தேதி ஏப்ரல் ஃபூல் தினம் என்றால் எங்களுக்கு ஏப்ரல் 23-ஆம் தேதிதான் ஃபூல் டே என்று வேதனைப்படும் அளவுக்கு அவர்கள் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
1. ஏனெனில் கடந்த 2013 ஏப்ரல் 23-ஆம் தேதி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடந்த ஐபிஎல் போட்டியில் புனே அணியை புரட்டியெடுத்த கிறிஸ் கெயில் 175* ரன்கள் விளாசியதால் 20 ஓவர்களில் 263/5 ரன்களை சேர்த்த பெங்களூரு பின்னர் 130 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது. அதுதான் ஐபிஎல் வரலாற்றில் பதிவு செய்யப்பட்ட ஆல்-டைம் அதிகபட்ச ஸ்கோராக இதுநாள் வரை இருந்து வருகிறது.
2. ஆனால் ஆசை காட்டி மோசம் செய்வதை போல கடந்த 2017-ஆம் ஆண்டு அதே ஏப்ரல் 23-ஆம் தேதி உலகப் புகழ்பெற்ற கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா 131 ரன்களுக்கு சுருண்டது. ஆனால் அதன்பின் அபாரமாக பந்துவீசிய கொல்கத்தா பெங்களூருவை சுக்குநூறாக உடைத்து வெறும் 9.4 ஓவர்களில் 49 ரன்களுக்குள் சுருட்டியது. அதுதான் ஐபிஎல் வரலாற்றில் பதிவு செய்யப்பட்ட குறைந்தபட்ச ஸ்கோராக இதுநாள் வரை உள்ளது.
3. அந்த நாளுக்கு பின் எப்போதெல்லாம் ஆரம்ப கட்டத்தில் பெங்களூரு அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை விடுகிறதோ அப்போதெல்லாம் எப்படியாவது 49 ரன்களை தாண்டி விடவேண்டும் என்று பெங்களூரு ரசிகர்கள் பிரார்த்தனை செய்வார்கள்.
4. அதேபோன்றதொரு நிலைமை இன்றைய போட்டியில் நிலவிய நிலையில் ரசிகர்களின் பிரார்த்தனையால் 49 ரன்களை தாண்டினாலும் 68 ரன்களுக்கு ஆல் அவுட்டான பெங்களூரு மீண்டும் அதே ஏப்ரல் 23-ஆம் தேதி ஐபிஎல் வரலாற்றில் தனது 2-வது குறைந்தபட்ச ஸ்கோரை பதிவு செய்து மீண்டும் அதே நாளில் ஒரு பரிதாப சாதனை படைத்துள்ளது.
5. இதனால் மீண்டும் இதர அணி ரசிகர்களின் கேலி கிண்டல்களுக்கு உள்ளாகியுள்ள பெங்களூரு ரசிகர்களுக்கு ஏப்ரல் 23-ஆம் தேதியை கேலண்டரில் இருந்து கிழித்து தூக்கி எறியக் கூடிய ஒரு நாளாக பார்க்கிறார்கள்.



