வெறும் 2 ரன்ஸ்.. 5 பரிதாபத்துக்கு பின் சாதித்த மகளிர் ஆர்சிபி.. யூபி அணியை கடைசி ஓவரில் வீழ்த்தியது எப்படி?

- Advertisement -

இந்தியாவில் கோலாகலமாக துவங்கியுள்ள மகளிர் ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் 2024 சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில் பிப்ரவரி 24ஆம் தேதி பெங்களூருவில் நடைபெற்ற இரண்டாவது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் உத்திரப்பிரதேசம் வாரியர்ஸ் அணிகள் மோதின. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற யூபி அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய பெங்களூரு 20 ஓவர்களில் போராடி 157/6 ரன்கள் எடுத்தது.

அந்த அணிக்கு சோபி டேவின் 1, கேப்டன் ஸ்ம்ரிதி மந்தனா 13, எலிஸ் பெரி 8 என நட்சத்திர வீராங்கனைகள் ஆரம்பத்திலேயே குறைந்த ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். இருப்பினும் சபினேனி மேக்னா பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரை சதமடித்து 53 (43) ரன்களும் மிடில் ஆர்டரில் ரிச்சா கோஸ் அதிரடியாக 12 பவுண்டரியுடன் அரை சதம் விளாசி 62 (37) ரன்களும் எடுத்து பெங்களூருவை காப்பாற்றினர்.

- Advertisement -

பெங்களூரு நிம்மதி:
யூபி அணி சார்பில் அதிகபட்சமாக ராஜேஸ்வரி கைக்வாட் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதைத்தொடர்ந்து 158 ரன்களை துரத்திய யூபி அணிக்கு ஆரம்பத்திலேயே கேப்டன் அலிசா ஹீலி 5, விருந்தா தினேஷ் 18 என துவக்க வீராங்கனைகள் குறைந்த ரன்களில் அவுட்டாகி பின்னடைவை ஏற்படுத்தினர். அதனால் ஏற்பட்ட அழுத்தத்தில் மிடில் ஆர்டரில் தஹிளா மெக்ராத் 22 (18), கிரேஸ் ஹாரிஸ் 38 (23), ஸ்வேதா செராவத் 31 (25) என முக்கிய வீராங்கனைகளை சோபனா ஆசா குறைந்த ரன்களில் அவுட்டாக்கினார்.

அந்த நிலையில் வந்த கிரண் நவ்கிர் 1, பூனம் கேம்னர் 14 (7) ரன்களில் அவுட்டாகி வெற்றியை கோட்டை விட்டனர். இறுதியில் சோபி மொலினெக்ஸ் வீசிய கடைசி ஓவரில் யூபி அணிக்கு 11 ரன்கள் தேவைப்பட்டது. அதில் முடிந்தளவுக்கு போராடிய அந்த அணி 9 ரன்கள் மட்டுமே எடுத்தது. குறிப்பாக கடைசியில் தீப்தி சர்மா 13* (9) ரன்கள் எடுத்தும் ஃபினிஷிங் கொடுக்க முடியவில்லை.

- Advertisement -

அதனால் 20 ஓவரில் 155/7 ரன்களுக்கு யூபி அணியை கட்டுப்படுத்திய பெங்களூரு 2 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. அந்த அணிக்கு அதிகபட்சமாக சோபனா ஆசா 4 ஓவரில் 22 ரன்கள் மட்டும் கொடுத்து 5 விக்கெட்டுகள் எடுத்து ஆட்டநாயகி விருதை வென்றார். முன்னதாக கடந்த வருடம் தோற்றுவிக்கப்பட்ட மகளிர் ஐபிஎல் தொடரில் ஸ்மிருதி மந்தனா தலைமையில் களமிறங்கிய பெங்களூரு 5 லீக் போட்டிகளிலும் 5 தோல்விகளை சந்தித்து லீக் சுற்றுடன் வெளியேறியது.

இதையும் படிங்க: ராஞ்சி டெஸ்ட் : 3 ஆவது மற்றும் 4 ஆவது நாள் ஆட்டத்தில் ஏற்படவுள்ள பாதிப்பு – விவரம் இதோ

அதனால் ஆடவர் ஐபிஎல் போலவே மகளிர் ஆர்சிபி அணியும் 5 பரிதாப தோல்விகளை சந்தித்ததாக நிறைய கிண்டல்கள் எழுந்தன. அந்த சூழ்நிலையில் ஒரு வழியாக 5 தொடர் தோல்விகளுக்கு பின் மகளிர் ஐபிஎல் தொடரில் முதல் முறையாக இப்போட்டியில் ஆர்சிபி அணி வெற்றியை பதிவு செய்து நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளது.

Advertisement