ஐபிஎல் 2022 தொடரில் ஏப்ரல் 26-ஆம் தேதி நடைபெற்ற 39-வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஆகிய அணிகள் மோதின. புனே நகரில் நடைபெற்ற அந்தப் போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை அடுத்து களமிறங்கிய ராஜஸ்தானின் தொடக்க வீரர் தேவ்தூத் படிக்கள் 7 (7) ரன்களில் அவுட்டாக ஆச்சரியப்படும் வகையில் அடுத்து களமிறங்கிய அஸ்வின் 4 பவுண்டரி உட்பட 17 (9) ரன்கள் எடுத்து தனது வேலையை செய்து ஆட்டமிழந்தார்.

அந்த நிலையில் கடந்த போட்டிகளில் அதிரடியாக ரன்களைக் குவித்து அடுத்தடுத்த சதமடித்து நல்ல பார்மில் இருக்கும் ஜோஸ் பட்லர் இம்முறை வெறும் 8 (9) ரன்களில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். அதனால் 33/3 என ஆரம்பத்திலேயே தடுமாறிய அந்த அணிக்கு அடுத்து களமிறங்கிய கேப்டன் சஞ்சு சாம்சன் அதிரடியாக 1 பவுண்டரி 3 சிக்சருடன் 27 (21) ரன்கள் எடுத்து அவுட்டானதால் மீண்டும் அந்த அணி 68/4 என தத்தளித்தது.
காப்பாற்றிய பராக்:
அந்த சரிவை சரிசெய்ய மெதுவாக பேட்டிங் செய்த டார்ல் மிட்சேல் 16 (24) ரன்களில் அவுட்டான நிலையில் ராஜஸ்தானின் பினிஷராக கருதப்படும் சிம்ரோன் ஹெட்மையரும் இம்முறை வெறும் 3 (7) ரன்களில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். அதனால் 102/6 என திண்டாடிய அந்த அணி 120 ரன்களைக் கூட தாண்டாது என எதிர்பாக்கப்பட்ட வேளையில் மறுபுறம் இருந்த இளம் வீரர் இயான் பராக் நீண்ட நாட்கள் கழித்து அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்தி 3 பவுண்டரி 4 சிக்சர்கள் உட்பட 56* (31) ரன்களை விளாசி கடைசி வரை அவுட்டாகாமல் ராஜஸ்தானின் மானத்தை காப்பாற்றி போராட்ட பினிசிங் கொடுத்தார்.

அவரின் ஆட்டத்தால் தப்பிய அந்த அணி 20 ஓவர்களில் 144/8 ரன்களை எடுக்க பெங்களூரு சார்பில் ஹேசல்வுட், சிராஜ், ஹசரங்கா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர். அதைத்தொடர்ந்து 145 என்ற சுலபமான இலக்கை துரத்திய பெங்களூருவுக்கு கடந்த 2 போட்டிகளில் அடுத்தடுத்து கோல்டன் டக் அவுட்டாகி மோசமான பார்மில் தவிக்கும் விராட் கோலி இம்முறை தொடக்க வீரராக களமிறங்கிய போதிலும் 9 (10) ரன்களில் அவுட்டாகி மீண்டும் ஏமாற்ற கேப்டன் டு பிளேஸிசும் 23 (21) ரன்களில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார்.
ராஜஸ்தான் சூப்பர் பவுலிங்:
அந்த சரிவை பயன்படுத்திய ராஜஸ்தான் பவுலர்கள் மேலும் அற்புதமாக பந்துவீசி பெங்களூருவை மடக்கி பிடிக்கும் வகையில் அடுத்து களமிறங்கிய முக்கிய வீரர் கிளைமேக்லை டக் அவுட் செய்து ரஜத் படிதர் 16 (16), பிரபுதேசாய் 2 (7) போன்ற இளம் வீரர்களை அடுத்தடுத்து காலி செய்தது. அந்த நிலைமையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தினேஷ் கார்த்திக்கும் துரதிருஷ்டவசமாக 6 (4) ரன்களில் ரன் அவுட்டாக மற்றொரு அதிரடி இளம் வீரர் சபாஷ் அஹமட் 17 (27) ரன்களில் அவுட்டானதால் பெங்களூருவின் தோல்வி உறுதியானது. இறுதியில் ஹசரங்கா அதிரடியாக 18 (13) ரன்கள் எடுத்தாலும் இதர வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால் 19.3 ஓவர்களில் வெறும் 115 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த பெங்களூரு பரிதாபமாக தோற்றது.

ராஜஸ்தான் சார்பில் பந்துவீச்சில் அசத்திய குல்தீப் சிங் 4 விக்கெட்டுகளையும் தமிழக வீரர் அஷ்வின் 3 விக்கெட்டுகளையும் சாய்த்தனர். பேட்டிங்கில் சொதப்பி குறைவான ரன்களை எடுத்த போதிலும் பந்துவீச்சில் தைரியமாக செயல்பட்ட ராஜஸ்தான் இந்த சிறப்பான வெற்றியால் இதுவரை பங்கேற்ற 8 போட்டிகளில் 6-வது வெற்றியை பதிவு செய்து புள்ளிப் பட்டியலில் மீண்டும் முதலிடத்தை பிடித்து அசத்தியது.
சொதப்பல் பெங்களூரு:
மறுபுறம் பந்துவீச்சில் அபாரமாக செயல்பட்ட பெங்களூரு 145 என்ற சுலபமான இலக்கை எட்டிப் பிடிக்க முடியாமல் படுதோல்வியை சந்தித்தது அந்த அணியை ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்தது. இந்த தோல்வியால் பங்கேற்ற 9 போட்டிகளில் 4-வது தோல்வியை பதிவு செய்த அந்த அணி 5-வது இடத்திற்கு தள்ளப்பட்டது. இத்தனைக்கும் அந்த அணியில் விராட் கோலி, டு பிளேஸிஸ், கிளன் மேக்ஸ்வெல் என நட்சத்திர வீரர்கள் இருந்தாலும் அந்த முக்கிய வீரர்கள் கணிசமான அளவு ரன்களைக் கூட எடுக்க தவறியதே இந்த தோல்விக்கு முக்கிய காரணமாக இருந்தது. குறிப்பாக கடந்த போட்டிகளில் இதுபோன்ற கடைசி நேரத்தில் களமிறங்கி அதிரடியாக ரன்களை குவித்து துணிச்சலாக செயல்பட்ட தினேஷ் கார்த்திக்கும் இந்த முறை துரதிஷ்டவசமாக ரன் அவுட்டானது தோல்வியை உறுதி செய்தது.

இந்த போட்டி மட்டுமல்லாது எப்போதுமே நட்சத்திர வீரர்களை கொண்ட அணியாக திகழும் பெங்களூரு வரலாற்றில் பலமுறை இது போல சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி கையில் இருந்த வெற்றிகளை பலமுறை எதிரணிக்கு பரிசளித்ததை பார்த்துள்ளோம். ஆனால் இப்போது கேப்டனாக டு ப்ளேசிஸ் வந்தபின் அது மாறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஹைதெராபாத்க்கு எதிராக 68 ரன்களுக்கு சுருண்டு இப்போட்டியில் மீண்டும் வழக்கம் போல சொதப்பி தோல்வி அடைந்த விதத்தை பார்த்தால் கேப்டன் மாறினாலும் நாங்கள் எப்போது மாற மாட்டோம் என்று பெங்களூரு ஸ்டேட்மென்ட் கொடுத்துள்ளது என்றே கூறலாம்.



