18 பந்தில் 20 ரன்ஸ்.. சோக் செய்த நடப்பு சாம்பியன் மும்பையை வீட்டுக்கு அனுப்பிய ஆர்சிபி.. ஃபைனல் சென்றது எப்படி?

WPL 24 Eliminator
- Advertisement -

மகளிர் ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அதில் மார்ச் 15ஆம் தேதி டெல்லியில் நடைபெற்ற எலிமினேட்டர் போட்டியில் புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடம் பிடித்த நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் மற்றும் 3வது இடம் பிடித்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. அதில் டாஸ் வென்ற பெங்களூரு முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

அதைத் தொடர்ந்து களமிறங்கிய அந்த அணிக்கு துவக்க வீராங்கனை சோபி டேவின் அதிரடியாக விளையாட முயற்சித்து 10 (7) ரன்னில் அவுட்டானார். அடுத்த ஓவரிலேயே கேப்டன் ஸ்மிருதி மந்தனாவும் 10 (7) ரன்களில் அவுட்டாகி ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்தார். போதாகுறைக்கு அடுத்து வந்த திசா கசத் டக் அவுட்டாக பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரிச்சா கோஸ் 14 (19) ரன்களில் தடுமாறி அவுட்டானார்.

- Advertisement -

அதனால் 49/4 என தடுமாற்றமான துவக்கத்தை பெற்ற அந்த அணிக்கு நட்சத்திர வீராங்கனை எலிஸ் பெரி மீண்டும் நங்கூரமாக நின்று போராடினார். ஆனால் அவருக்கு கை கொடுக்க முயற்சித்த சோபி மோலினக்ஸ் 11 (18) ரன்களில் ஆட்டமிழந்தார். இருப்பினும் எதிர்ப்புறம் தொடர்ந்து சிறப்பாக விளையாடிய எலிஸ் பெரி 8 பவுண்டரி 1 சிக்சருடன் அரை சதமடித்து 66 (50) ரன்கள் குவித்து போராடி அவுட்டானார். கடைசியில் வேர்கம் அதிரடியாக 18* (10) ரன்கள் எடுத்ததால் ஓரளவு தப்பிய பெங்களூரு 20 ஓவர்களில் 135/6 ரன்கள் எடுத்தது.

மும்பை சார்பில் அதிகபட்சமாக ஹைலே மேத்யூஸ், நட் ஸ்கீவர், சைக்கா இசாய்க் தலா 2 விக்கெட்டுகளை சாய்த்தனர். அதைத்தொடர்ந்து 136 ரன்களை துரத்திய மும்பைக்கு நிதானமாக விளையாடிய ஹைலே மேத்யூஸ் 15 (14) ரன்களில் அவுட்டாக மறுபுறம் தடுமாறிய யாஷிகா பாட்டியா 19 (27) ரன்களில் எலிஸ் பெரி வேகத்தில் கிளீன் போல்டானார். அப்போது வந்து அதிரடியாக விளையாட முயற்சித்த நட் ஸ்கீவர் 23 (17) ரன்களில் வேர்ஹம் வேகத்தில் கிளீன் போல்டானார்.

- Advertisement -

அதனால் 68/3 என தடுமாறிய மும்பைக்கு அடுத்ததாக ஜோடி சேர்ந்த கேப்டன் ஹர்மன்ப்ரீத் நிதானமாக விளையாடிய போதிலும் 33 (30) ரன்களில் முக்கிய நேரத்தில் ஆட்டமிழந்தார். அப்போது வந்த சஞ்சனா 1 ரன்னில் அவுட்டானாலும் எதிர்ப்புறம் எமிலியா கேர் நங்கூரமாக விளையாடியதால் வெற்றியை நெருங்கிய மும்பைக்கு கடைசி ஓவரில் 12 ரன்கள் தேவைப்பட்டது. ஆசா சோபனா வீசிய அந்த ஓவரில் பூஜா வஸ்திரகர் 4 ரன்களில் அவுட்டான நிலையில் எதிர்ப்புறம் 27* (25) ரன்கள் எடுத்து போராடிய எமிலியா கெர் ஃபினிஷிங் செய்ய தவறினார்.

அதனால் வெறும் 5 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்ற பெங்களூரு வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதிப்போட்டியில் டெல்லியை எதிர்கொள்ள தகுதி பெற்றது. குறிப்பாக பேட்டிங்கில் 150 ரன்கள் கூட எடுக்கவில்லை என்றாலும் அழுத்தமான சமயத்தில் சொதப்பாமல் அசத்திய அந்த அணி முதல் முறையாக பைனலுக்கு தகுதி பெற்றுள்ளது ஆர்சிபி ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதையும் படிங்க: 43/3 என சரிந்தும் விட்டுக் கொடுக்காத ஆட்டம்.. பதிலுக்கு வங்கதேசத்தை அடித்து சமமான பதிலடி கொடுத்த இலங்கை

பெங்களூரு சார்பில் அதிகபட்சமாக ஸ்ரேயங்கா பட்டேல் 2 விக்கெட்டுகளை எடுத்தார். மறுபுறம் வெறும் 136 ரன்களை அடிக்க முடியாத மும்பை கடைசி 18 பந்துகளில் வெறும் 20 ரன்கள் எடுக்க முடியாமல் சோக் செய்து தோல்வியை சந்தித்ததால் சாம்பியன் பட்டத்தை வைக்கும் வாய்ப்பை கோட்டை விட்டு வீட்டுக்கு கிளம்பியது.

Advertisement