IPL 2023 : இந்த பவுலிங்க வெச்சுகிட்டு எப்போவும் கப் ஜெயிக்க முடியாது – மோசமான ஐபிஎல் வரலாற்று சாதனை படைத்த ஆர்சிபி

RCB vs MI Josh hazlewood Nehal Wathera
- Advertisement -

இந்திய கிரிக்கெட் ரசிகர்களை பரப்பரப்பான போட்டிகளுடன் மகிழ்வித்து வரும் ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் மே 9ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு வான்கடே மைதானத்தில் நடைபெற்ற 54வது லீக் போட்டியில் பெங்களூருவை 6 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை தோற்கடித்தது. அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு விராட் கோலி 1 (4) ரன்னில் அவுட்டாகியும் கேப்டன் டு பிளேஸிஸ் 65 (41) ரன்களும் கிளன் மேக்ஸ்வெல் 68 (38) ரன்களும் எடுத்ததால் 220 ரன்களை தொடும் நல்ல அடித்தளத்தை பெற்றது. ஆனால் கடைசி நேரத்தில் தினேஷ் கார்த்திக் 30 (18) ரன்கள் எடுத்த போதிலும் கேதார் ஜாதவ் 12* (10) ரன்கள் எடுத்து சொதப்பியதால் 20 ஓவர்களில் 199/6 ரன்கள் மட்டுமே எடுத்தது.

அந்தளவுக்கு இந்த சீசனில் முதல் முறையாக டெத் ஓவர்களில் அசத்திய மும்பை சார்பில் அதிகபட்சமாக ஜேசன் பேரன்ஃடாப் 3 விக்கெட்டுகளை சாய்த்தார். அதைத்தொடர்ந்து 200 ரன்களை துரத்திய மும்பைக்கு சரவெடியாக விளையாடிய இசான் கிசான் 51 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து 4 பவுண்டரி 4 சிக்சருடன் 42 (21) ரன்களில் ஆட்டமிழந்தார். அவருடன் தடுமாறிய கேப்டன் ரோகித் சர்மா 7 (8) ரன்னில் அவுட்டானாலும் அடுத்து வந்த சூரியகுமார் யாதவ் முதல் பந்திலிருந்தே தனது ஸ்டைலில் பவுண்டரிகளையும் சிக்ஸர்களையும் பறக்க விட்டார்.

- Advertisement -

எப்போவுமே ஜெயிக்க முடியாது:
குறிப்பாக பொதுவாகவே சுமாராக பந்து வீசும் பெங்களூரு பவுலர்களை நன்கு செட்டிலாகி போதும் போதும் என்று சொல்லும் அளவுக்கு முரட்டுத்தனமாக அடித்த அவர் மைதானத்தின் நாலாபுறங்களிலும் சரமாரியாக வெளுத்து வாங்கி 3வது விக்கெட்டுக்கு 140 ரன்கள் பார்ட்னர்சிப் அமைத்து 7 பவுண்டரி 6 சிக்ஸருடன் 83 (45) ரன்கள் குவித்து வெற்றியை உறுதி செய்து அவுட்டானார். அவருடன் நேஹல் வதேரா 4 பவுண்டரி 3 சிக்ஸருடன் 52* (34) ரன்கள் விளாசியதால் 16.3 ஓவரிலேயே இலக்க எட்டிய மும்பை புள்ளி பட்டியலில் 8வது இடத்திலிருந்து 3வது இடத்திற்கு முன்னேறி அசத்தியது.

மறுபுறம் அதிகபட்சமாக தலா 2 விக்கெட்டுகளை எடுத்த ஹஸரங்கா மற்றும் விஜயகுமார் மட்டுமின்றி முகமது சிராஜ், ஹர்ஷல் படேல், ஹேசல்வுட் என அனைத்து பெங்களூரு பவுலர்களும் வள்ளல் பரம்பரையாக இந்த போட்டியில் மோசமாக பந்து வீசி 10க்கும் மேற்பட்ட எக்கனாமியில் ரன்களை வாரி வழங்கினர். பொதுவாகவே பெங்களூரு அணியில் விராட் கோலி, கிறிஸ் கெயில், ஏபி டீ வில்லியர்ஸ் தற்போது டு பிளேஸிஸ், மேக்ஸ்வெல் போன்ற பேட்ஸ்மேன்கள் காலம் காலமாக முழுமூச்சுடன் பெரிய ரன்களை அடித்து வெற்றிக்கு போராடுவதும் அதை அப்படியே பந்து வீச்சில் கொஞ்சமும் பொறுப்பின்றி அந்த அணியின் பவுலர்கள் ரன் மெசினாக எதிரணிக்கு வாரி வழங்கி வெற்றியை தாரை வார்ப்பதும் தொடர் கதையாகி வருகிறது.

- Advertisement -

அதற்கு சாட்சியாக இந்த சீசனில் கொல்கத்தாவுக்கு எதிராக 204/7, லக்னோவுக்கு எதிராக 213/9, சென்னைக்கு எதிராக 226/8, மீண்டும் கொல்கத்தாவுக்கு எதிராக 200/5, நேற்று மும்பைக்கு எதிராக 200/4 என இதுவரை விளையாடிய 11 போட்டிகளில் 5இல் 200 அல்லது அதற்கு மேற்பட்ட ரன்களை பெங்களூரு பவுலர்கள் கொடுத்துள்ளனர்.

இதன் வாயிலாக ஐபிஎல் வரலாற்றில் ஒரே சீசனில் 5 முறை 200 அல்லது அதற்கு மேற்பட்ட ரன்களை கொடுத்த முதல் அணி என்ற மோசமான சாதனையை பெங்களூரு படைத்துள்ளது. அந்த வகையில் பேட்ஸ்மேன்கள் போராடி எடுக்கும் ரன்களை மறுபுறம் பவுலர்கள் கட்டுப்படுத்தாமல் வாரி வழங்குவதே பெங்களூருவின் தோல்விக்கு காரணமாக அமைந்து வருகிறது.

- Advertisement -

இத்தனைக்கும் டு பிளேஸிஸ் புதிய கேப்டனாக வந்தும் இதே நிலைமை நீடிப்பது அந்த அணி ரசிகர்களை சோகமடைய வைக்கிறது. அதன் காரணமாக இந்த பவுலிங்கை வைத்துக்கொண்டு எப்போதுமே கோப்பையை வெல்ல முடியாது என்று பெங்களூருவை வழக்கம் போல எதிரணி ரசிகர்கள் கலாய்கின்றனர்.

இதையும் படிங்க: MI vs RCB : ஐ.பி.எல் வரலாற்றில் சேஸிங்கில் யாரும் நிகழ்த்தாத சாதனையை நிகழ்த்திய – மும்பை இந்தியன்ஸ் அணி

இந்த நிலையில் 11 போட்டிகளில் 6வது தோல்வியை பதிவு செய்துள்ள பெங்களூரு பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்று தங்களுடைய எஞ்சிய போட்டிகளில் வென்றாக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இருப்பினும் அதற்கு இதர அணிகள் போட்டியாக இருப்பதால் அதற்கான வாய்ப்பு வெறும் 21% மட்டுமே இருப்பது பெங்களூரு ரசிகர்களை கவலையடைய வைத்துள்ளது.

Advertisement