ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் குஜராத், பஞ்சாப், பெங்களூரு, மும்பை அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றன. அதில் தங்களுடைய முதல் கோப்பையை வெல்லும் லட்சியத்துடன் விளையாடி வரும் பெங்களூரு மே 23ஆம் தேதி ஹைதராபாத் அணியிடம் 42 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. அதனால் இந்த வருடம் வெளியூர் மண்ணில் முதல் முறையாக பெங்களூரு தோல்வியை பதிவு செய்தது.
அத்துடன் 13 போட்டிகளில் நான்காவது தோல்வியை சந்தித்த அந்த அணி புள்ளிப்பட்டியலில் 3வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. அதன் காரணமாக பிளே ஆஃப் சுற்றில் மிகவும் அதிர்ஷமிக்க குவாலிபயர் 1 போட்டிக்குத் தகுதி பெறும் வாய்ப்பை பெங்களூரு 90% கோட்டை விட்டுள்ளது. பிளே ஆஃப் குவாலிஃபயர் 1 போட்டியில் வென்றால் நேரடியாக ஃபைனலுக்கு செல்லலாம்.
அதிர்ஷ்டமான வாய்ப்பு:
ஒருவேளை தோற்றாலும் எலிமினேட்டரில் வென்று வரும் அணியுடன் குவாலிபயர் 2 போட்டியில் மோதலாம். அந்தப் போட்டியில் வென்றால் மீண்டும் இறுதிப் போட்டிக்கு செல்லும் வாய்ப்பை பெறலாம். அப்படிப்பட்ட அதிர்ஷ்டமிக்க குவாலிபயர் 2 போட்டியில் விளையாட வேண்டுமெனில் புள்ளிப்பட்டியலில் முதல் 2 இடங்களை பிடிக்க வேண்டும்.
அந்த அதிர்ஷ்டமான வாய்ப்பை பிடிப்பதில் தான் தற்போது ஆர்சிபி அணிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. தற்சமயத்தில் 3வது இடத்தில் இருக்கும் பெங்களூரு டாப் 2 இடத்திற்குள் நுழைய வேண்டுமெனில் அதற்கு முதலில் மே 27ஆம் தேதி நடைபெறும் தங்களுடைய கடைசிப் போட்டியில் லக்னோவை தோற்கடிக்க வேண்டும். ஆனால் அதற்கு முன்பாக மே 25ஆம் தேதி முதலிடத்தில் இருக்கும் குஜராத் அணியை கடைசி இடத்தில் திண்டாடும் சிஎஸ்கே தோற்கடிக்க வேண்டும்.
சென்னை, மும்பையின் ஹெல்ப்:
அது போக மே 26 ஆம் தேதி நடைபெறும் போட்டியில் 2வது இடத்தில் இருக்கும் பஞ்சாப் அணியை மும்பை வீழ்த்த வேண்டும். இப்படி நடந்தால் பெங்களூரு அணி 19 புள்ளிகளுடன் டாப் 2 இடத்தைப் பிடித்து குவாலிபயர் 1 போட்டிக்கு தகுதி பெறும். ஆனால் தற்போது இருக்கும் ஃபார்முக்கு சென்னை தங்களுடைய கடைசி போட்டியில் வெல்லுமா என்பது சந்தேகமாகும்.
இதையும் படிங்க: RCB Team2021இல் விராட் கோலிக்கு செய்த அநியாயத்தை இன்று நியாயமாக மாற்றிய பிசிசிஐ.. விவரம் இதோ
அந்த வகையில் குவாலிபயர் 1 போட்டிக்கு தகுதி பெறுவதற்காக சிஎஸ்கே மற்றும் மும்பை அணிகளிடம் ஆர்சிபி மறைமுகமாக உதவி கேட்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. ஒருவேளை பெங்களூரு தங்களுடைய கடைசி போட்டியில் தோற்றால் வேறு வழியின்றி எலிமினேட்டர் போட்டியில் விளையாட வேண்டும். பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றும் பெங்களூரு அணி இந்த பரிதாப நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது ஆர்சிபி ரசிகர்களிடம் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.



