இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலியையும், ஆர்.சி.பி அணியையும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இருந்து பிரித்தே பார்க்க முடியாத வரலாறு உள்ளது. ஏனெனில் கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் இந்த ஐ.பி.எல் தொடரின் 19 சீசன்களிலும் ஒரு வீரர் ஒரே அணிக்காக மட்டும் விளையாடி வருகிறார் என்றால் அது விராட் கோலி மட்டும் தான். 17 ஆண்டுகளாக தனது முதல் ஐ.பி.எல் கோப்பைக்காக காத்திருந்த விராட் கோலிக்கு இறுதியாக 2025-ஆம் ஆண்டு 18 ஆவது சீசனில் முதல் கோப்பை கிடைத்தது.
விராட் கோலியின் எதிர்காலம் குறித்து பேசிய : ராஜேஷ் மேனன்
அதனை தொடர்ந்து 2026 சாம்பியன் பட்டத்தையும் வென்று ஆர்.சி.பி அணி சாதனை நிகழ்த்தியது. சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகளுக்கு அடுத்து மூன்றாவது அணியாக அடுத்தடுத்த ஆண்டு சாம்பியன் பட்டத்தை வென்ற அணியாக ஆர்.சி.பி அணி இந்த ஆண்டு சாதனை நிகழ்த்தியிருந்தது. இதன் காரணமாக எதிர்வரும் 2027 ஐ.பி.எல் தொடரின் மீதான எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை தொட்டுள்ளது.
அதோடு மூன்றாவது முறை ஆர்.சி.பி அணி கோப்பையை வென்று ஹாட்ரிக் சாதனையையும் நிகழ்த்தும் என ஆர்.சி.பி அணியின் ரசிகர்கள் அந்த அணியை புகழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது 37 வயதாகும் விராட் கோலி ஆர்.சி.பி அணிக்காக இன்னும் எத்தனை ஆண்டுகள் விளையாடுவார்? என்ற கேள்வியும் அதிகரித்துள்ளது. இவ்வேளையில் ஆர்.சி.பி அணியில் விராட் கோலி எதிர்காலம் குறித்து பேசிய அந்த அணியின் சி.இ.ஓ ராஜேஷ் மேனன் கூறியதாவது :
என்னை பொறுத்தவரை ஆர்.சி.பி அணிக்காக இன்னும் விராட் கோலியின் பயணம் நீண்டகாலம் எஞ்சியுள்ளது. ஆரம்பம் முதலே ஆர்.சி.பி அணியுடன் பயணித்து வரும் விராட் கோலி எங்களது அணியின் முக்கிய வீரராக இருந்து வருகிறார். இன்னும் மூன்று நான்கு ஆண்டுகள் அவரால் மிக எளிதாக எங்கள் அணியில் விளையாட முடியும். அந்த அளவிற்கு அவர் முழு உடற்தகுதியுடனும், வெற்றி வேட்கையோடும் இருக்கிறார்.
இதையும் படிங்க : விராட் கோலியின் கம்பேக் எப்போது? ரசிகர்களுக்காக வெளியான நற்செய்தி – விவரம் இதோ
ஒவ்வொரு ஆண்டும் அவர் ஆர்.சி.பி அணிக்காக ரன் குவிக்கும் விதம் பிரமாதமாக இருந்து வருகிறது. அடுத்த மூன்று நான்கு ஆண்டுகள் அவர் எங்களது அணியில் விளையாடுவதற்கு எந்த ஒரு பிரச்சனையும் இருக்காது. அந்த அளவிற்கு அவர் தற்போதும் முழு உடற்தகுதியுடன் இருக்கிறார் என ராஜேஷ் மேனன் கூறியுள்ளார்.



