சரியான திட்டத்துடன் எளிதாக சன் ரைசர்ஸ் அணியை வீழ்த்திய பெங்களூரு – என்ன நடந்தது ?

RCB vs SRH Josh Hazelwood
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடரில் மே 8-ஆம் தேதி நடைபெற்ற 2 போட்டிகளில் மதியம் 3.30 மணிக்கு நடைபெற்ற 54-வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் மோதின. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற அப்போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்ததை அடுத்து களமிறங்கிய அந்த அணியின் நட்சத்திர தொடக்க வீரர் விராட் கோலி சந்தித்த முதல் பந்திலேயே கோல்டன் டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார்.

Virat Kohli Golden Duck

- Advertisement -

சமீபகாலங்களாகவே பார்ம்ன்றி தவித்து வரும் அவர் இந்த வருடம் ஏற்கனவே 2 போட்டிகளில் அடுத்தடுத்து கோல்டன் டக் அவுட்டாகி இருந்த நிலையில் தற்போது வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரே சீசனில் 3-வது முறையாக கோல்டன் டக் அவுட்டாகி அதிர்ச்சியளித்தார். அதனால் 0/1 என மோசமான தொடக்கத்தை பெற்ற பெங்களூருவுக்கு அடுத்து களமிறங்கிய ரஜத் படிடார் உடன் ஜோடி சேர்ந்த மற்றொரு தொடக்க வீரர் மற்றும் கேப்டன் டுப்லஸ்ஸிஸ் பொறுப்பாகவும் அதிரடியாகவும் தனது அணியை மீட்டெடுக்க தொடங்கினார். 2-வது விக்கெட்டுக்கு 105 ரன்கள் அற்புதமான பார்ட்னர்ஷிப் அமைத்த இந்த ஜோடியில் 4 பவுண்டரி 2 சிக்சருடன் 48 (38) ரன்கள் எடுத்து படிடார் அவுட்டானார்.

டிகே சரவெடி:
அடுத்து களமிறங்கிய நட்சத்திரம் கிளன் மேக்ஸ்வெல் தனது பங்கிற்கு 3 பவுண்டரி 2 சிக்சருடன் 33 (24) ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க மறுபுறம் தொடர்ந்து நங்கூரமாக நின்ற டுப்லஸ்ஸிஸ் 8 பவுண்டரி 2 சிக்சருடன் 73* (50) ரன்கள் எடுத்து கடைசி வரை அவுட்டாகாமல் இருந்தார். ஆனால் கடைசி நேரத்தில் களமிறங்கி சரவெடியாக வெடித்த தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் கடைசி ஓவரில் ஹாட்ரிக் சிக்சர் உட்பட வெறும் 8 பந்தில் 1 பவுண்டரி 4 சிக்சர்களுடன் 30* ரன்கள் எடுத்து மிரட்டல் பினிஷிங் கொடுத்ததால் 20 ஓவர்களில் பெங்களூரு 192/3 ரன்கள் எடுத்தது. ஹைதராபாத் சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக ஜகதீசா சுசித் 2 விக்கெட்டுகளை எடுத்தார்.

Dinesh Karthi 66

அதை தொடர்ந்து 193 என்ற கடின இலக்கை துரத்திய ஹைதராபாத்துக்கு முதல் ஓவரிலேயே 1 பந்து கூட சந்திக்காமல் கேப்டன் கேன் வில்லியம்சன் டக் அவுட்டாக அதே ஓவரில் மற்றொரு தொடக்க வீரர் அபிஷேக் சர்மாவும் டக் அவுட்டாகி அதிர்ச்சியளித்தார். அதனால் 1/2 என்ற படுமோசமான தொடக்கத்தை பெற்ற ஹைதராபாத்துக்கு அடுத்து ஜோடி சேர்ந்த ஐடன் மார்க்ரம் – ராகுல் திரிபாதி ஆகியோர் 3-வது விக்கெட்டுக்கு பொறுப்பான 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து தங்களது அணியை மீட்டெடுக்க முயற்சித்தனர்.

- Advertisement -

சரிந்த ஹைதெராபாத்:
அந்த சமயத்தில் 21 (27) எடுத்திருந்த மார்க்ரம் அவுட்டாகி சென்ற நிலையில் அடுத்து வந்த நிகோலஸ் பூரன் அதிரடியாக 19 (14) ரன்கள் எடுத்தாலும் பெரிய ரன்களை எடுக்காமல் அவுட்டாகி மீண்டும் ஹைதராபாத்துக்கு பின்னடைவை கொடுத்தார். ஒரு கட்டத்தில் 6 பவுண்டரி 2 சிக்சருடன் அரைசதம் கடந்து 58 (37) ரன்களுடன் போராடிய ராகுல் திரிபாதியும் அவுட்டானதால் 114/6 என ஹைதராபாத்தின் வெற்றி கேள்விக்குறியானது. அந்த நிலையில் அடுத்து வந்த ஷசாங்க் சிங், கார்த்திக் தியாகி, உம்ரான் மாலிக் போன்ற வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால் திடீரென 114/9 என சரிந்த ஹைதராபாத்தின் தோல்வி உறுதியானது.

இறுதிவரை 19.2 ஓவரில் 125 ரன்களுக்கு சுருண்ட ஹைதராபாத் பரிதாபமாக தோற்றது. அதனால் 67 ரன்கள் வித்தியாசத்தில் பெரிய வெற்றியை சுவைத்த பெங்களூருவுக்கு பந்துவீச்சில் அதிகபட்சமாக மாயாஜாலம் நிகழ்த்திய வணிந்து ஹசரங்கா 5 விக்கெட்டுகள் எடுத்தார். இதனால் பங்கேற்ற 12 போட்டிகளில் 7-வது வெற்றியை பதிவு செய்த அந்த அணி புள்ளி பட்டியலில் 4-வது இடத்திற்கு முன்னேறி கிட்டத்தட்ட பிளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்துவிட்டது.

- Advertisement -

சூப்பர் ப்ளான்:
முன்னதாக இந்த போட்டி பகல் நேரத்தில் நடைபெற்றதால் பிட்ச் பேட்டிங்க்கு சாதகமாக இருக்கும் என்பதை சரியாக கணித்த பெங்களூரு கேப்டன் டு பிளசிஸ் சேசிங்க்கு பதில் தைரியமாக முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். அதற்கேற்றார் போல் விராட் கோலி அவுட்டான போதிலும் எஞ்சிய பேட்ஸ்மேன்கள் அதிரடியாக ரன்களை குவித்தனர். குறிப்பாக வெறும் 8 பந்தில் தினேஷ் கார்த்திக் 30 ரன்கள் எடுத்தது போட்டியில் மிகப்பெரிய திருப்பு முனையை ஏற்படுத்தியது.

Kane Williamson Abishek Sharma SRH

அத்துடன் 193 என்ற பெரிய இலக்கை சேசிங் செய்கையில் ஹைதராபாத்தில் மிடில் ஆர்டரில் பினிஷிங் செய்யும் அளவுக்கு பெரிய வீரர்கள் இல்லாத நிலையில் தொடக்க வீரர்கள் இருவருமே முதல் ஓவரிலேயே டக் அவுட்டானது ஆரம்பத்திலேயே தோல்வி உறுதி செய்தது. மேலும் மிடில் ஆர்டரில் ராகுல் திரிபாதி தவிர கடந்த போட்டிகளில் வெற்றியை தேடி கொடுத்த ஐடன் மார்க்ரம் – நிகோலஸ் பூரன் ஜோடி இம்முறை பெரிய ரன்கள் எடுக்க தவறியதால் அந்த அணி போராடாமல் கூட மோசமான தோல்வியை சந்தித்தது.

ஆரம்பத்தில் அடுத்தடுத்த தோல்விகளால் கடைசி இடத்தில் திண்டாடிய ஹைதராபாத் அதன்பின் தொடர்ச்சியாக 5 வெற்றிகளை பெற்று டாப் 4 இடங்களுக்குள் நுழைந்தது. ஆனால் அதன்பின் வரிசையாக 4 தோல்விகளை பெற்று 11 போட்டிகளில் 6-வது தோல்வியை பதிவு செய்துள்ளாதல் அந்த அணியின் பிளே ஆப் சுற்று வாய்ப்பு கேள்விக்குறியாகியுள்ளது.

Advertisement