ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 24ஆம் தேதி பெங்களூருவில் 42வது போட்டி நடைபெற்றது. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் பெங்களூருவுக்கு எதிராக முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய பெங்களூரு 20 ஓவரில் சிறப்பாக விளையாடி 205-5 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக விராட் கோலி 70, தேவ்தூத் படிக்கல் 50 ரன்கள் எடுத்தனர்.
ராஜஸ்தான் அணிக்கு அதிகபட்சமாக சந்திப் சர்மா 2 விக்கெட்டுகளை சாய்த்தார். அடுத்த விளையாடிய ராஜஸ்தான் அணிக்கு சூரியவன்சி 16 (12) ரன்னில் அவுட்டானார். ஆனால் மறுபுறம் அதிரடியாக விளையாடிய ஜெய்ஸ்வால் வெறும் 19 பந்தில் 49 ரன்கள் விளாசி மிரட்டிய போது ஹேசல்வுட் வேகத்தில் விக்கெட்டை இழந்தார்.
பெங்களூரு வெற்றி:
அடுத்து வந்த கேப்டன் ரியான் பராக் அதிரடி காட்டியதால் 9 ஓவரில் 110/2 என்ற நிலையில் இருந்த ராஜஸ்தான் கையில் வெற்றியை வைத்திருந்தது என்றே சொல்லலாம். ஆனால் அப்போது அவரை 22 (10) ரன்னில் காலி செய்த க்ருனால் பாண்டியா மறுபுறம் அதிரடி காட்ட முயற்சித்த நித்திஷ் ராணாவையும் 28 ரன்னில் அவுட்டாக்கினார். அதனால் சரிவை சந்தித்த ராஜஸ்தானுக்கு நிதானமாக விளையாட முயற்சித்த ஹெட்மயரை 11 ரன்னில் ஹேசல்வுட் அவுட்டாக்கினார்.
மறுபுறம் நங்கூரமாக விளையாடி ராஜஸ்தானை வெற்றி பாதைக்கு அழைத்து வந்த துருவ் ஜூரேலையும் அவர் 47 (34) ரன்னில் தக்க சமயத்தில் அவுட்டாக்கியது போட்டியில் திருப்புமுனையாக அமைந்தது. ஏனெனில் அடுத்து வந்த சுபம் துபே உள்ளிட்ட வீரர்களால் ஃபினிஷிங் செய்ய முடியவில்லை. அதனால் 20 ஓவரில் ராஜஸ்தானை 194-9 ரன்களுக்கு கட்டுப்படுத்திய பெங்களூரு 11 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
ராஜஸ்தான் பரிதாபம்:
அந்த அணிக்கு அதிகபட்சமாக ஜோஸ் ஹேசல்வுட் 4 விக்கெட்டுகளை எடுத்து ஆட்டநாயகன் விருதையும் வென்றார். இதையும் சேர்த்து 9 போட்டிகளில் 6வது வெற்றியைப் பெற்ற பெங்களூரு புள்ளிப்பட்டியலில் மும்பையை முந்தி மூன்றாவது இடத்திற்கு முன்னேறியது. அதனால் அந்த அணி பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை நெருங்கியுள்ளது.
இதையும் படிங்க: அம்பயரும் தானே காசு வாங்குறாங்க.. கொஞ்சம் வெய்ட் பண்ணா என்ன? இஷான் கிஷான் தவறை கலாய்த்த சேவாக்
அத்துடன் இந்த வருடம் தங்களது சொந்த ஊரில் இருக்கும் சின்னசாமி மைதானத்தில் முதல் வெற்றியை பெற்று பெங்களூரு நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளது. மறுபுறம் மீண்டும் ஃபினிஷிங் செய்ய முடியாமல் வெற்றியை கோட்டை விட்ட ராஜஸ்தான் 2009 – 2010க்குப்பின் தொடர்ந்து 5 போட்டிகளில் 5 தோல்விகளை சந்தித்துள்ளது. மேலும் இந்த வருடம் சிஎஸ்கே அணிக்குப்பின் 5 தொடர் தோல்விகளை சந்தித்த அணியாகவும் ராஜஸ்தான் மோசமான சாதனை படைத்துள்ளது.



