RCB vs MI : போராடிய திலக் வர்மா, தடவிய மும்பையை தாறுமாறாக அடித்து சாதனையுடன் சாய்த்த விராட் – டு பிளேஸிஸ்

RCB vs MI
- Advertisement -

இந்தியாவின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஐபிஎல் 2023 தொடரில் ஏப்ரல் 2ஆம் தேதியன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 2 போட்டிகளில் இரவு 7.30 மணிக்கு பெங்களூருவில் நடைபெற்ற 5வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. புகழ்பெற்ற சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் அந்தப் போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய மும்பைக்கு தடவலாக செயல்பட்ட இசான் கிசான் 10 (13) ரன்னில் அவுட்டாகி ஏமாற்ற அடுத்து வந்த 16 கோடி வீரர் கேமரூன் கிரீன் 5 (4) ரன்களில் அவுட்டாகி பின்னடைவை கொடுத்தார்.

அதை விட மறுபுறம் ரொம்பவே தடுமாறிய கேப்டன் ரோகித் சர்மா 1 (10) ரன்னில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுக்க பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நம்பிக்கை நட்சத்திரம் சூரியகுமார் யாதவ் 15 (16) ரன்களில் நடையை கட்டினார். அதனால் 48/4 என்ற மோசமான தொடக்கத்தை பெற்று திண்டாடிய மும்பையை அடுத்து ஜோடி சேர்ந்த திலக் வர்மா – நேஹல் வாதேரே ஆகியோர் அழுத்தத்திற்கு அஞ்சாமல் அதிரடியாக செயல்பட்டு 5வது விக்கெட்டுக்கு 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து ஓரளவு காப்பாற்றினர்.

- Advertisement -

மாஸ் காட்டிய ஆர்சிபி:
அதில் வாதேரே 1 பவுண்டரி 2 சிக்சருடன் 21 (13) ரன்களில் அவுட்டாக அடுத்து வந்த டிம் டேவிட் 4 (7), ரித்திக் ஷாக்கீன் 5 (3) என முக்கிய பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாகி மீண்டும் ஏமாற்றத்தை கொடுத்தனர். ஆனாலும் மறுபுறம் நங்கூரமாகவும் நேரம் செல்ல அதிரடியாகவும் செயல்பட்ட திலக் வர்மா பெங்களூருவுக்கு சிம்ம சொப்பனமாக மாறி தனி ஒருவனாக 9 பவுண்டரி 4 சிக்சருடன் 84* (46) ரன்கள் விளாசி அபார பினிஷிங் கொடுத்தார். அவருடன் அர்சத் கான் 15* (9) ரன்கள் எடுத்ததால் ஒரு கட்டத்தில் 100 ரன்களை தாண்டுமா என்று கருதப்பட்ட மும்பை 20 ஓவர்களில் 171/7 ரன்கள் எடுத்தது.

பெங்களூரு சார்பில் அதிகபட்சமாக கரன் சர்மா 2 விக்கெட்கள் எடுத்தார். அதைத்தொடர்ந்து 172 என்ற இலக்கை துரத்திய பெங்களூருவுக்கு நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி மற்றும் கேப்டன் டு பிளேஸிஸ் ஆகியோர் முதல் ஓவரிலிருந்தே அதிரடியை துவக்கி விரைவாக ரன்களை சேர்த்தனர். குறிப்பாக 2019க்குப்பின் தடுமாறிய கதைக்கு சமீபத்தில் முற்றுப்புள்ளி வைத்து முழுமையான ஃபார்முக்கு திரும்பிய விராட் கோலி தனது க்ளாஸ் நிறைந்த பேட்டிங்கை வெளிப்படுத்தி ஜோப்ரா ஆர்ச்சர் உள்ளிட்ட மும்பை பவுலர்களை அற்புதமாக எதிர்கொண்டு ரசிகர்களுக்கு விருந்து படைத்தார்.

- Advertisement -

அதே வேகத்தில் 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து தொல்லை கொடுத்த இந்த ஜோடி கேப்டன் ரோகித் சர்மா போட்ட அத்தனை திட்டங்களையும் தவிடு பொடியாக்கி அரை சதம் கடந்து மிரட்டியது. நேரம் செல்ல செல்ல அபாரமாக விளையாடி 148 ரன்கள் மெகா ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்த இந்த ஜோடி ஐபிஎல் வரலாற்றில் மும்பைக்கு எதிராக அதிக ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் ரன்கள் குவித்த  பெங்களூரு ஜோடியாக சாதனை படைத்து போது 5 பவுண்டரி 6 சிக்சடன் டு பிளேஸிஸ் 73 (43) ரன்கள் குவித்து வெற்றியை உறுதி செய்து அவுட்டானார்.

அடுத்து வந்த தினேஷ் கார்த்திக் டக் அவுட்டானாலும் கடைசி வரை அவுட்டாகாமல் சிம்ம சொப்பனமாக விளையாடிய விராட் கோலி 6 பவுண்டரி 5 சிக்ஸருடன் 82* (49) ரன்களும் கடைசி நேரத்தில் 2 சிக்சருடன் 12* (3) ரன்களும் எடுத்த கிளன் மேக்ஸ்வெல் சூப்பர் பினிஷிங் கொடுத்ததால் 16.2 ஓவரிலேயே 172/2 ரன்கள் எடுத்த பெங்களூரு 8 விக்கெட் வித்தியாசத்தில் அதிரடி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் என்ன தான் திலக் வர்மா தனி ஒருவனாக போராடினாலும் ரோகித் சர்மா, இஷன் கிசன் உள்ளிட்ட டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் தடவலாக செயல்பட்டது மும்பையின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

இதையும் படிங்க: IPL 2023 : 5 ஆண்டுகளாக ரோஹித் சர்மாவை தொடரும் சோகம் – இந்த ஆண்டு ஆரம்பத்திலும் சொதப்பல்

மறுபுறம் பந்து வீச்சில் ஆரம்பத்தில் அபாரமாக செயல்பட்ட புத்துணர்ச்சியுடன் பேட்டிங்கில் ஃபார்முக்கு விராட் கோலி மற்றும் டு பிளேஸிஸ் ஆகியோர் இணைந்து பெங்களூருவுக்கு அதிரடியான வெற்றியை பெற்றுக் கொடுத்து இந்த வருடத்தில் தங்களது முதல் கோப்பையை வெல்லும் லட்சிய பயணத்தை வெற்றியுடன் துவக்கியுள்ளனர். குறிப்பாக வெற்றிகரமான அணியாகத் திகழும் மும்பையை கடைசி 4 போட்டிகளில் தொடர்ந்து பெங்களூரு தோற்கடித்து வெற்றி நடை போட்டு வருகிறது.

Advertisement