ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரின் 70வது மற்றும் கடைசிப் போட்டி மே 27ஆம் தேதி லக்னோவில் நடைபெற்றது. அந்தப் போட்டியில் பெங்களூரு டாஸ் வென்று முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய லக்னோ 20 ஓவரில் அதிரடியாக விளையாடி 227-3 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக மிட்சேல் மார்ஷ் 67 (37) ரன்கள் அடித்தார்.
அவருடன் சேர்ந்து விளையாடிய கேப்டன் ரிஷப் பண்ட் இந்த வருடம் முதல் முறையாக அபாரமாகவும் அதிரடியாகவும் விளையாடி சதத்தை அடித்து 118 (61) ரன்கள் குவித்தார். அடுத்து விளையாடிய பெங்களூரு அணிக்கு 61 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல துவக்கத்தைக் கொடுத்த பில் சால்ட் 30 (19) ரன்களை விளாசி விக்கட்டை இழந்தார். மறுபுறம் விராட் கோலி நங்கூரமும் கலந்த அதிரடியை வெளிப்படுத்தினார்.
ஆர்சிபி மாஸ் வெற்றி:
ஆனால் எதிர்ப்புறம் ரஜத் படிதார் 14, லியம் லிவிங்ஸ்டன் 0 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தார். இருப்பினும் மறுபுறம் தொடர்ந்து அசத்தலாக விளையாடிய விராட் கோலி 10 பவுண்டரியுடன் 54 (30) ரன்கள் குவித்து முக்கிய நேரத்தில் ஆட்டமிழந்தார். அடுத்ததாக ஜோடி சேர்ந்த மயங் அகர்வால் மற்றும் கேப்டன் ஜிதேஷ் சர்மா ஆகியோர் மிடில் ஆர்டரில் லக்னோ பவுலர்களை அடித்து நொறுக்கினார்கள்.
குறிப்பாக ஜிதேஷ் சர்மா இரு மடங்கு வேகத்தில் விளையாடி அரை சதத்தை அடித்து தன்னுடைய அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்து வந்தார். அந்த வகையில் கடைசி வரை அவுட்டாகாமல் வெளுத்து வாங்கிய அந்த ஜோடியில் ஜித்தேஷ் சர்மா 85* (33) ரன்களை விளாசி ஃபினிஷிங் கொடுத்தார். அவருடன் அகர்வால் 41* (23) ரன்கள் எடுத்ததால் 18.4 ஓவரிலேயே 230-4 ரன்களை எடுத்த பெங்களூரு 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
சாதனை சேசிங்:
இதையும் சேர்த்து இந்த வருடம் வெளியூர் மண்ணில் விளையாடிய 7 போட்டிகளிலும் பெங்களூரு 7 வெற்றிகளை பெற்றுள்ளது. இதன் வாயிலாக ஒரு ஐபிஎல் தொடரில் 7 வெளியூர் போட்டிகளையும் வென்ற முதல் அணி அரிதான தனித்துவமான சாதனையை ஆர்சிபி படைத்துள்ளது. அத்துடன் ஐபிஎல் தொடரில் தங்களுடைய அதிகபட்ச இலக்கை வெற்றிகரமாக சேசிங் செய்து பெங்களூரு சாதனை படைத்துள்ளது.
இதையும் படிங்க: ஸ்ரேயாஸ் முதுகில் கொல்கத்தா மாதிரி இந்திய அணியும் குத்தலாமா? பஞ்சாப் ஹீரோவை பாத்து வளருங்க.. ஃகைப்
இதற்கு முன் 2010ஆம் ஆண்டு பஞ்சாப்புக்கு எதிராக 204 ரன்களை துரத்தியதே முந்தைய சாதனை. இந்த சாதனை வெற்றியால் புள்ளிப்பட்டியலில் 2வது இடத்திற்கு முன்னேறிய பெங்களூரு குவாலிபயர் 2 போட்டியில் பஞ்சாப்புடன் மோதுவதற்கு தகுதி பெற்றது. மறுபுறம் லக்னோ வில்லியம் ஓ’ரோர்க்கே 2 விக்கெட்டுகளை அதிகபட்சமாக எடுத்தும் லக்னோ ஆறுதல் வெற்றியைக் கூட பெறாமல் வெளியேறியது.



