
இந்தியாவில் 2026 மகளிர் டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகின்றது. அத்தொடரில் ஜனவரி 17ஆம் தேதி நவிமும்பையில் நடைபெற்ற 11வது போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. அப்போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.
அதைத் தொடர்ந்து களமிறங்கிய டெல்லி மகளிர் அணி 20 ஓவரில் போராடி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 166 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக ஷபாலி வெர்மா 62 (41), லூசி ஹமில்டன் 36 (18), ஸ்னே ராணா 22 (22) ரன்கள் எடுத்த போதிலும் மற்ற வீராங்கனைகள் 15 ரன்களை கூட தாண்டவில்லை.
பெங்களூரு அணிக்கு அதிகபட்சமாக சயாலி சாட்கரே 3, லாரென் பெல் 3, பிரேமா ராவத் 2 விக்கெட்டுகள் எடுத்தனர். அடுத்ததாக 167 ரன்களை துரத்திய ஆர்சிபி மகளிர் அணிக்கு கிரேஸ் ஹரிஷ் 1 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தார். இருப்பினும் மறுபுறம் கேப்டன் ஸ்மிருதி மந்தனா அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன் குவிப்பில் ஈடுபட்டார்.
அடுத்து வந்த ஜார்ஜியா வோல் நிதானம் கலந்த அதிரடியை வெளிப்படுத்தினார். நேரம் செல்ல செல்ல ஜோடி சேர்ந்து ரன்களை குவித்த அந்த ஜோடியை பிரிக்க முடியாமல் டெல்லி திணறியது. அந்த ஜோடியில் முதலாவதாக கேப்டன் மந்தனா 31 பந்துகளில் அரை சதத்தை அடித்து தமது அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்து வந்தார்.
தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் சதத்தை நெருங்கிய போது 13 பவுண்டரி 3 சிக்சருடன் 96 (61) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்துடன் சென்றார். இருப்பினும் மகளிர் ஐபிஎல் வரலாற்றில் அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த இந்திய வீராங்கனை என்ற சாதனையை மந்தனா படைத்தார். இதற்கு முன் 2024 சீசனில் மும்பை அணியின் கேப்டன் மற்றும் இந்திய வீராங்கனை ஹர்மன்ப்ரீத் கௌர் 95* ரன்கள் அடித்ததே முந்தைய சாதனை.
இதையும் படிங்க: ஐசிசி அண்டர்-19 உ.கோ: 67 ரன்ஸ்.. 11 வருட சாதனையை உடைத்த சூர்யவன்சி.. புதிய உலக சாதனை
இறுதியில் அவருடன் இணைந்து 142 பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்திய ஜார்ஜியா அரை சதமடித்து 54* (42) ரன்கள் குவித்தார். கூடவே ரிச்சா கோஸ் 7* (4) ரன்களை அடித்ததால் 18.2 ஓவரிலேயே 169/2 ரன்கள் எடுத்த ஆர்சிபி 8 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வென்றது. இதையும் சேர்த்து இந்த வருடம் விளையாடிய 4 போட்டிகளில் 4 வெற்றிகளைப் பெற்ற அந்த அணி பிளே ஆஃப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை 90% உறுதி செய்துள்ளது. மறுபுறம் ஜெமிமா தலைமையிலான டெல்லி போராடாமலேயே தோற்றது.