தமிழகத்துக்கு எதிராக மாஸ் காட்டிய ரவீந்திர ஜடேஜா – இந்திய அணியில் கம்பேக் உறுதியா? விவரம் இதோ

Ravindra Jadeja 7
- Advertisement -

இந்தியாவின் வரலாற்று சிறப்புமிக்க உள்ளூர் கிரிக்கெட் தொடரான ரஞ்சிக் கோப்பையின் 2022/23 சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. அதில் ஜனவரி 24ஆம் தேதியன்று எலைட் குரூப் பி பிரிவில் இடம் பிடித்துள்ள தமிழ்நாடு மற்றும் சௌராஷ்டிரா ஆகிய அணிகள் சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் துவங்கிய 119வது லீக் போட்டியில் மோதின. அந்த போட்டியில் சௌராஷ்டிரா அணிக்கு நட்சத்திர வீரர் ரவிந்திர ஜடேஜா கேப்டனாக களமிறங்கியது ஆரம்ப முதலே அனைவரது எதிர்பார்ப்புகளை எகிற வைத்தது. ஏனெனில் தற்சமயத்தில் உலகின் நம்பர் ஒன் சுழல் பந்து வீச்சு ஆல்ரவுண்டராக ஜொலிக்கும் அவர் 2022 ஆசியக் கோப்பையில் காயமடைந்து வெளியேறியது அந்த தொடரிலும் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பையிலும் இந்தியாவின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

அதை தொடர்ந்து காயத்திற்கு அறுவை சிகிச்சை மேற்கொண்ட அவர் முழுமையாக குணமடைவதற்கு முன்பாகவே குஜராத் தேர்தலில் தமது மனைவிக்காக பிரச்சாரத்தில் ஈடுபட்டதால் அதிருப்தியடைந்த பிசிசிஐ வரும் பிப்ரவரி மாதம் சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெறும் பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடரில் இந்தியாவுக்காக விளையாட குறைந்தது ஒரு உள்ளூர் போட்டியில் விளையாடி ஃபிட்னஸ் மற்றும் ஃபார்மை நிரூபிக்குமாறு நிபந்தனை விதித்தது. அதன் காரணமாக நீண்ட நாட்கள் கழித்து தனது மாநில அணிக்காக இப்போட்டியில் கேப்டனாக அவர் விளையாடி வருகிறார்.

- Advertisement -

மாஸ் பந்து வீச்சு:
அந்த நிலையில் துவங்கிய இப்போட்டியில் டாஸ் வென்ற தமிழகம் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து முதல் இன்னிங்ஸில் 324 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக சுதர்சன் 45, பாபா அபாரஜித் 45, பாபா இந்திரஜித் 66, விஜய சங்கர் 53, ஷாருக்கானன் 50 என முக்கிய வீரர்கள் தேவையான ரன்களை எடுத்த நிலையில் சௌராஷ்டிரா சார்பில் அதிகபட்சமாக யுவராஜ் சிங் டோடியா 4 விக்கெட்டுகள் எடுத்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரவீந்திர ஜடேஜா 24 ஓவரில் 48 ரன்களை மட்டும் கொடுத்தாலும் 1 விக்கெட் மட்டுமே எடுத்தார்.

அதை தொடர்ந்து களமிறங்கிய சௌராஷ்டிரா தமிழகத்தின் தரமான பந்து வீச்சில் 192 ரன்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக ஜானி 49 ரன்கள் எடுத்த நிலையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரவீந்திர ஜடேஜா 3 பவுண்டரியுடன் 15 (23) ரன்கள் மட்டுமே எடுத்தார். ஆனால் பொதுவாக தரமான ஆல் ரவுண்டர்கள் ஒன்றில் இல்லை என்றாலும் மற்றொரு துறையில் அசத்தி வெற்றியை பெற்றுக் கொடுப்பார்கள் என்று சொல்வார்கள். அதற்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக 132 ரன்கள் முன்னிலையுடன் களமிறங்கிய தமிழகம் 2வது இன்னிங்ஸ்சில் ரவீந்திர ஜடேஜாவின் மாயாஜால சுழலில் சிக்கி வெறும் 133 ரன்களுக்கு சுருண்டது.

- Advertisement -

குறிப்பாக சுதர்சன் 37, ஷாருக்கான் 2, பாபா இந்திரஜித் 28, ரஞ்சன் பால் 8, விஜய் சங்கர் 10 என 5 தரமான பேட்ஸ்மேன்களை சொற்ப ரன்களில் காலி செய்த ஜடேஜா அஜித் ராம் 7, சந்தீப் வாரியார் 4 என டெயில் எண்டர்களையும் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாக்கி மொத்தம் 17.1 ஓவரில் 3 மெய்டன் உட்பட 53 ரன்கள் கொடுத்து 7 விக்கெட்டுகளை சாய்த்து தமிழகத்தையும் சாய்த்தார் என்றே சொல்லலாம். ஏனெனில் இறுதியில் 266 என்ற இலக்கை துரத்தி வரும் சௌராஷ்ட்ரா 3வது நாள் முடிவில் 4/1 என்ற நிலையில் விளையாடி வருகிறது.

இன்னும் ஒருநாள் முழுமையாக எஞ்சியிருப்பதாலும் ஜடேஜா போன்ற தரமான வீரர் இன்னும் இருப்பதாலும் அந்த அணி வெல்வதற்கு வாய்ப்பு அதிகம் உள்ளது என்றே சொல்லலாம். ஏனெனில் பந்து வீச்சில் பார்முக்கு திரும்பி விட்ட ரவீந்திர ஜடேஜா பேட்டிங்கிலும் சிறப்பாக செயல்பட்டு வெற்றியை பெற்றுக் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: வீடியோ : இந்திய அணியினருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த தோனி, ஆலோசனைகளை ஆர்வமுடன் கேட்டறிந்த வீரர்கள்

முன்னதாக பிட்னெஸ் மற்றும் தற்சமய பார்ம் ஆகியன மட்டுமே இந்தியாவில் ஜடேஜா விளையாடுவதற்கான தடையாக இருந்தது. தற்போது அதில் இரண்டிலும் தரமாக உள்ளேன் என்று நிரூபித்துள்ள ஜடேஜா நவம்பர் 9ஆம் தேதி துவங்கும் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்கான வாய்ப்பு 99.99% உறுதியாகியுள்ளது என்றே கூறலாம்.

Advertisement