வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடைபெற்று வரும் 3வது போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் வென்ற இந்தியா 2வது போட்டியில் தோல்வியை சந்தித்தது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது. குறிப்பாக உலகக் கோப்பைக்கு இன்னும் 100 நாட்கள் கூட இல்லாத நிலைமையில் இந்தியா இன்னும் சோதனை முயற்சிகளில் ஈடுபட்டு வருவது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்துள்ளது. அதை விட அந்த போட்டியில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் ஓய்வெடுத்ததால் கிடைத்த வாய்ப்பை பொன்னாக மாற்ற தவறிய இளம் வீரர்கள் 90/0 என்ற நல்ல துவக்கத்தை பெற்றும் பலவீனமான வெஸ்ட் இண்டீஸ் அணியிடம் 181 ரன்களுக்கு சுருண்டு 2019க்குப்பின் முதல் முறையாக இந்தியாவுக்கு தோல்வியை பெற்றுக் கொடுத்தது ரசிகர்களுக்கு வேதனையாக அமைந்தது.
முன்னதாக சாதாரண இருதரப்பு தொடர்களில் மிரட்டலாக செயல்படும் இந்தியா அழுத்தமான நாக் அவுட் போட்டிகளில் சொதப்பி கடந்த 10 வருடங்களாக ஐசிசி தொடர்களில் தோல்வியை சந்தித்து வருகிறது. இந்த தோல்விகளுக்கு ரோகித் சர்மா, விராட் கோலி போன்ற முதுகெலும்பு வீரர்கள் முக்கிய தருணங்களில் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுப்பது முக்கிய காரணமாக இருந்து வருகிறது.
ஜடேஜாவின் பதில்:
அதிலும் குறிப்பாக டெஸ்ட் போட்டிகளில் அவுட் சைட் ஆஃப் ஸ்டம்ப் பந்துகளை கவர் டிரைவ் அடிக்கும் ஆசையில் எட்ஜ் கொடுத்து அவுட்டாவதை வழக்கமாக வைத்துள்ள விராட் கோலி அதே பாணியில் 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் அவுட்டானது தோல்விக்கு முக்கிய காரணமானது. அதனால் ஏமாற்றமடைந்த முன்னாள் ஜாம்பவான் வீரர் சுனில் கவாஸ்கர் முன்பெல்லாம் சச்சின், டிராவிட், லக்ஷ்மன், சேவாக் போன்ற மகத்தானவர்கள் தம்மிடம் தடுமாற்றமான நேரங்களில் ஆலோசனை கேட்பார்கள் என்றும் இப்போதுள்ள விராட் கோலி போன்ற நட்சத்திரங்கள் ஈகோ காரணமாக எதையும் கேட்பதில்லை என்றும் கூறியிருந்தார்.
அதற்கு ஐபிஎல் தொடரில் விளையாடி கிடைத்துள்ள பணத்துடன் தங்களுக்கு அனைத்தும் தெரியும் என்ற திமிராலயே அவர்கள் ஆலோசனை கேட்பதில்லை என்று கபில் தேவ் சமீபத்தில் விமர்சித்திருந்தார். இந்நிலையில் இந்தியா தோற்கும் போது இது போன்ற விமர்சனங்கள் வருவது சகஜம் என்று அவர்களுக்கு பதிலளிக்கும் ரவீந்திர ஜடேஜா 2023 ஆசிய மற்றும் உலக கோப்பைக்கு முன்பாக வேறு போட்டியில்லாததால் இத்தொடரில் கடைசி முறையாக இந்திய அணி நிர்வாகம் சோதனைகள் செய்வதாக தெளிவுபடுத்தியுள்ளார்.
மேலும் 3வது போட்டியில் நிச்சயமாக போராடி வெல்வோம் என்று நம்பிக்கை தெரிவித்த அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “இதை அவர் (கபில்) எப்போது சொன்னார் என்று எனக்கு தெரியாது. ஏனெனில் இதை நான் சமூக வலைதளங்களில் தேடுவதில்லை. இருப்பினும் யார் என்ன சொன்னாலும் அது அவர்களுடைய கருத்தாகும். குறிப்பாக முன்னாள் வீரர்கள் தங்களுடைய கருத்தை தெரிவிப்பதற்கான உரிமை உள்ளது. ஆனால் அதற்காக இந்திய அணியில் இருப்பவர்களிடம் திமிர் இருப்பதாக எனக்கு தெரியவில்லை”
“மாறாக அனைத்து வீரர்களும் கடினமாக உழைத்து கிரிக்கெட்டை மகிழ்ச்சியுடன் விளையாடுகின்றனர். அவர்கள் எப்போதுமே தங்களுடைய 100% உழைப்பை கொடுக்கின்றனர். எனவே இந்தியா தோல்விகளை சந்திக்கும் போது இது போன்ற விமர்சனங்கள் வருவது சகஜமாகும். ஆனால் நல்ல வீரர்களை கொண்டுள்ள நாங்கள் சொந்த விருப்பு வெறுப்புகளை பார்க்காமல் இந்தியாவுக்காக வெற்றியை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்ற 100% எண்ணத்துடன் விளையாடுகிறோம். மேலும் கேப்டன் மற்றும் பயிற்சியாளர்கள் எந்த மாதிரியான வீரர்கள் தேவை என்பதை அறிவார்கள்”
இதையும் படிங்க:வீடியோ : ஓவரா சிரிக்காதிங்க, ரிக்கி பாண்டிங்கை நேரலையில் கலாய்த்த டிகே – கணிப்பு நிஜமானதால் ரசிகர்கள் வியப்பு
“அதனால் அணியில் எந்த குழப்பமும் இல்லை. மேலும் ஆசிய கோப்பைக்கு முன்பாக நமக்கு போட்டிகள் இல்லை என்பதால் இந்த சோதனைகளை செய்வதை பற்றி முன்கூட்டியே முடிவெடுத்துள்ளோம். அதனால் 2வது போட்டியில் சந்தித்த தோல்வியால் நாங்கள் ஏமாற்றத்தை சந்திக்கவில்லை. ஏனெனில் அது சோதனைகளால் வரவில்லை மாறாக சூழ்நிலையால் வந்தது. அத்துடன் இந்த தொடரில் தான் நாங்கள் பயமின்றி சோதனைகளை செய்ய முடியும். குறிப்பாக இளம் வீரர்களுக்கு சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடுவதற்கான வாய்ப்புகளும் அவசியமாகும். எனவே 3வது போட்டியில் நாங்கள் வெல்வதற்கு முயற்சிப்போம்” என்று கூறினார்.