இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதும் 3வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் ஜூலை 10ஆம் தேதி துவங்கியது. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்துக்கு துவக்க வீரர்கள் ஜாக் கிராவ்லி 18, பென் டக்கெட் 23 ரன்களில் நித்திஷ் ரெட்டி வேகத்தில் பெவிலியன் திரும்பினர்.
அடுத்ததாக ஜோடி சேர்ந்த ஜோ ரூட் மற்றும் ஓலி போப் ஆகியோர் நிதானமாக விளையாடி சவாலைக் கொடுத்தனர். 3வது விக்கெட்டுக்கு 109 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த அந்த ஜோடியில் ஓலி போப் 44 ரன்னில் ஜடேஜா சுழலில் சிக்கினார். அடுத்து வந்த ஹாரி ப்ரூக் 11 ரன்கள் எடுத்திருந்த போது பும்ரா வேகத்தில் போல்டானார்.
ஆசை காட்டிய ஜடேஜா:
மறுபுறம் தொடர்ந்து அசத்தலாக விளையாடிய ஜோ ரூட் அரை சாதத்தை கடந்து ரன் குவிப்பில் ஈடுபட்டார். அவருடன் ஜோடி சேர்ந்த பென் ஸ்டோக்ஸ் மிகவும் நங்கூரமாக விளையாடினார். இந்தப் பக்கம் தொடர்ந்து அசத்திய ரூட் முதல் நாளிலேயே சதத்தை நெருங்கியதால் இங்கிலாந்து ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்தனர். அப்போது ஆகாஷ் தீப் வீசிய கடைசி ஓவரில் அவர் சதத்தை அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
அந்த ஓவரின் 2வது பந்தில் டபுள் எடுத்த ரூட் 98 ரன்னை தொட்டார். 3வது பந்தில் சிங்கிள் எடுக்காத அவர் 4வது பந்தில் டபுள் ரன்கள் எடுக்க முயற்சித்தார். அப்போது பவுண்டரி எல்லையில் பந்தை தடுத்த ஜடேஜா தூக்கி எறியாமல் கையில் வைத்துக் கொண்டு “100வது ரன்னை எடுக்க வாருங்கள்” என்று சிரித்துக் கொண்டே கையில் சைகைக் காட்டினார். அத்துடன் குனிந்து தரையில் பந்தை போட்ட ஜடேஜா “இலவசமாகவே ரன்கள் தருகிறேன் ஓடுங்கள்” என்ற வகையில் ரூட்டுக்கு சிக்னல் கொடுத்தார்.
விழாத ரூட்:
மறுபுறம் ஆசைக் காட்டி விளையாடிய ஜடேஜாவை பார்த்து சிரித்த ஜோ ரூட் ரன் அவுட் வலையில் விழாமல் நின்று கொண்டார். இறுதியில் நிறைவுக்கு வந்த முதல் நாளில் இங்கிலாந்து 251/4 ரன்கள் எடுத்துள்ளது. களத்தில் ஜோ ரூட் 99*, கேப்டன் ஸ்டோக்ஸ் 39* ரன்களுடன் உள்ளார்கள். அதனால் ரூட் தன்னுடைய சதத்தை அடிக்க இரண்டாவது நாள் வரை காத்திருக்க வேண்டியுள்ளது.
இதையும் படிங்க: இந்திய நாட்டுக்காக விளையாடும் நீங்க ஒன்னும் சுற்றுலா வரல.. விராட் கோலியின் அதிருப்திக்கு கம்பீர் பதிலடி
வரலாற்றில் ஒரு நாளின் முடிவில் 99* ரன்களில் அவுட்டாகாமல் இருந்த 6வது இங்கிலாந்து வீரராக ஜோ ரூட் களத்தில் இருக்கிறார். இன்றைய நாளில் அவர் சதத்தை அடிப்பதற்கு பிரகாச வாய்ப்புள்ளது. மறுபுறம் இங்கிலாந்தை 350 ரன்களுக்குள் சுருட்டுவதற்கு இந்திய அணி முயற்சிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.



